வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அல்முபீன் பிறை ஓர் ஆய்வு, அந்நஜாத்தின் அலசல்-5

  • சூரியன் சந்திரனுக்கிடையே பாரபட்சம் ஏன்?

சூரியனின் உதயம், மறைவு அடிப்படையில் நிறை வேற்றும் தொழுகைகளை அந்தக் காலத்தில் நேரங்காட்டும் கருவிகள் இல்லாத காலத்தில் நேரடியாக உதயம், உச்சி, அஸ்தமனம் இவற்றை நேரடியாகப் பார்த்து நேரத்தைக் கணித்தது போல் இப்போதும் கணிக்க வேண்டியதுதானே? அதில் மட்டும் எப்படி வானியல் அறிஞர்களின் கணிப்புப்படியுள்ள கடிகாரத்தை ஏற்றுச் செயல்படுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக,

அல்முபீன்: “சூரியன் மறைந்தவுடன் மஃரிபு தொழ வேண்டும் என்பதுதான் நபி(ஸல்) அவர்கள் இட்ட கட்டளையாகும். சூரியன் மறைந்து விட்டது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து எந்த உத்தரவையும் நபி(ஸல்) இடவில்லை. எனவே சூரியன் மறைந்து விட்டதை எந்த வகையில் உறுதி செய்யப்பட்டாலும் நாம் நபி(ஸல்) அவர்களின் எந்தக் கட்டளையையும் மீறுபவர்களாக மாட்டோம். ஆனால் பிறை விஷயத்தில் மாதத்தின் முதல் பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் தீர்மானிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்ட பின்னர் பிறையை கண்ணில் காணாத நிலையில் , வானியல் கண்டுபிடிப்பின்படியோ அல்லது வேறு எந்த வகையிலோ மாதத்தின் முதல் தினத்தை தீர்மானித்தால், அது நபி(ஸல்) அவர்களின் தெளிவான கட்டளைகளை மீறிய மாபெரும் குற்றமாகும். (பக். 85)

அந் நஜாத்: தங்களின் வழமையான வார்த்தை ஜாலங்களைக் கொண்டு மக்களிடையே ஒரு மயக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். ஏதோ அல்லாஹ்வின் கட்டளைக்கும், நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கும் அப்படியே அடிபணிவது போலும், இந்த பிறை விஷயத்தில் அவர்கள் கட்டளையை மீறுவது மாபெரும் குற்றம் என்று மக்களை பீதியடையச் செய்து இருக்கிறார்கள்.

சூரியன் மறைந்தவுடன் மஃரிபு தொழ வேண்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்களே அல்லாமல் சூரியன் மறைவதைப் பார்த்து மஃரிபு தொழுங்கள் என்று கட்டளையிடவில்லை என்பதே அவர்களின் வாதம். அதற்கு மாறாக பிறையைப் பார்த்தே நோன்பு வைக்கச் சொல்லி கட்டளையிட்டதும் உண்மையே. ஆனால் பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் எழுதி இருப்பது போல் ஒரு போதும் நபி(ஸல்) கட்டளையிடவில்லை . அப்படி கட்டளையிட்டிருந்தால் அன்றைய முஸ்லிம்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள், சிரார்கள் அனைவரும் ஒருவர் கூட விடாமல் கண்ணால் பார்த்துத்தான் நோன்பு நோற்றிருப்பார்கள். அப்படி ஓரே ஒரு ஆதாரத்தைக் கூட அவர்களால் தர முடியாது. பார்த்தவர்களின் தகவலை ஏற்றும் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற ஆதாரங்களை அவர்களும் மறுக்க முடியாது. இது அவர்கள் தங்கள் வாதத்தை நிலைநிறுத்த மிகைப்படக் கூறும் கூற்றாகும்.

இப்போது நடுநிலையோடு சந்திப்போம். சூரியன் உதயத்தையும், மறைவையும் வருடம் 365 நாட்களும் சர்வ சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெரும் முயற்சி எடுத்து பார்க்கும் ஒரு செயல் அல்ல. சாதாரணமான விஷயம். அவர்களே எழுதியிருப்பது போல் “சூரியன் மறைந்தவுடன்” என்று கூறியிருப்பதன் பொருள் என்ன? அன்று சூரியனைப் பார்த்து அறிந்து கொள்வதைத்தான் நபி(ஸல்) குறிப்பிட்டிருக்க முடியும். வேறு எந்த வகையிலும் அறிந்து கொள்வதை நபி(ஸல்) அன்று கூறி இருக்கவே முடியாது. அங்கும் பார்க்கும் நிலை இருக்கவே செய்தது. ஆனால் சூரியன் விஷயத்தில் பார்க்கும்படி சொல்லாததற்கும், பிறை விஷயத்தில் பார்க்கும்படி சொன்னதற்கும் அவர்கள் பொருள் கொண்டதுதான் தவறாகும். சொன்னபடி செய்யும் சுப்பன் என்ற வேடிக்கை கதை ஒன்றுண்டு. அது போன்ற சுப்பர்களாகத்தான் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் இருக்கிறார்கள்.

சூரியன் உதயம், அஸ்தமனம் சர்வசாதாரணமாக தெரிவது. பார்க்கும் ஏவலுக்கோ, கட்டளைக்கோ அங்கு வேலை இல்லை. ஆனால் மாதத்தின் தலைப்பிறை தெரிவது சாதாரண ஒரு விஷயமல்ல. அந்த பிறைக் கீற்றை உரிய நேரத்தில் சரியான இடத்தில் மிக அக்கறையுடன் மிக உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே தெரியும். சந்திரனின் தலைப்பிறைக்குமக் சூரியனின் உதய அஸ்தமனத்திற்கும் பார்வையில் இந்த அளவ வித்தியாசமிருக்கிறது. அக்கறை எடுத்து பார்த்தால் அல்லாமல் தலைப்பிறை தெரிய வாய்ப்பே இல்லை. சூரியனின் உதயத்தையும் மறைவைவும் பார்க்க எந்த முயற்சியுயம் தேவையில்லை. சாதாரணமாக பார்த்தால் எல்லோர் கண்ணுக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிவது. ஆனால் தலைப்பிறையோ கூர்ந்து பார்த்தால் கூட சிலரது கண்ணுக்குத் தெரியவதில்லை. மேகக்கீற்றைக் கூட சிலர் தலைப்பிறை என்று தவறாக எண்ணி விட முடியும். சூரியனுக்கு தினசரி உதித்து மறையும் தன்மையே இருக்கிறது. ஆனால் பிறைக்கோ வளர்ந்து தேயும் தன்மை இருக்கிறது. தலைப்பிறை என்பதே வளைந்த ஒரு சன்னக் கீற்றைப் போன்றதுதான். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் தலைப்பிறையைப் பார்த்து நோன்பு நோற்க சொன்னார்களே அல்லாமல், மற்றபடி பிறையைக் கண்ணால் பார்ப்பது ஒரு கண்டிப்பான கடமை -இபாதத் என்ற நோக்கத்தில் அல்ல என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் உணர வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கண்ணால் பார்த்தே நோன்பு நோற்கச் சொன்னார்கள் என்று அழுத்தம் கொடுப்பவர்கள், நபி(ஸல்) தகவலை அறிந்தும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை ஏன் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்களா? இதுதான் அவர்கள் நபி(ஸல்) அவர்களின்ன கட்டளைப்படி நடக்கும் லட்சணமா?

அவர்களது வாதத்திற்கு முரணாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் நபி(ஸல்) தகவலைப் பெற்று செயல்பட்டார்கள் என்பதைக் கொச்சைப்படுத்துகிறார்கள் . அதாவது தகவலை ஏற்றிருக்கிறார்கள். ஆனால் அது உள்ளூர் தகவல், வெளியூர் தகவலை ஏற்கவில்லை என்று கூறுவார்களேயானால், இது அவர்களது சொந்த யூகமே அல்லாமல் நபி(ஸல்) அவர்கள் வெளியூர் தகவலை ஏற்கக் கூடாது என்று தடைவிதித்த ஒரு ஆதாரத்தைக் கூட இவர்களால் காட்ட முடியாது. வாகனக் கூட்டத்தார் விஷயமாக இவர்கள் சரடு விட்டதைப் பல ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளோம். எனவே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இவர்களின் வாதத்தை ஏற்க மாட்டார்கள். எப்படி பிறை பார்த்து செயல்பட சொன்னார்களோ, அதே தொணியில் அதே அந்தஸ்தில் தகவலை அறிந்து செயல்படுவதற்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளனர் என்பதே குர்ஆன், ஹதீஸுக்கு நெருக்கமான முடிவாகும்.

அல்முபீன்: இரண்டு நாள் வித்தியாசம் ஏன்? என்ற தலைப்பில் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம், அஸ்தமனம், ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம்.

அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரைமணி நேரம் கழித்து சூரியன் மறையும். இது சூரிய கணக்கு. இதைப் பிறை தென்படுவதற்கு அளவுகோளாக எடுக்க முடியாது. (பக். 100)

அந் நஜாத்: ‘சூரிய கணக்கை பிறை தென்படுவதற்கு அளவு கோளாக எடுக்க முடியாது’ என்று கூறுகிறவர்கள், சூரிய கணக்கின் படியுள்ள தேதியையும், கிழமையும், சர்வதேச தேதிக் கோட்டையும் போட்டுக் குழப்பி பல பக்கங்களை வீணடித்து மக்களையும் குழப்பி இருக்கிறார்களே? இரண்டு நாள் தலைப்பிறை இருக்க முடியும் என்பதை நிலைநாட்டத்தானே இத்தனை முயற்சி? இவர்களுக்குத் தேவை என்றால் சூரிய கணக்கு, அதனடிப்படையிலான தேதி, கிழமை, சர்வதேச தேதிக்கோடு இவை அனைத்தையும் எடுத்துக் கொள்வார்களாம். அவற்றை ஆதாரமாக வைத்து பல பக்கங்கள் எழுதுவார்களாம். ஆனால் மாற்றுக் கருத்துடையோர் மட்டும் சூரியக் கணக்கை பிறை விஷயத்தில் எடுக்கக் கூடாது. இந்த நீதியை எந்த குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்தார்கள்? அதாவது தனக்கொரு சட்டம், பிறருக்கொரு சட்டம் என்பதை எங்கிருந்து எடுத்தார்கள். சவூதியில் 6.30 மணிக்கு பிறை தென்பட்டால் இந்தியாவிலும் 9 மணிக்குப் பிறை தெரியும் என்று எந்த மடையன் வாதிட்டான்? அது சாத்தியமில்லை என்பதை விளக்க பல பக்கஙகளை வீணடித்திருக்கிறார்களே!

அல்முபீன்: தலைப்பிறையை இரவு ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது (பக். 100)

அந் நஜாத்: இந்த மாபெரும் தத்துவத்தை இவ்வளவு ஆய்வுக்குப் பிறகு கண்டுபிடித்து யாருக்குச் சொல்ல வருகிறார்கள்? 9 மணிக்குப் பார்க்க முடியாதாம். அடுத்த நாள் மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத்தான் பார்க்க முடியுமாம். அதனால் அதன் பின்னர்தான் நோன்பை ஆரம்பிக்க வேண்டுமாம். இத்தனை மவ்லவிகள், வானியல் அறிஞர்கள்(?) 152 கிதாபுகளை புரட்டி ஆய்வு செய்தவர்கள் மாற்றுக் கருத்துடையோரின் வாதம் என்ன என்பதையாவது முதலில் முழுமையாக அறிந்து கொண்டார்களா? வெட்கக் கேடு! அவர்கள் மாற்றுக் கருத்துடையோரின் வாதத்தை மீண்டும் இப்போதாவது தெளிவாக புரிந்துக் கொள்ளட்டும்.

சவூதியில் மஃரிபுடைய நேரத்தில் பிறை பார்த்து அந்த தகவல் அன்றை இரவுப் பொழுதில் இருப்பவர்களுக்கு கிடைத்தால் , அவர்களும் அந்த ரமழானின் நோன்பை ஆரம்பிக்க வேண்டும். ஷவ்வாலில் விட வேண்டும். அவர்கள் பிறையைப் பார்த்து அல்லது பிறை இருக்கும் சாத்தியக் கூற்றை விளங்கி தலைப்பிறையை ஏற்கவில்லை. தகவலை வைத்துத்தான் எடுத்துள்ளார்கள். எனவே பிறை பார்க்க சாத்தியமே இல்லை என்ற அவர்களது ஹிமாலயக் கண்டுபிடிப்பு தகவலை ஏற்றுச் செயல்படுகிறவர்களுக்கு அவசியமே இல்லை. அவர்கள் ரமழான் நோன்பை ஆரம்பிப்பது அல்லது ஷவ்வாலில் விடுவது பிறையைப் பார்த்து மட்டும் அல்ல; வெளியிலிருந்து கிடைக்கும் தகவலை வைத்தே நோன்பு வைக்கிறார்கள். அல்லது விடுகிறார்கள். பிறையைக் கண்ணால் பார்த்து வைப்பதும் ஒன்றுதான்; பிறை பார்த்த தகவல் கிடைத்து வைப்பதும் ஒன்றுதான். நபி(ஸல்) இவற்றிக்கிடையே எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை. அதற்குரிய ஒரு ஆதாரத்தையும் யாராலும் தர முடியாது; தரக்கூடிய ஆதாரம் அந்த பகுதிகளில் பிறையை கண்ணால் பார்க்கும் வாய்ப்பில்லை என்ற இந்த புரோகிதர்களின் சொந்த யூகமே அல்லாமல் வேறில்லை. இவர்களின் இந்த யூகம் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்திலும், பூமி, சந்திரன், சூரியன் இவற்றின் சுழற்சியின் அடிப்படையிலும் கால்காசு பெறாது. எனவே இதன் பிறகும் அவர்கள் தங்களின் வாதங்களில் பிறை கண்ட ஊருக்கு கிழக்கிலுள்ளவர்கள் பிறையை அன்றிரவு பார்க்கும் வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் பிறைத் தகவலை ஏற்கக் கூடாது என்ற குருட்டு வாதத்தை வைப்பார்களானால், அவர்கள் மக்களை குழப்பும் நோக்கத்திலேயே செயல்படுகிறார்கள் என்பதை அவர்களை நம்பியிருப்பவர்கள் அறிந்து கொள்வார்களாக.

எத்தனை லைலத்துல் கத்ர்?

“லைலத்துல் கத்ர்” ஓரே நாளில்தான் வர முடியும். அதுவும் ஒற்றைப்படை நாளில்தான் வரமுடியும். தலைப்பிறை இரண்டு நாட்களில் வரமுடியுமென்றால் ‘லைலத்துல் கத்ர்’ இரவும் இரண்டு நாட்களில் வரவேண்டும். ஆனால் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ர் இரவு ரமழான் மாதத்தின் ஒரே ஒரு இரவில் தான் வரும். அதுவும் மஃரிபிலிருந்து பஜ்ர் நேரம் வரை மட்டுமே நீடிக்கும் என்று மிகத் தெளிவாகக் கூறி இருக்கிறான் என்ற பொருள் பொதிந்த கேள்விக்கு என்ன விடையளித்துள்ளார்கள் பாருங்கள்.

அல்முபீன்: லைலத்துல் கத்ர் என்பது இருபதாம் நூற்றாண்டின் நவீன கண்டுபிடிப்பு அல்ல. நபி(ஸல்) அவர்கள் காலம் முதல் உலகம் உள்ள வரை இந்த உம்மத்துக்கு இறைவன் அளித்த பாக்கியம்; இதை முதலில் கவனத்தில் கொள்க.

லைலத்துல் கத்ர் என்றால் கத்ருடைய இரவு என்று தான் பொருள். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும் . பகல் எப்படி லைலத்துல் கத்ர் ஆகும்? அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத்தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது. உங்கள் வாதப்படியே ஒரே நேரத்தில் லைலத்துல் கத்ர் வரக்காணோமே, உங்கள் வாதப்படி ஒரே நேரத்தில் லைலத்துல் கத்ர் எப்படி வரும் என்பதை கொஞ்சம் விளக்கிக் காட்டுங்கள்.

நபி(ஸல்) காலத்தில் மதீனாவில் ஒரு நாளும், மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளர். பயணிகள் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.

நாம் கேட்கிறோம். முதலில் பிறை பார்த்தால் அதுதான் முதல் பிறை. அவர்கள் கணக்குப்படி ஒற்றைப் படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபி(ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா?

அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான். முஸ்லிம்கள் பரந்துவிரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்கு தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து, மறு சாரார் அடையமாட்டார்கள் என்பது தான் பொருளா?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலத்துல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும்.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப் படையும் வரத்தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது. (அல்மூபீன் நவ. – டிச. 99. பக். 103-104)

இந்த அவர்களின் வாதத்தில் ஓர் அபத்தத்தையும் ஒரு சில நியாயமான சந்தேகங்களையும் 2:185 ஆயததை முறை தவறி விளங்கிக் கொண்டதால் அவர்களின் உள்ளத்தில் உறைந்திருக்கும் கோளாறின் அடிப்படையிலும் பக்கங்களை நிரப்பி இருக்கிறார்கள்.

லைலத்துல் கத்ர் 20-ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. நபி(ஸல்) அவர்கள் காலம் முதல் உலகம் அழியும் வரை அல்லாஹ் இந்த உம்மத்துக்கு கொடுத்த பாக்கியம்தான். அதிலும் இருவேறு கருத்தில்லை. இங்கே இரவு என்றால் அமெரிக்காவில் பகல். அவர்கள் எப்படி லைலத்துல் கத்ரை ஒரே நேரத்தில் அடைய முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.இந்தியாவில் லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத்தான் அமெரிக்காவில் லைலத்துல்கத்ர் ஏற்படுகிறது என்ற அபத்தமான கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். பகலாக இருக்கும் அமெரிக்காவில் அடுத்து 24 மணி நேரம் கழித்து மீண்டும் பகலாகத்தான் இருக்கும். இரவாக இருக்காது. அமெரிக்கா அதிகாலை 6 மணியிலிருந்தாலும் கூட 12 மணி நேரம் ஆகாது. இத்தனை மவ்லவிகளுக்கும், வானியல் அறிஞர்களுக்கும் (?) இந்த வெகு சாதாரண நடப்பு கூட தெரியவில்லை என்னும்போது, இவர்களது ஆய்வு எப்படி மக்களுக்கு வழிகாட்டும்? அது மட்டுமா? உங்கள் வாதப்படி ஒரே நேரத்தில் லைலத்துல் கத்ர் எப்படி மக்களுக்கு வழிகாட்டும்? அது மட்டுமா? உங்கள் வாதப்படி ஒரே நேரத்தில் லைலத்துல் கத்ர் எப்படி வரும் என்பதைக் கொஞ்சம் விளக்கிக் காட்டுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இது நியாயமான கேள்வி தான். ஆயினும் இதிலும் ஓர் அபத்தம் இருக்கிறது. உலகம் முழுவதும் இடம் பெற்றுவிடும் என்று தான் கூறுகிறொம்.பூமியின் சுழற்சியை முறையாக அறியாதிருப்பதால் இந்தக் கேள்வி அவர்களுக்கு எழுந்துள்ளது. பிறை பிறந்தவுடன் அதைப் பார்த்தவர்களும் அந்தம தகவலை அறிந்து அந்த இரவில் இருந்தவர்களும் நோன்பை ஆரம்பித்து விடுவதாலும், அன்று ஷஃபானின் இறுதிப் பகலில் இருந்தவர்கள் ரமழான் இரவை அடைந்து விடியும் போது நோன்பை ஆரம்பித்து விடுவதாலும், எப்படி ஓரே நாளில் நோன்பையும் அதுபோல் லைலத்துல் கத்ரையும் அடைந்து இருக்கிறோம். எனவே அது புரிந்திருக்கும். உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நோன்பு நோற்கவும் மாட்டார்கள். நோன்பு திறக்கவும் மாட்டார்கள். ஒரே நேரத்தில் லைலத்துல் கத்ரை அடையவும் மாட்டார்கள் என்பதை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

பூமியின் சுழற்சி காரணமாக ஒரு சாரார் ஸஹர் செய்வர், ஒரு சாரார் நோன்பு துறப்பர். இது 24 மணி நேரமும் தொடர்ந்து கொண்டிருக்கும். அதே போல் முதலில் நோன்பை ஆரம்பித்தவர்கள் லைலதுல் கது்ர் இரவின் நாளில் அந்த இரவில் முதலில் நுழைவார்கள் அவர்களைத் தொடர்ந்து 1 இரவு + 1 பகல் = நாள் அவகாசத்தில் பூமியிலுள்ள அனைவரும் லைலதுல் கத்ர் இரவில் நுழைந்து விடுவார்கள் என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறொம்.

நபி(ஸல்) காலத்தில் அந்தந்த ஊரில் பிறை பார்த்து நோன்பு வைத்ததால் வெவ்வேறு நாட்களிளல் தானே நோன்பை ஆரம்பித்தார்கள். எனவே மாறுபட்ட நாட்களிலேதான் அவர்கள் ஒற்றைப்படை நாட்களை அடைந்திருக்க முடியும். அன்று அவர்களுக்கு மாறுபட்ட நிலையிலும் லைலத்துல் கத்ர் இரவை அளித்தது போல் இன்று நமக்கும் அல்லாஹ் அளிக்க மாட்டானா? என்பதே அவர்களது கேள்வி. உண்மைதான். அளிப்பான்!; எப்போது? அன்றிருந்தது போல் மற்ற ஊர்களில் பிறை பார்த்த தகவல் கிடைக்காத சூழ்நிலை இருந்தால், ஆனால் இன்று அந்த நிலை இல்லை. எங்கு பிறை தென்பட்டாலும் அடுத்த நிமிடமே உலகம் முழுவதும் தகவல் தெரிந்து விடும் அளவுக்கு பூமி சுருங்கி விட்டது. தகவல் அறிந்து நோன்பு நோற்பதும் நபி வழிதான். தகவலைப் புறக்கணிப்பவர்கள் நபி(ஸல்) வழியை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலையில் பிறை பிறந்த தகவல் ஆதாரப்பூவமாக கிடைத்தும் அதை உதாசீனம் செய்து விட்டு, நோன்பு நோற்பதை காலதாமதம் செய்தால் அதையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்பதுதான் எமது கேள்வி. அன்று பிறைத் தகவல் மற்ற ஊர்களுக்கு கிடைக்க முடியாதிருந்து சூழ்நிலை போல், ஒருவர் இறந்த செய்தியும் உடனடியாகக் கிடைக்க முடியாமலேயே இருந்தது. அதனால்தான் அன்று ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் அங்கு இறந்து விட்டால், அந்த தகவல் உடனடியாக கிடைக்காமல் காலம் தாழ்த்தி கிடைத்தது. அந்த தகவல் கிடைத்த பின்னரே அவரது மனைவி “இத்தா” இருக்கும் நிலை இருந்தது. இதை அவர்களால் மறுக்க முடியுமா? அன்று அல்லாஹ் அந்த பெண்ணின் இத்தாவை ஏற்றுத்தான் இருப்பான். காரணம் உடனடியாக அறிந்து கொள்ளும் தகவல் தொடர்பு இருக்கவில்லை. ஆனால் தகவல் தொடர்பு உள்ள இன்று தகவல் கிடைத்தவுடன் அந்தப் பெண் இத்தா இருக்க மறுத்து அன்றைய கால நிலவரத்தைக் கூறினால் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் ஏற்பார்களா? பிறை விஷயத்தில் அன்றைய நடைமுறையைத்தான் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள், இந்த இடத்திலும் அன்றைய நடைமுறையை ஏற்க வேண்டுமே? ஏன் ஏற்பதில்லை. “இத்தா” விஷயத்தில் தெளிவான அவர்களது அறிவு இந்த பிறை விஷயத்தில் தெளிவடையவில்லையா? காரணம் என்ன?

பிறை விஷயத்தில் அன்று தகவல் கிடைக்கவழி இருக்கவில்லை. “இத்தா” விஷயத்திலும் அன்று தகவல் கிடைக்க வழி இருக்கவில்லை. எனவே அன்று நாள் தவறி நோன்பு நோற்றவர்களின் நோன்பையும் அல்லாஹ் அங்கீகரிகத்தான்; லைலதுல் கத்ர் பாக்கியத்தையும் கொடுத்தான். அதே போல் நாள் தவறி இத்தா இருந்த பெண்ணின் இத்தாவையும் ஏற்றுக் கொண்டான் அல்லாஹ். ஆனால் தகவல் கிடைக்கும் இக்காலத்தில் எப்படி “இத்தா” இருக்க மறுக்கும் பெண்ணின் கூற்றை அல்லாஹ்வும் ஏற்க மாட்டானோ; அறிவுடையவர்களும் ஏற்க மாட்டார்களோ, அதே போல் பிறைத்தவகல் கிடைத்தும் அதை மறுத்து நாள் தவறி நோன்பு பிடிக்கும் செயலையும் அல்லாஹ்வும் ஏற்க மாட்டான்; அறிவுடையவர்களும் ஏற்க மாட்டார்கள். லைலதுல் கத்ர் பாக்கியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது என்பதுதான் உண்மையாகும். தகவல் கிடைக்க வழியே இல்லாத அக்கால செயல்பாடுகளோடு, தகவல் கிடைக்கும் இக்கால செயல்பாடுகளை பிறை விஷயத்திலும், இத்தா விஷயத்திலும் ஒரு போதும் இணைத்துப் பேசக் கூடாது என்பதை இந்த தவ்ஹீது மவ்லவிகள் அறிந்து கொள்வார்களாக.

மக்காவைப் புற்க்கணிக்கலாமா? என்ற தலைப்பில் எழுதுவதைப் பாருங்கள்.

அல்முபீன்: மக்கா என்பது உம்முல் குரா என்பதிலும், கஃபா தான் உலகம் முழுவதற்கும் கிப்லா என்பதிலும், ஹஜ் செய்வதற்கு அங்குதான் செல்ல வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்த சந்தேகமுமில்லை. ஏன் கஃபாவை கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளோம்? ஏன் ஹஜ் செய்வதற்கு கஃபாவிற்கு செல்கிறோம்! அல்லாஹ் அவ்வாறு கட்டளையிடுட்டாள். அதனால் அதை ஏற்று நாம் செயல்படுத்துகிறோம்.

இதையெல்லாம் கூறிய அல்லாஹ் நீங்கள் கேட்பது போல் மக்காவில் பார்க்கப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் கூறி இருப்பான். உம்முடைய இறைவன் எதையும் மறப்பவன் அல்ல என்று குர்ஆன் கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த போதெல்லாம் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா? என்று பார்த்து தங்களுடைய நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிக்கவில்லை.

அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடாத ஒரு விஷயத்தை நாமாக ஏற்படுத்துவது அல்லாஹ்வையும் நபி(ஸல்) அவர்களையும் குறைகூறுவது போன்றதாகும் என்று எழுதி இருக்கிறார்கள். பக். 105.

அந் நஜாத்: வேதனைக்குரிய விஷயம்! இந்த தவ்ஹீத் மவ்லவிகள் அறியாமையிலிருந்து கொண்டு இவ்வாறு எழுதுகிறார்களா? அல்லது தாங்கள் நினைத்ததை இந்த சிந்திக்கத் தெரியாத மக்களிடம் திணிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனும் ஆணவத்துடனும் எழுதுகிறார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

நபி(ஸல்) மதீனாவில் இருக்கும் போது மக்காவில் பிறை பார்த்த செய்தியை அறிந்து கொள்ள இன்றிருப்பது போல் ஃபோன் , ஃபேக்ஸ், ஈமெயில் போன்ற வசதிகளெல்லாம் இருந்தும் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா என்று கண்டு கொள்ளாமல் செயல்பட்டார்கள் என்று சொல்ல வருகிறார்களா? அல்லது மதீனாவிலிருந்து கொண்டு மக்கா நடப்புகளை உடனடியாக அறிய வழி வகை இருந்தும் அவற்றை நபி(ஸல்) அவர்கள் புறக்கணித்தார்களா? எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வும், அவனது ரசூலும் கட்டளையிட்டவற்றை அப்படியே எடுத்து நடக்கும் உத்தம சீலர்கள் போல் எழுதுகின்றனரே, இவர்கள் அல்குர்ஆனுக்கு முரணாக செயல்படும் எத்தனைக் காரியங்களை நாம் இதுவரை எடுத்துக் காட்டியுள்ளோம். இதுவரை இவர்கள் அவற்றைக் கவனத்தில் கொண்டார்களா? இந்த பிறை விஷயத்தில் மட்டும் நபியை அப்படியே பின்பற்றும் எண்ணம் அப்படியே பொங்கி வழிகிறதே? முகல்லிது மவ்லவிகளுக்கு ஜும்ஆ (குத்பா) பிரசங்கத்தை அரபியில் செய்வதிலும், அதில் வாளை தூக்கிப் பிடிப்பதிலும் அசல் சுன்னத் பொங்கி வழிவது போல்.

தொலைத் தொடர்புகள் வசதிகள் இல்லாத காலத்திலேயே அவற்றைக் கைக்கொண்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க வேண்டுமாம். அல்லாஹ் எதையும் மறப்பவன் இல்லையாம். அல்குர்ஆன் வசனத்தை அழகாக எழுதியிருக்கிறார்கள். அப்படியானால் 22:27 வசனத்தில் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு நடந்தும், மெலிந்த ஒட்டகங்களிலும் வருவார்கள் என்றுதானே கூறி இருக்கிறான். ஆகாய விமானத்திலோ, கப்பலிலோ, வேறு வாகனங்களிலோ ஹஜ்ஜுக்கு வருவதாக இருந்தால் அதையும் அவர்களது கூற்றுப்படி மறக்காது அல்லாஹ் கூறி இருக்க வேண்டுமே? அதனால் ஹஜ்ஜுக்கு இந்தியாவிலிருந்து விமானத்திலும், கப்பல்களிலும் செல்வது கூடாது என்று ஃபத்வா கொடுக்கப் போகிறார்களா?

ஒரு விஷயத்தை எந்தக் கோணத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற சாதாரண அடிப்படை அறிவு கூட இந்த தவ்ஹீத் மவ்லவிகளுக்கும், இவர்களைச் சார்ந்துள்ள வானவியல் அறிஞர்(?)களுக்கும் இல்லாமல் போய்விட்டதே? அந்தோ கைசேதம்!

16-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பூமி உருண்டை என்பதையே நேரடியாக அல்லாஹ் சொல்லாமல் சூசகமாக கூறியுள்ளான். காரணம் அன்றைய மக்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. 400 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உண்மையையே அல்லாஹ் நேரடியாகக் கூறவில்லை. இந்த நிலையில் இந்த 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதி நவீன் தகவல் தொடர்பு சாதனங்களை அன்றே அல்லாஹ் கூறி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்துள்ளார்களே? என்னே இவர்களது கற்பனை வரம்?

அல்முபீன்: காலத்திற்கேற்ப மார்க்கம் மாறுமா? என்ற தலைப்பில், இபாதத் சம்பந்தமான மார்க்கக் கட்டளைகளை காலத்திற்குத் தக்கவாறு மாற்றுவது என்று சொன்னால் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தி விடும். பக்.106

அந் நஜாத்: இவ்வாறு சிந்திக்கத் தெரியாத மக்களை பயமுறுத்தி இருக்கிறார்கள்.

இவர்கள் எதை இபாதத் என்று கூற வருகிறார்கள்? தப்லீக்காரர்கள் அசல் இபாதத்களை கோட்டைவிட்டு அவற்றை அடையும் வழி முறைகளை ‘இபாதத்’ ஆக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களே. அது போல் இவர்களும் வழிமுறைகளை ‘இபாதத்” என்கிறார்களா? அன்று நடந்தும், ஒட்டகங்களிலும் சென்ற ஹாஜிகள் இன்று விமானத்திலும் மற்றும் வாகனங்களிலும் செல்லகின்றனரே இது ‘இபாதத்” சம்பந்தமான மார்க்க கட்டளைக்கு விரோதம் என்று சொல்ல வருகிறார்களா? அன்று ஹஜ்ஜுக்கு சென்றவர் இறந்து விட்டால், கூட சென்றவர் வந்து சொன்னதின் பின்னர் இறந்தவரின் மனைவி இத்தா இருந்தது போல், இன்று இத்தா இருக்காமல் ஃபோன், ஃபேக்ஸ் செய்தி கிடைத்தவுடன் ‘இத்தா’ இருக்கிறார்களே இது ‘இபாதத்’ சம்பந்தமான மார்க்கக் கட்டளைக்கு விரோதம் என்று சொல்ல வருகிறார்களா?

அன்று தகவல் கிடைக்காததால் தங்கள் ஊரில் பார்த்த பிறையை அடிப்படையாக வைத்து நோன்பு நோற்றது போல் அல்லாமல் இன்று பிறை பார்த்த தகவல் கிடைத்து அதை ஏற்று நோன்பு நோற்பதை ‘இபாதத்’ சம்பந்தப்பட்ட மார்க்கக் கட்டளைக்கு விரோதம் என்று கூறுகிறார்களா?

எது மார்க்க விரோதம்?

அல்லது பிறையைக் கண்ணால் பார்ப்பதுதான் ‘இபாதத்’. நோன்பு பிடிப்பது அல்ல என்கிறார்களா?

பிறைத் தகவல் ஆதாரப்பூர்வமாக கிடைத்தும் ஆகாய வெளியில் பிறை பிறந்து விட்ட எதார்த்த நிலை மிகத் துல்லியமாகக் கிடைத்த பின்னரும், நோன்பு நோற்காமல் இருப்பது அல்லாஹ்வின் ‘இபாதத்” சம்பந்தப்பட்ட மார்க்கக் கடமைக்கு விரோதமான செயல் இல்லையா?

அதே போல் ஷவ்வால் பிறை பிறந்து விட்ட தகவல் மிகத்துல்லியமாக ஆதாரப்பூர்வமாக கிடைத்த பின்னரும் அதை ஏற்காமல் நோன்பு நோற்க ஹராமான ஷவ்வால் பிறை ஒன்றில் நோன்பு நோற்பது ‘இபாதத்’ சம்பந்தமான மார்க்கக் கட்டளைக்கு விரோதமான செயல் இல்லையா?

எது ‘இபாதத்?’ எது இபாதத் செய்ய துணை வருவது? என்பது கூட அறியாதவர்களா இந்த மவ்லவிகள். அல்லாஹ்வுக்கு அஞ்சுவதாகக் கூறும் இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சும் லட்சணம் இதுதானா? அதுவும் பிறை பார்த்து நோன்பு நோற்கச் சொன்ன நபி(ஸல்) அவர்கள், பிறை பிறந்த தகவல் கிடைத்ததும் அதையும் ஏற்று செயல்படுத்தியுள்ள பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கிடைத்ததும் ஏனிந்த தடுமாற்றம்? அவர்களுக்கே வெளிச்சம்.

வெறுங்கண்ணால் பார்த்த பிறையைத் தான் ஏற்க வேண்டும். பூதக்கண்ணாடியில் பார்த்த பிறையை ஏற்கக் கூடாது என்றும் வாதிட்டுள்ளனர். முகல்லிது மவ்லவிகள் மார்க்கத்தின் அசல் போதனைகளைக் கோட்டை விட்டு விட்டு, ஜும்ஆ (குத்பா) பிரசங்கத்தை அரபியில் செய்வதையும், வாளைத் தூக்கிப் பிடிப்பதையும் மிக முக்கியமான சுன்னத்தாக எண்ணுவது போல், இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் ஒரே உம்மத், பிளவுகள் இல்லை, பிரிவுகள் இல்லை. ஒன்றுபட்டு ஓரணியில் ஓரே தலைமையில் இருக்க வேண்டும் போன்ற மார்க்கத்தின் அசல் போதனைகளை எல்லாம் கோட்டை விட்டு விட்டு தலைப்பிறையை பூதக்கண்ணாடியால் பார்ப்பதா? கூடாது? கணித்துக் கூறுவதா? கூடாது? வெறுங்கண்ணால் பார்ப்பதையே மிக முக்கிய சுன்னத்தாக இபாதத்தாக எண்ணுகிறார்கள் போலும். முஸ்லிம்களை பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள் போலும். இஸ்லாம் மார்க்கம் இவர்கள் எண்ணுவது போல் பத்தாம் பசலி மார்க்கம் அல்ல. இன்னும் 10,000 ஆண்டுகள் ஆனாலும் அன்றைய நாகரீகத்திற்கும், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களுக்கும் சவால் விடும் மார்க்கம். எந்த நாகரீகமோ முன்னேற்றமோ இஸ்லாமிய மார்க்கத்தை மிகைத்து விட முடியாது. அனைத்திற்கும் ஈடு கொடுக்கும் மார்க்கம்; அல்லாஹ் கொடுத்த மார்க்கம் இஸ்லாம் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வார்களாக.

தலைப்பிறை என்றால் பிறை முழுமையாக மறைக்கப்பட்டு அதாவது அமாவாசை ஏற்பட்டு அதிலிருந்து விடுபட்டு வெள்ைள பிறைக் கீற்று தெரிய ஆரம்பித்து விட்டால் தலைப்பிறை பிறந்து விட்டது என்பதே பொருளாகும்.

அன்றைய காலக்கட்டத்தில் பிறை பிறந்து விட்டது என்பதை மனிதன் தன் கண்ணால் பார்த்து அறிவதை விட வேறு வழியே இருக்கவில்லை. அதன் பின்னால் டெலஸ்கோப் மூலம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்போது அதீநவீன கருவிகள், வானவியல் முன்னேற்றம் மற்றும் தொலைத் தொடர்புகள் இன்று உலகை ஒரு குக்கிராமம் போல் ஆக்கிவிட்ட நிலையில் இந்த வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் வேறு வழியின்றி கடைபிடித்தவற்றையே அப்படியே தான் கடைபிடிக்க வேண்டும் என்று வீண் வாதம் செய்து சமுதாயத்தைப் பிளவு படுத்துகிறார்கள். இந்த மவ்லவிகள் ஹஜ்ஜுக்கு முஸ்லிம்கள் நடந்தும், மெலிந்து ஒட்டகங்களிலும் தான் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் ஹஜ் நிறைவேறாது என்று சட்டம் வகுக்க வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை? டெலஸ்கோப் மூலம் பார்க்கும் பிறையை ஏற்றுத்தான் சவூதியில் பெரும்பாலும் தலைப்பிறையை அறிவிக்கிறார்கள்.

இவர்களின் ஆய்வுப்படி சவூதி அரசின் அறிவிப்பை ஏற்று இந்தியாவில் நோன்பு நோற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அங்கு சவூதியில் உள்ள இவர்களது ஆய்வை ஏற்றுக் கொண்ட தம்பிமார்களும் அதைப் தலைப்பிறையாக ஏற்க வேண்டும் என்றல்லவா இவர்களது ஆய்வு(?) கூறுகிறது. எனவே சவூதியிலேயே பிளவு ஏற்பட்டு இரண்டு கோஷ்டி ஏற்படும். நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே மதீனாவாசிகளுக்க ஒரு சட்டமும் கூறி முஸ்லிம்களை இரண்டு கோஷ்டிகளாக நபி(ஸல்) அவர்களே பிளவுபடுத்தினார்கள் என்று கூறும் இவர்களுக்கு இது ஒன்று பாரதூரமான விஷயமாகத் தெரியாது.

அதுசரி! நோன்பைத்தான் ஒரு நாள் முன்பின் செய்துக் கொள்வார்கள். ஹஜ்ஜுடைய கிரியைகளில் 9-ம் நாள் அரஃபாவில் தங்க வேண்டுமே? ஹஜ்ஜின் அடிப்படையே அதுதானே! இதற்கு என்ன செய்வார்களாம்? இவர்கள் ஆய்வுப்படி அரசு அறிவிப்பின்படி 9-ம் நாளாக உள்ளது இவர்களிடம் 9-ம் நாள் இல்லை. அடுத்த நாளோ அல்லது அதற்கும் அடுத்த நாளோ தான் இருக்கும். என்ன செய்வார்கள்? இவர்கள் ஆய்வுப்படியுள்ள அரஃபா தினத்தில் அதாவது அவர்களது பிறை ஒன்பதில்(?) தனியாக அரஃபாவில் போய் தங்குவார்களா? இதற்கு ஆய்வுக் குழுவினரின் தீர்ப்பு என்ன?

இவர்களது ஆய்வு(?) சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்களையும், சிக்கல்களையுயம் , சண்டைச் சச்சரவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை உணராதவர்களாகவா இருக்கிறார்கள்?

விமானம், ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரே சென்று பிறை பார்த்து வரலாமா என்ற தலைப்பில் கேள்வி கேட்டு விளக்கம் அளித்துள்ளார்கள். பிறையின் சுழற்சியை கணிப்பின் மூலமாகவே மிகத் துல்லியமாக கணக்கிட்டுக் கூறும் இக்கால கட்டத்தில் விமானத்தில் ராக்கெட்டில் போய் பிறை பார்க்கும் அளவுக்கு அறிவு குறைந்தவர்கள் இருக்க முடியாது. ஒரு வேளை மனிதக் கண்ணால் பார்த்து மட்டுமே தலைப் பிறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்: டெலஸ்கோப்பில் கூட பார்க்கக் கூடாது என்று 1420 வருடங்களுக்கு முன் இருந்தது போல் கண்ணால் கண்டே ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் பிடிவாதம் பிடிப்பதால், இது போன்ற கேள்விகளை இவர்களிடம் கேட்டிருக்கலாம். தூரத்தில் இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரிவது கஷ்டம்தான்.

பெரிய விமானம் கூட உயரே பறக்கும் போது ஒரு சிட்டு குருவி போல் தானே கண்ணுக்குத் தெரிகிறது. இந்த நிலையில் வானத்திலிருக்கும் பிறைக் கீற்று தூரத்தில் இருப்பதால் வெற்றுக் கண்ணுக்குத் தெரிவது கஷ்டம்தான்.

எனவே உயரே போய் பார்த்தால் தெரிய வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தில் கேட்டிருக்கலாம்.

அவர்களுக்குப் போய் கோள்களின் சுழற்சியை முறையை விளக்கி இருக்கிறார்கள். எனவே அறியாமையில் இவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அறிந்து கொண்டே ஏதோ குறிக்கோளுடன் செயல்படுவதே தெரிகிறது. தங்களின் அரசியல் கட்சிக்கு உள்ள ஆதரவு குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இப்படி தெரிந்த உண்மையை மறைக்கிறார்களோ? என்னவோ? அவர்களுக்கே உண்மைக் காரணம் மிகத் துல்லியமாகத் தெரியும். ஆக பல மவ்லவிகள், பல வானியல் அறிஞர்கள் கூடி பதினைந்து நாட்களாக 141 அரபி நூல்களையும், 11 ஆங்கில நூல்களையும் புரட்டி பெரும் ஹிமாலய முயற்சிக்குப் பதிலாக தெளிந்த மக்களை குறிப்பாக குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்பதில் தெளிவடைந்த மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது என்பதே உண்மை. நேர்வழி பெற ஆய்வு செய்வார்கள் என்று அறிந்திருக்கிறோம். இந்த தவ்ஹீத் மவ்வலவிகளோ நேர்வழியில் இருப்பவர்களை வழிகேட்டில் இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆய்வு செய்துள்ளனர். இதுவரை இதுபோன்ற புனிதப்பணியை (?) முகல்லிது மவ்லவிகள் செய்து வந்தனர். இப்போது இவர்களும் அப்புனிதப்பணியை(?) மேற்கொண்டுள்ளனர். முறையாகச் சிந்திக்கத் தெரியாமல் அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் தம்பிமார்களுக்காக பரிதாபப்படுகிறோம். அவர்களுக்காக துஆ செய்கிறோம்.

“இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது”. என்று குறிப்பிட்டே (பக். 5) தங்கள் ஆய்வை ஆரம்பித்துள்ளனர் தவ்ஹீத் மவ்லவிகள். மாதத்தின் முதல் பிறை முதல் தேதி கண்டிப்பான ஒரு நாள்தான் இருக்க முடியுமே அல்லாமல் முதல் தேதி இரண்டு நாட்கள் இருப்பதாக அறிவில் குறைந்தவனும் சொல்லமாட்டான். இப்போதாவது தங்களின் தவறை உணர்ந்து திருந்திக் கொள்வார்களாக.

குர்ஆன் ஹதீஸ் வழிதான் நேர்வழி, மத்ஹபுகள், தரீகாக்கள், தர்கா சடங்குகள், மெளலூது, கத்தம் பாத்திஹா , சலவாத்துன்னாரியா, புருதா இவை அனைத்தும் மார்க்க விரோதமான செயல்கள் என்பதைப் புரிந்து தெளிந்து அவற்றை விட்டு விடுபட்டு வெளிவந்த சகோதாரர்களே சகோதரிகளே! நீங்கள் மிகவும் உஷாராகச் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் தங்களின் அரசியல் தலைவர்களைப் போல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் ஆதரவும் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற தவறான நோக்கில் அவர்களிடமிருந்து வரும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்களையும் படிப்படியாக தங்களின் நாவன்மையால், வாதத்திறமையால், எழுத்து வன்மையால் நியாயப்படுத்த முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சுய நலத்திற்காக நீங்கள் பலியாகிவிடாதீர்கள். எச்சரிக்கை.

*****************************************

முஸ்லிம்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!

1. “பித் அத்கள் அனைத்தும் வழிகேடு – நரகிற்கு இட்டுச் செல்லும்” என்று இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) கூறுகிறது.

“இல்லை; அவைகளில் (பித்அத் ஹஸனா) நல்ல பித்அத்களும் உண்டு. அவை வழிகேடல்ல” என்று தர்கா, தரீக்கா, மத்ஹபு மவ்லவிகள் சுய விளக்கம் தருகின்றனர்.

2. “அல்லாஹ் அல்லாதவர்களிடம் தங்கள் தேவைகளை (இஸ்திஆனா) கேட்பது ‘ஷிர்க்’ இறைவனுக்கு இணை வைக்கும் செயல் – வழிகேடு – நரகிற்கு இட்டுச் செல்லும்” என்று இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) கூறுகிறது.

“இல்லை; அல்லாஹ்வின் நேசர்களான இறந்து போன அவுலியாக்களிடம் கேட்பது ‘ஷிர்க்’ அல்ல; இதுவும் வழிபாடே” என்று தர்கா மவ்லவிகள் சுய விளக்கம் தருகின்றனர்.

3. “முன்னோர்களை – மூதாதையர்களைப் பின் பற்றி நடப்பது வழிகேடு – நரகிற்கு இட்டுச் செல்லும்” என்று இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) கூறுகிறது.

“இல்லை; அவர்களில் நல்லவர்களைப் பின்பற்றுவது கூடும்; அதுவே நேர் வழி” என்று தர்கா, தரீக்கா, மத்ஹபு சுய விளக்கம் தருகின்றனர்.

4. “அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்படாததை மற்றவர்களைக் பாதுகாவலர்களாகக் கொண்டு எடுத்து நடப்பது வழிகேடு – நரகிற்கு இட்டுச் செல்லும்” என்று இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) கூறுகிறது.

“இல்லை; குர்ஆன், ஹதீஸை சாதாரண மக்கள் விளங்க முடியாது; எனவே இமாம்கள் விளங்கிச் சொன்னதை எடுத்து நடப்பது அவசியம்; அதுவே நேர்வழி. அதாவது மத்ஹபுகளைப் பின்பற்றீயே தீர வேண்டும்” என்று தர்கா, தரீக்கா, மத்ஹபு மவ்லவிகள் சுய விளக்கம் தருகின்றனர்.

5. “பிரிவுகள் – பிளவுகள் அனைத்தும் வழிகேடு – நரகிற்கு இட்டுச் செல்லும்” என்று இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) கூறுகிறது.

“இல்லை; கொள்கை அடிப்படையிலான பிரிவுகள் – பிளவுகள் (மத்ஹபுகள்) தான் கூடாது; பெயர் அடிப்படையிலான பிரிவுகள் – பிளவுகள் (இயக்கங்கள்) கூடும்” என்று தவ்ஹீத் மவ்லவிகள் சுய விளக்கம் தருகின்றனர்.

6. “அரபி அஜமியை விட சிறந்தவர் – உயர்ந்தவர் அல்லர்; அஜமி அரபியை விட சிறந்தவர் – உயாந்தவர் அல்லர்” என்று இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்) கூறுகிறது.

“இல்லை; அரபி கற்றவர் – ஆலிம் சிறந்தவர் – உயர்ந்தவர்; அரபி கல்லாதவர் – அவாம் தாழ்ந்தவர்” என்று தர்கா, தரீக்கா, மத்ஹபு, தவ்ஹீது, தவ்ஹீது மவ்லவிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சுய விளக்கம் தந்து பிரிவுகள் இல்லா ஒரே சமுதாயத்தை “ஆலிம் – அவாம்” என்று பிளவு படுத்தி வைத்துள்ளனர்.

சகோதர, சகோதரிகளே! மேலே எடுத்து எழுதியுள்ள ஆறு விஷயங்களையும் நிதானமாக விருப்ப, வெறுப்பின்றி , ஏற்கனவே உங்கள் உள்ளத்தில் உறைந்து இருக்கும் எண்ணத்தை சில வினாடிகளுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள். மனிதர்களின் சுய விளக்கத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அணு அளவாவது அனுமதி உண்டு என்று நீங்கள் நம்பினால் மேலேயுள்ள ஆறு விஷயங்களும் கூடும் என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம்.

அதற்கு மாறாக மார்க்கத்தில் மனித யூகத்திற்கோ, சுயவிளக்கத்திற்கோ அணு அளவும் அனுமதி இல்லை என்பது உங்களின் நம்பிக்கையாக இருந்தால், மேலேயுள்ள ஆறு விஷயங்களும் வழிகேடே – நரகிற்கு இட்டுச் செல்பவையே என்ற முடிவுக்கு மட்டுமே நீங்கள் வந்தால், உங்களின் சிந்தித்துணரும் திறமையில் கோளாறு இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் கூடாது – வழிகேடு என்று முடிவு செய்து மற்றவர்கள் “வழிகேடல்ல கூடும்”; என்று கூறுவதும் இந்த ஆறுவகை வழிகேட்டை விட்டு ஒதுங்கி நடப்பவர்களை ஆத்திரம் கொள்ளவைக்கிறது. நீங்களும் உங்கள் மனோ இச்சைப்படி செயல்படுகிறீர்கள் என்ற முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்த முடிவில் இருக்கிறீர்கள்?

அந்நஜாத்: ஜனவரி, 2000 – ரமழான், 1420

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக