வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அல்முபீன் பிறை ஓர் ஆய்வு, அந்நஜாத்தின் அலசல்-4

  • உலகமெல்லாம் ஒரே கிழமை

இந்த தவ்ஹீத் மவ்லவிகளுக்கு பிறை விஷயத்தில் உலகின் அமைப்பை எப்படி விளங்கிக் கொள்ள முடியவில்லையோ, அதுபோல் கிழமை விஷயத்திலும் உலகின் அமைப்பை விளங்கிக் கொள்ளும் ஆற்றலோ தேதி, கிழமைகளில் உலகளாவிய ஒற்றுமை ஏற்பட கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளோ, தெரியவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு காலத்தில் மவ்லவிகளில் பெரும்பாலோர் பூமி உருண்டை அல்ல; தட்டை என்றே விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அரபி மதரஸாக்களில் பூகோளம் பற்றிப் படித்துக் கொடுக்கப்படும் கிதாபிலும் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற 16-ம் நூற்றாண்டு தத்துவமே பதியப்பட்டுள்ளது. அதுவே மதரஸா மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறது. இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் அதற்கு விதி விலக்காக இருக்க முடியாதுதான்.

உலகமெல்லாம் ஒரே பிறை, ஓரே நாள், ஓரே கிழமை என்றால் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் எப்படி அதைப் புரிந்திருக்கிறார்கள் என்றால் உலகத்தின் எதாவதொரு பகுதியில் என்ன பிறையோ என்ன தேதியோ என்ன கிழமையோ என்ன நேரமோ அதே போல் உலகின் எல்லா பகுதிகளிலும் அதே பிறை, அதே தேதி, அதே கிழமை, அதே நேரம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த தடுமாற்றம் காரணமாகத்தான் ஷஃபான் மாதத்தின் கடைசிப்பகலில் இருக்கும் லண்டன், அங்காரா (அமெரிக்கா) போன்ற இடங்களிலும் நோன்பு நோற்க வேண்டும் என்று எழுதி இருந்தார்கள். அதே போல் கடலில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளின் வசதிக்காக ஊர்களில்லாத கடல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வ தேச தேதிக் கோட்டை (International Date Line) தங்கள் தங்கள் ஊரிலிருக்கும் (முகீம்) மக்களுக்குரிய தேதிக் கோடாக கணித்து குழப்பி இருக்கிறார்கள். ஊரிலிருப்பவர்களுக்கும் அந்த தேதி கோட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பூமி சுழலும் போது அந்த சர்வதேச தேதி கோடும் பூமியோடு சுழன்று கொண்டு தான் இருக்கும். இரவு, பகலை நிர்ணயிப்பது இந்த தேதி கோடு அல்ல.

கடலில் பிரயாணம் செய்யும் கப்பல்கள் அந்த சர்வதேச தேதிக் கோட்டை தாண்டும் போது அவர்கள் செல்லும் திசையை வைத்து வெள்ளியை சனியாகவோ, சனியை வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வார்கள் என்பது உண்மையே! அதுவும் திடுதிடுப்பென அப்படி மாற்றமாட்டார்கள். அவர்கள் கடலில் பிரயாணம் செய்யும் போது பிரயாண தூரத்தைப் கணக்கிட்டு டிகிரிக்கு 4 நிமிடம் என்று போகும் திசையை வைத்து கூட்டியோ குறைத்தோ கடிகாரத்தைத் திருப்பிக் கொள்வார்கள். உதாரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டு மேற்கே சவூதி செல்கிறவர்கள் அங்கு போய் இறங்கியவுடன் தங்கள் கடிகாரத்தில் 2.30 மணி குறைத்து வைத்துக் கொள்வார்கள். துபை சென்று இறங்குபவர்கள் 1.30 மணி குறைத்து வைத்துக் கொள்வார்கள். அதற்கு மாறாக கிழக்கே சிங்கப்பூர், மலேசியா செல்பவர்கள் அதுபோல் கணக்கிட்டு கூட்டி வைத்துக் கொள்வார்கள். இதுவெல்லாம் கப்பலிலோ, ஆகாய விமானத்திலோ அல்லது வேறு வாகனங்களிலோ கிழக்கேயோ, மேற்கேயோ பிரயாணம் செய்கிறவர்களுக்கேயன்றி தங்கள் தங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு அல்ல.

அவர்கள் கையிலுள்ள கடிகாரம் பூமியின் சுழற்சிக்கேற்றவாறு சரியாக நேரம் காட்டிக் கொண்டே இருக்கும். இப்போது ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் நாட்டின் பரப்பளவு அந்த நாட்டின் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையேயுள்ள தூரம் இதையெல்லாம் கணக்கிட்டு பொதுவாக ஒரு நேரத்தை அந்த நாட்டின் ஸ்டாண்டர்ட் டைம் என்று நெறிப்படுத்தி இருப்பார்கள். அந்த அடிப்படையிலேயே IST இந்தியன் ஸ்டாண்டார்ட் டைம் அமைந்துள்ளது. இதனால்தான் கல்கத்தாவின் சூரிய உதய நேரமும், பம்பாயின் சூரிய உதய நேரமும் வேறுபடுகிறது. ஒரு டிகிரிக்கு 4 நிமிடங்கள் என்று கணக்கிட்டு நேரம் குறிப்பதாக இருந்தால் இந்தியாவிலேயே பல நேரங்களை குறிப்பிட வேண்டி வரும். அப்படி அமைந்தால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரிய உதயம் ஒரே நேரத்திலும், அஸ்தமனம் ஓரே நேரத்திலும் இருப்பதைக் காணலாம். காரணம் பூமியின் ஓட்டத்திற்கேற்றவாறு நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதாக இருந்தால் பூமியின் கிழக்கு மேற்கு வாக்கில் எந்த ஊரும் ஒரே நேரத்தில், இருக்காது. நேர வித்தியாசம் இருக்கும். தெற்கு வடக்கில் ஓரே நேரம் இருக்கும்.

ஆனால் ஒன்றை இங்கு மிகக் கவனமாக கவனித்தாக வேண்டும். இந்த நேர வித்தியாசம் உலகம் முழுவதும் இரவு +12 பகல் + 12 ஆக 24 மணி நேரத்திற்கு மேல் அதாவது ஒரு நாளைக்கு மேல் போகவே போகாது. போக முடியாது.

எனவே அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் இந்தியாவில் வெள்ளி மாலை 6 மணியாகி சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை பிறந்து விடும். ஆனால் சவூதியில் 3.30க்கு வெள்ளியாகத்தான் இருக்கும். அதாவது சவூதிக்காரர்கள் சனிக்கிழமையை அடைய இன்னும் 2.30 மணி நேரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் உலகம் பூராவும் ஒரே நாள் தான் என்பதை அவர்கள் விளங்குவதிலுள்ள கோளாறுதான் தலைப்பிறை இரண்டு நாட்களுக்கு இருக்க முடியும் என்ற தவறான வாதம். உலகம் பூராவும் ஒரு நாள்தான் என்பதை எப்படி விளங்க வேண்டும்? இந்தியாவில் மாலை 6மணி சூரிய அஸ்தமன நேரம் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இஸ்லாமிய பிறைக் கணக்குப்படி வெள்ளிக்கிழமை மாறி சனிக்கிழமை ஆகிவிட்டது. இந்தியாவிற்கு மேற்கிலுள்ள நாடுகள் அனைத்தும் வெள்ளிக் கிழமை பகலில் இருக்கின்றன. அதற்கு மாறான இந்தியாவுக்கு கிழக்கிலுள்ள நாடுகள் வெள்ளிக் கிழமையிலிருந்து சனிக்கிழமை இரவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் சனிக்கிழமை இரவு 6மணி என்றால் கிழக்குப் பகுதிகளிலுள்ள நாடுகள் அதிகாலை 6 மணி வரையிலுள்ள சனி இரவிலும் (+6p.m. to +6 a.m.) மேற்குப் பகுதிகளிலுள்ள நாடுகள் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அவகாசத்திலும் (+6 a.m. to +6 p.m.) சஞ்சரிக்கின்றன. இந்தியா வெள்ளி மாலை சனி இரவைச் சந்தித்து 12 மணி அவகாசத்திற்குள் அதாவது இந்தியா சனி இரவைக் கடந்து சனி பகலை அடையும் போது அவை வெள்ளியைக் கடந்து சனி இரவுக்குள் பிரவேசித்துவிடும். ஆக 24 மணி அவகாசத்தில் அதாவது 1 நாள் அவகாசத்தில் உலக நாடுகள் அனைத்திலும் வெள்ளி சனியாகிவிடும்.

இன்னொரு விதமாக விளங்குவோம். சாதாரணமாக முஸ்லிம்களாகட்டும், மற்றவர்களாகட்டும் நாள் காட்டியில் தேதி கிழிக்கும் வழக்கம் அதிகாலையிலேயே இருக்கும். சென்னையில் அதிகாலையில் 10 சனிக்கிழமையாக இருந்த தேதியை 11 ஞாயிறாக கிழிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதே நேரத்தில் உலக நாடுகளில் எல்லாம் காலையாகி தேதி கிழிக்க மாட்டார்கள். பாக்கிஸ்தானில் இன்னும் விடிந்தே இருக்காது. அவர்களுக்கு விடிந்ததும் 10 சனியாக இருந்த தேதியை 11 ஞாயிறாகக் கிழிப்பார்கள். அடுத்து துபையில் அதே மாதிரி சில மணித்துளிகளில் கிழிப்பார்கள். அடுத்து சவூதி அடுத்து பிரான்ஸ், அடுத்து இங்கிலாந்து இப்படி சென்னைக்கு மேற்குப் பகுதியில் இரவு 12 மணி நேர ஓட்டத்திலுள்ள நாடுகள் இரவிலிருந்து விடியலுக்கு வந்து தேதி கிழிப்பார்கள். ஆனால் சென்னைக்கு கிழக்குப் பகுதியிலிருப்பவர்கள் பகல் 12 மணி நேர ஓட்டத்திற்குட்பட்டவர்கள் நமக்கு முன்னரே 10 சனியாக இருந்த தேதியை 11 ஞாயிறாகக் கிழித்துச் சென்றிருப்பார்கள். இப்படி உலகிலுள்ள அனைத்து நாடுகளும் 24 மணி நேர அவகாசத்தில் 10 சனியிலிருந்து 11 ஞாயிறுக்கு மாறியிருப்பார்கள். சரியாக 24 மணி நேரத்திற்குப் பிறகு சென்னை மீண்டும் அதே அதிகாலையை அடைந்து 11 ஞாயிறிலிருந்து 12 திங்களுக்கு தேதி கிழிப்பார்கள். இதைத்தான் உலகம் முழுவதற்கும் ஓரே தேதி, ஓரே கிழமை என்று சொல்லுகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் 24 மணி அதாவது ஒரு நாள் அவகாசத்தில் 24 மணி நேரத்திற்கு முன்பிருந்த அதே இடத்தை ஆகாய வெளியில் அடைந்து விடும். காலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணி. இப்படி முறையாக விளங்கி இருந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்காது. மக்களையும் குழப்பி இருக்க மாட்டார்கள். பூமி உருண்டை, சுற்றிக் கொண்டிருக்கிறது . ஒரு முறை தன்னைத் தானே சுற்றிவர 24 மணி நேரம் பிடிக்கிறது என்பதை எல்லாம் அவர்கள் அறிந்திருந்தும், ஏதோ பூமி அப்படியே நின்று கொண்டிருப்பது போல் நினைத்துக் கொண்டு நாம் இரவிலிருந்தால் அமெரிக்கா பகலில் அல்லவா இருக்கிறது? எப்படி ஓரே நாளில் இருக்க முடியும்? என்ற ஐயத்தைக் கிளப்பிக் குழம்பியும், குழப்பியும் இருக்கிறார்கள்.

அல்முபீன்: ஹானலுலு நாட்டில் கிரிக்கெட் போட்டி அக்.22ம் தேதி காலை பத்து மணிக்கு துவங்குகிறது. அதே நாளில் காலை எட்டு மணிக்கு நியூசிலாந்து தொலைக்காட்சியில் அதன் நேரடி ஒளிபரப்பைக் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 23ம் தேதியில் காலை எட்டு மணி இது எப்படி சாத்தியம்?

இது போன்ற 4 கேள்விகளை 93,94 பக்கங்களில் கேட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஒரு நாள்தான் என்று வாதம் செய்பவர்களிடம் நாம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பகிறோம் என்று கூறி இந்த 4 கேள்விகளை எழுதியிருக்கிறார்கள்.

ஊரில் இருப்பவர்களுக்குச் சட்டம் வகுக்க பிரயாணத்திலிருப்பவர் (ஸஃபர்)களுக்குரியதைக் காட்டுகிறார்கள். சர்வதேச தேதி கோட்டுக்கு பக்கத்திலுள்ள நாடுகள் மட்டுமல்ல; இந்தியாவிலிருந்து சவூதி செல்லக்கூடியவர்கள், ஜப்பானிலிருந்து லண்டன் செல்லக் கூடியவர்கள் இப்படி நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ வைக்க நேரிடும் என்பதை முன்பே நாம் விளக்கியிருக்கிறோம். ஆனால் இவர்கள் எப்படிக் கணக்கிட்டுக் காட்டினாலும் அது 24 மணி நேரம் 1 நாளைத் தாண்டாது என்பதைக் கவனத்தில் கொள்வார்களாக. அது மட்டுமல்ல. பிரயாணிகளுக்கு ஜும்ஆ கடமை இல்லை; லுஹரையும் அஸரையும் சேர்த்து தொழலாம் 4ஐ 2ஆக சுருக்கித் தொழலாம் போன்ற சலுகையில் இருப்பதை அவர்களும் மறுக்க மாட்டார்கள். அது போல் எந்த தொழுகை தொழுது விட்டு எந்த ஊர் செல்லுகிறார்களோ அந்த ஊர் நேரப்படி தங்கள் கடிகார நேரத்தை மாற்றி வைத்துக் கொள்கிறது போல் தொழுகையையும் அதற்கேற்றவாறு தொழுவதை அல்லாஹ் குற்றம் பிடிக்கமாட்டான் என்றே நம்பிக்கை வைக்கிறோம். நிச்சயமாகக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமீன்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது. இல்லை இந்த கேள்விகளுக்கு இதை விட சிறந்த பதிலை தலைப்பிறை இரண்டு தினங்களுக்கு இருக்க முடியும் என்று வாதிடுகிறவர்கள் தரட்டுமே பார்ப்போம். தலைப்பிறை இரண்டு தினங்கள் என்று முடிவு செய்து கொண்டால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்து விடுவது போல் கேள்வி எழுப்பி இருப்பது தான் வேடிக்கையாகும்.

அல்முபீன்: அதுமட்டுமல்ல இவ்வாறு கேள்வி கேட்டு விட்டு 94-ம் பக்கத்தில் அவர்கள் எழுதியுள்ளதைப் பாருங்கள்

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உலகம் முழுவதும் ஒரே நாள் என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தமில்லாத நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன், ஓரே சந்திரன் என்று வியாக்யானம் செய்பவர்களும், அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஓரே காரணத்தால் அதற்கு அணிந்துரை, மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்று கிண்டல் அடித்துள்ளார்கள்.

அந் நஜாத்: இவர்களது அகம்பாவம் எந்த அளவு உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது என்பதை உணரத் தவறிவிட்டதையே இந்த பாரா சுட்டிக் காட்டுகிறது. சர்வதேச தேதிக் கோடு மனிதன் அமைத்துக் கொண்டது. அதுவும் கடலில் பிரயாணம் செய்பவர்களுக்கென்று அமைக்கப்பட்டது. இதற்கும் இயற்கையாகவே அல்லாஹ்வின் கட்டளைப்படி சுழன்று கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி இவற்றிற்கும் என்ன சம்பந்தம் என்பதையாவது யோசித்தார்களா? அல்லாஹ் இந்த கோள்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு அவை சென்று கொண்டிருக்கும்; அவற்றின் ஒட்டத்தை இந்த சர்வதேச தேதிக் கோடு மாற்றி விட முடியுமா? அந்த சர்வதேச தேதிக் கோடும் பூமியிலிருப்பதுதான். அதுவும் 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கிறது என்பதைக் கூட இந்த மார்க்க அறிஞர்களாலும், வானவியல் அறிஞர்கள்(?) என்று சொல்லிக் கொள்பவர்களாலும் ஆய்ந்தறிய முடியவில்லையே? இரவு பகல் ஏற்படுவதும், நேரம் மாறுவதும் பூமிக்கு வெளியேயுள்ள சூரியனை வைத்துத்தானே அல்லாமல் பூமியில் இருக்கும் இந்த சர்வதேச தேதிக் கோட்டை வைத்ததல்ல. பூமி சுழலும் போது சூரியனை நோக்கி இருக்கும் பூமிப் பகுதி பகல், அதற்கு எதிர் திசையில் இருக்கும் பகுதி இரவு ஆகும். பூமி கூழலும் போது இந்த சர்வதேச தேதிக் கோடு சூரியனை நோக்கி இருந்தால் அது பகலில் இருக்கும். அதற்கு எதிர் திசையில் இருந்தால் இரவில் இருக்கும். பூமியின் ஒரு நாள் கணக்கை சூரியனும் பூமியின் சுழற்சியும் நிர்ணயிக்கிறதே அல்லாமல், மனிதன் கடல் பிரயாணிகளுக்காக அமைத்துக் கொண்ட சர்வதேச தேதிக் கோடல்ல. இந்த சர்வதேச தேதிக் கோடு சூரியனுக்குக் கட்டுப்பட்டதே அல்லாமல் சூரியன் சர்வதேச தேதிக் கோட்டிற்கு கட்டுப்பட்டதல்ல. சூரியன் சர்வதேச தேதி கோட்டிற்குக் கட்டுப்பட்டது போன்ற எண்ணத்திலேயே அவர்களது ஆய்வு இருக்கிறது.

அல்முபீன்: 92-ம் பக்கத்தில் “உதாரணமாக சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு தீவுகளை எடுத்துக் கொள்வோம். நியூஸிலாந்தில் காலை எட்டு மணி இருக்கும் போது ஹானலுலுவில் அதே காலை நேரம் தான் 10 மணியாக இருக்கும். ஆனால் நியூஸிலாந்தில் அக்டோபர் 20ந்தேதி புதன் கிழமை. ஹானலுலுவில் அக்டோபர் 19ம் தேதி செவ்வாய்கிழமை. இரண்டு நாடுகளிலுமே கிட்டத்தட்ட ஓரே இரவில் முதல்பிறை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தென்பட்டால் நியூஸிலாந்து, ஹானலுல் ஆகிய இரு நாடுகளிலும் ஓரே நாளில் தான் நோன்பு வைக்க வேண்டும். ஆனால் நியுஸிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும், ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும் என்று எழுதி இருக்கிறார்கள்.

அந் நஜாத்: சுருக்கமாகச் சொன்னால் அல்லாஹ்வின் சட்டத்தை மனிதன் 1884-ல் உண்டாக்கியுள்ள இந்த சர்வதேச தேதிக்கோடு மாற்றம் என்று கூறுகிறார்கள். இந்த சர்வதேச தேதிக் கோடு மனிதர்களால் வரையப்பட்ட கற்பனையான கோடுதான். இந்தக் கோடு ஏதேனும் ஒரு நாடு வழியாகச் சென்றால் ஒரே நாட்டில் ஒரு நாளில் வெவ்வேறு தேதி, வெவ்வேறு கிழமை ஏற்பட்டு, அதனால் குழுப்பங்கள் தோன்றும். இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக்கோடு ஏற்பட்டு, அதனால் குழப்பங்கள் தோன்றும். இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக்கோடு எந்த நாடு வழியாகவும் செல்லாத வண்ணம் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து வரையப்பட்டது. இந்த தேதிக்கோடு இந்தியாவிற்கும் சவூதிக்கும் மத்தியில் வரையப்பட்டிருந்தால் இரண்டரை மணி நேர வித்தியாசத்திலேயே வெவ்வேறு கிழமைகளை வெவ்வேறு தேதிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

அந்நஜாத்: இவர்கள் இந்த 120 பக்கங்களை செலவிட்டு பெருத்த விளம்பரங்கள் செய்து, 141 அரபிநூல்களையும், 11 ஆங்கில நூல்களையும், பல மவ்லவிகளையும், வானவியல் அறிஞர்களயும்(?) வைத்து மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆய்வு செய்தார்களா? அவர்களுக்கே வெளிச்சம். அதிநவீன கருவிகள், ஆய்வுகள் கொண்டு மிகத் துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் தலைப்பிறையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். கண்ணால் பிறையைப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்வோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், 1884-ல் மனிதர்கள் கற்பனையாக ஏற்படுத்தியுள்ள இந்த சர்வதேச தேதிக் கோட்டிற்கு ஏன் இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள்? சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்?அவர்களே அவர்களுக்கு முரண்படுகிறார்களே ஏன்?

சர்வதேச தேதிக் கோட்டின்படி தான் செயல்படவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்று சொல்லப் போகிறார்களா?

பிறைக் கணக்குப்படி முஸ்லிம்கள் மஃரிபில் நாளின் துவக்கத்தை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து வரும் பகலின் இறுதியில் ஒரு நாளை முடிக்கிறார்கள். முஸ்லிம்கள் சர்வசாதாரணமாக சனி பின்நேரம் ஞாயிறு, திங்கள் பின்நேரம் செவ்வாய் என்று திங்கள் கிழமையைக் குறிப்பிடுவதையும் எல்லோரும் அறிவார்கள், பிறை விஷயமாக நாங்கள்ள கூறுவதாவது தேதி, கிழமை எல்லாம் மஃரிபிலிருந்து அடுத்த நாள் மஃரிபு வரை உள்ள காலமாகும். இந்த நிலையில் கடல் பிரயாணிகளின் வசதிக்காக ஊரே இல்லாத கடல் பகுதியில் கற்பனையாகப் போடப்பட்டுள்ள சர்வதேச தேதிக் கோட்டிற்கும் பிறைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்ன சம்பந்தம் இருப்பதாக இந்த தவஹீத் மவ்லவிகள் கற்பனை செய்கிறார்கள்? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்பார்கள். இப்போது இந்த தவ்ஹீத் மவ்லவிகளுக்கும் இந்த சர்வதேச தேதிக் கோட்டிற்கும் என்ன சம்பந்தம்? என்று நாங்கள் கேட்கிறோம்.

இன்னும் அவர்களது ஆணவத்தைப் பாருங்கள்.

அல்முபீன்: நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன், ஒரே சந்திரன் என்று வியாக்யானம் செய்பவர்களும், அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை, மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு (அதாவது கற்பனை சர்வதேச தேதிக் கோட்டை அடிப்படையாக வைத்து அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்) என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அந்நஜாத்: இதை இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் அறியாமை என்று சொல்வதா? அல்லது ஆணவம் என்று சொல்வதா? குர்ஆன், ஹதீஸுக்கு ஒத்த கருத்துத்தான் மார்க்கமாக முடியும். இதை இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் கடந்த 13 வருடங்களாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட கருத்தையே மனித யூகம் என்று அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஓரே தேதி, ஒரு கிழமை என்ற கருத்துக்கு நான்கு குர்ஆன் வசனங்களும் ஆதவரவாக இருக்கின்றன என்பதையும் அவர்களே கற்பனை சர்வதேச தேதிக் கோட்டின் கோட்பாட்டிற்கு முரண்படுகிறதாம். அதற்காகப் பெரும் முயற்சி எடுத்து இற்த ஆய்வை நடத்தி தலைப்பிறை இரண்டு நாட்கள் வர முடியும் என்று நிலை நாட்டப் போகிறார்களாம்? என்னே அகம்பாவம்?

நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி பிறை பார்த்தே நோன்பு பிடிப்போம்; நோன்பை விடுவோம் என்று அடம்பிடிப்பவர்கள் 1884-ல் மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட இந்த சர்வதேச தேதிக் கோகட்டை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்? இங்கு மட்டும் உலக முழுவதும் ஒரே தலைப்பிறை என்பது, குர்ஆன், ஹதீஸுக்கு ஒத்த கருத்தாக இருந்தாலும் , மனிதக் கற்பனையான சர்வதேச தேதிக் கோட்டின் கோட்பாட்டிற்கு முரண்படுவதால் ஏற்க மாட்டோம் என்று ஏன் கர்ஜிக்க வேண்டும்? அவர்களே அவர்களுக்கு முரணா? நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு அப்படியே அடிபணிகிறவர்கள், குர்ஆனின் கட்டளைக்கு அதற்கும் அதிகமாகவல்லவா அடி பணிய வேண்டும்? அதற்கு மாறாக “தங்களுடைய கருத்துக்கு அந்த நான்கு குர்ஆன் வசனங்களும் ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை, மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்று எப்படி அகம்பாவமாக கேட்க முடியும்? அந்த நான்கு குர்ஆன் வசனங்களை விட இவர்களின் இந்த கேள்விகளுக்கும் , கற்பனை சர்வதேச தேதிக் கோடும் முக்கியத்துவம் உள்ளனவாக ஆகிவிட்டனவா? என்னே அகம்பாவம்?

ஆக குர்ஆன், ஹதீஸுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதைவிட தங்களது கற்பனைகள், மனோ இச்சைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஆவல் மிகைத்திருப்பது இங்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெளிப்படுகிறதே?

பிறையைக் கண்ணால் கண்டு நோன்பு பிடிப்பதே அசல் சுன்னத் என்று இந்த தவ்ஹீத் மவ்லவிகள் வாதிடுகின்றனரே? அவர்கள் கேள்வி கேட்டிருப்பது போல் நாமும் சில கேள்விகளைக் கேட்கிறோம். அவற்றிற்குரிய பதிலைத் தருவார்களாக!

1. அரபு நாடுகளிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்குத் தினசரி பல விமானங்கள் வந்து இறங்குகின்றன. பிறை பிறந்த அன்று அங்கு அரபு நாட்டில் தங்கள் கண்ணாலேயே தலைப்பிறையைப் பார்த்து விட்டு பலர் உடன் புறப்பட்டு இந்தியா வந்து விட்டனர். அவர்கள் இங்கு இந்தியாவில் நோன்பை ஆரம்பிப்பதா? இல்லை இந்தியாவில் பிறை பார்க்கவில்லை. அதனால் இந்தியாவில் அவர்கள் நோன்பை ஆரம்பிக்கக் கூடாது என்று இவர்கள் “ஃபத்வா” கொடுக்கப் போகிறார்களா?

2. இந்தியாவில் இவர்கள் ஆய்வுப்படி பிறையைக் கண்ணால் பார்த்து நோன்பை ஆரம்பித்த ஒருவர் ரமழான் நடுவில் சவூதி அரேபியா சென்று அங்கு நோன்பைத் தொடர்ந்தார். அவருக்கு நோன்பு 28 பூர்த்தியாகி இருக்கும் நிலையில், அவர் தன் கண்ணாலேயே அங்கு தலைப்பிறையைக் கண்டுவிட்டார். அவருக்கு பிறை கண்ட மறுநாள் பெருநாளா? அல்லது அவர் தனது நோன்பை குறைந்தது 29 ஆக பூர்த்தி செய்துவிட்டு பெருநாள் கொண்டாடுவதா? தவ்ஹீத் மவ்லவிகளின் தீர்ப்பு என்ன?

3. சவூதியில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்தவர் ரமழான் இடையில் தாயகம் வந்துவிட்டார். இங்கிருப்பவர்கள் 29ல் இருக்கும் போது அவருக்கு 30 நோன்பு பூர்த்தியாகி விட்டது. இப்போது அவர் இங்குள்ளவர்களுடன் சேர்ந்து 31-வது நோன்பைப் பிடிப்பதா? அல்லது அவர் மட்டும் பெருநாள் கொண்டாடுவதா? அவர் தனித்து பெருநாள் கொண்டாட முடியுமா? நோன்பு 28லும், 31லும் அதிக அக்கறை எடுத்து தலைப்பிறை -முதல் தேதி இரண்டு நாள் வரமுடியும் என்று வரட்டு வாதம் செய்துள்ளனரே? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தரப்போகிறார்கள்? தவ்ஹீத் மவ்லவிகளின் “ஃபத்வாவை” ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

4. கணவர் சவூதியில் இருக்கிறார். மனைவி இந்தியாவில் இருக்கிறார். சவூதியில் கணவர் பிறை பார்த்துவிட்டு அந்த தகவலை தனது மனைவிக்கு ஃபோனில் அறிவிக்கிறார். மனைவி கணவனின் ஃபோன் செய்தியை ஏற்று நோன்பு நோற்பதா? இல்லை இங்கு நான் பிறை பார்க்க இல்லை. எனவே நோன்பை ஆரம்பிக்கமாட்டேன் என்று மறுப்பதா? தவ்ஹீத் மவ்லவிகளின் தீர்ப்பு என்ன?

5. இதே போல் சவூதியிலிருக்கும் மகன் ஊரிலிருக்கும் தாய்க்கும், தந்தைக்கும் தான் பிறை பார்த்து நோன்பு ஆரம்பிக்கும் செய்தியை அறிவிக்கிறார். பெற்றோர் மகனின் பிறைத் தகவலை ஏற்று நோன்பு நோற்பதா? இல்லை இந்தியாவில் பிறை பார்க்கவில்லை. அதனால் நோன்பு நோற்க முடியாது என்று மறுத்துவிடுவதா? தவ்ஹீத் மவ்லவிகளின் தீர்ப்பு என்ன?

இன்னும் இவைபோல் பல கேள்விகளைக் கேட்க முடியும். தவ்ஹீத் மவ்லவிகள் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல், அதாவது சர்வதேச தேதிக் கோட்டிற்கும், மார்க்கக் கடமைகளுக்கும் முடிச்சுப் போட்டது போல் நாம் முடிச்சுப் போடவில்லை. நியாயமான இன்று சர்வசாதாரணமாக இடம் பெறும் சம்பவங்கள் பற்றியே கேள்வி எழுப்பியிருக்கிறோம். இதற்கு தலைப்பிறை இரண்டு நாள் வர முடியும் என்று வாதிடுகிறவர்களிடமிருந்து சரியான பதிலை எதிர்பார்க்கிறோம்.

அடுத்து இந்த ஆக்கம் முழுவதும் தவ்ஹீத் மவ்லவிகள் என்று நாம் குறிப்பிடவது பிண நாற்றம், முறை நாற்றம் அடிக்கும் அரசியல் சாக்கடையில் மூழ்கிக் கிடக்கும் தவ்ஹீத் மவ்லவிகளையே குறிக்கும். எப்படி முகல்லிது மவ்லவிகளிலும் தேவ்பந்தி அகீதாவுடைய (தப்லீக்) மவ்லவிகள், பரேல்வி அகீதாவுடைய (தர்கா சடங்கு) மவ்லவிகள் என இரு கோஷ்டிகள் இருக்கிறார்களோ அதே போல், இந்த தவ்ஹீத் மவ்லவிகளிலும் இன்று இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றனர். ஒரு கோஷ்டி சாக்கடை அரசியலில் மூழ்கிக் கிடக்கின்றனர். மற்ற கோஷ்டி இந்த சாக்கடை அரசியலை வெறுப்பவர்கள். இந்த ஆக்கத்தில் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் பற்றி நாம் விமர்சிக்கவில்லை. அவர்கள் உலகம் முழுவதும் ஒரேயொரு தலைப்பிறையே என்பதில் தெளிவடைந்துவிட்டார்கள். இந்த அரசியல் தவ்ஹீத் மவ்லவிகளும் பிறை விஷயத்தில் தெளிவடைந்து வந்தவர்கள் தாம். இப்போது அரசியலுக்காக வெகுஜன ஆதரவை நோக்கமாகக் கொண்டு மார்க்கத்தை வளைக்கிறார்கள். இந்த ஆக்கம் முழுவதும் தவ்ஹீத் மவ்லவிகள் என்று நாம் குறிப்பிட்டிருப்பது சாக்கடை அரசியல் தவ்ஹீத் மவ்லவிகளையே என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்முபீன்: சவூதியில் பிறைபார்க்கும் போது அதற்கு மேற்கே உள்ள நாடுகள் பகலில் இருக்கும். எனவே அவை மஃரிபை அடைந்தவுடன் தலைப்பிறையை சந்திக்க முடியும். ஆனால் சவுதியை விட நேரக் கணக்கில் முன்னே இருப்பவர்கள், அதாவது கிழக்கில் இருப்பவர்கள் மஃரிபைக் கடந்து சென்றிருப்பார்களே? அவர்களுக்கு தலைப்பிறை எப்படிப் பொருந்தும்? என்பதை பக். 94 முதல் பக். 96 வரை விரிவான விளக்கத்துடன் (?) கேட்டிருக்கிறார்கள்?

அந் நஜாத்: முஸ்லிம்கள் மஃரிபை நாளின் ஆரம்பமாகக் கொண்டிருப்பதிலுள்ள நுட்பத்தை இவர்கள் விளங்கி இருப்பார்களேயானால் இப்படிப்பட்ட கோணல் ஐயங்கள் ஏற்பட்டிருக்க முடியாது. பொதுவாக ஒவ்வொரு நாடும் தான் இருக்கும் நேரத்திற்கு +12 -12 மணி என்ற ரீதியில் நேரமுடைய நாடுகளைக் கொண்டதாகவே இருக்கும். உதாரணமாக இந்தியா மஃரிபு 6 மணியிலிருக்கும் போது, அதற்கு மேற்கே உள்ள நாடுகள் பகல் பன்னிரண்டு மணி நேர ஒட்டத்திலும், கிழக்கே உள்ள நாடுகள் இரவு பன்னிரண்டு மணி நேர ஒட்டத்திலும் இருக்கும். இன்னொரு விதமாக சொல்வதாக இருந்தால் முஸ்லிம்களின் கணக்குப்படி இந்தியா புதன் பின்னேரம் வியாழனை அடையும் போது அதற்குக் கிழக்கே 12 மணி நேரத்திற்கு உட்பட்ட நாடுகள் இந்தியாவைப் போல் வியாழன் இரவிலும், இந்தியாவிற்கு மேற்கே 12 மணி நேரத்திற்குட்பட்ட நாடுகள் புதன் இரவைக் கடந்து புதன் பகலிலும் இருக்கும். எனவே இந்தியாவில் தலைப்பிறை காணப்பட்டால் அந்த இரவில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் அதுவே தலைப்பிறையாகும். அப்போது புதன் இரவைக் கடந்து புதன் பகலில் இருக்கும் நாடுகள் மஃரிபை அடையும் போது அவையும் தலைப்பிறையை அடைகின்றன.

மனிதக் கற்பனையான , 1884-ல் அமைக்கப்பட்ட சர்வதேச தேதிக் கோட்டுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து தேதி, கிழமையை வேத வாக்காக ஒப்புக் கொள்ளும் தவ்ஹீத் மவ்லவிகளுக்கு, இஸ்லாமிய அடிப்படையில் கணிக்கப்படும் தேதி, கிழமையை ஏற்பதில் என்னன சங்கடமுண்டோ தெரியவில்லை? அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கடந்த 1420 வருடங்களாக இந்த கணிப்பு முறையே முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருந்து வருகிறது. பிறை பார்த்துத்தான் செயல்படும்படி நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள் என்று பக்கத்திற்குப் பக்கம் எழுதி இருப்பவர்கள். கடந்த 1420 ஆண்டுகளாக முஸ்லிம்களிடையே இருந்து வரும் மஃரிபிலிருந்து அடுத்து மஃரிபுவரை நாள், பிறை, கிழமை எல்லாம் மஃரிபிலேயே மாறும் என்ற தொன்று தொட்ட நடைமுறைக்கு மாற்றமாக 1884-ல் ஏற்பட்டது என்று அவர்களே ஒப்புக் கொண்டுள்ள சர்வதேச கற்பனை தேதிக் கோட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து தேதி, கிழமையை நிர்ணயித்துக் கூறுவது வேடிக்கை மட்டுமல்ல. நமக்கு விளங்காத அவர்களுக்கு மட்டும் விளங்கும் புதிருமாகும்.

1884-க்கு முன்புள்ள முஸ்லிம்கள் சர்வதேச தேதிக்கோடு இல்லாத நிலையில் எதை வைத்து தேதி, கிழமையை கணக்கிட்டார்கள், இதற்குத் தவ்ஹீத் மவ்லவிகளின் பதில் என்ன?

இந்த இடத்தில் அவர்கள் இன்னொரு ஐயத்தைக் கிளப்பி மக்களைக் குழப்பலாம். அதையும் தெளிவு படுத்தி விடுகிறோம். இரவு _+6மணியிலிருந்து அதிகாலை _+6 மணி வரை _+12 மணி நேரங்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால் _+5 மணியுடன் சஹர் நேரம் முடிந்து விடுகிறது. _+5 மணியிலிருந்து _+6 வரையிலுள்ளவர்கள் அந்த இரவிலிருந்தாலும் அவர்கள் நோன்பு பிடிக்க முடியாதே? அவர்களது நிலை என்ன? என்ற ஐயத்தைக் கிளப்பலாம். உண்மைதான். அவர்கள் நோன்பு பிடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்தான். அது மட்டுமல்ல சஹர் நேரத்தின் இறுதிப் பகுதியிலிருப்பவர்கள் அந்த முதல் இரவின் இரவு வணக்கங்களையும் இழந்து விடத்தான் செய்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையைப் பாருங்கள். லைலத்துல் கத்ர் உடைய இரவு மாதத்தின் பிற்பகுதியின் ஒற்றைப்படை இரவிலும், மஃரிபிலிருந்து சஹர் நேரம் முடியும் பஜ்ர் வரையிலுமே இருக்கிறது. எனவே தலைப்பிறைச் செய்தி கிடைத்த நேரத்தில் சஹர் நேரத்திற்கு உட்பட்டு இருந்தவர்கள் நோன்பை ஆரம்பித்து அந்த முதல் இரவில் நுழைந்து விடுகிறார்கள். பஜ்ர் நேரத்தைத் தாண்டியவர்கள் நோன்பு பிடிக்காமல் அன்றைய பகல் நேரத்திலுள்ள நாட்டினருடன் சேர்ந்து கொள்கிறார்கள். “லைலத்துல் கத்ர்” இரவின் கணக்கின்படி அவர்கள் பகலைச் சந்தித்து பின்னர் அடையும் இரவே அவர்களுக்கும் தலைப்பிறை இரவாகும். ஆக பிறை செய்தி மஃரிபு _+6 மணிக்கு கிடைக்கிறதென்றால் அதிலிருந்து சஹர் நேரத்திற்குட்பட்ட _+10.45 மணி நேரத்திற்குள் ரமழான் தலைப்பிறைக்குள் நுழைந்து விடுவார்கள். ஆக ரமழான் தலைப்பிறையின் ஸஹர் நேரத்தில் இருந்தவர்கள் ஸஹர் செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் உலகிலுள்ள அனைவரும் சஹர் செய்து நோன்பை ஆரம்பித்து விடுவார்கள். சுபஹுடைய நேரத்திலிருந்தவர்கள் தலைப்பிறை இரவுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் பிறைச் செய்திக் கிடைக்கும் போது சஹர் நேரத்தில் இருந்து நோன்பு பிடித்தவர்கள் நோன்பு காலத்தை முடித்து நோன்பைத் துறப்பார்கள். அதிலிருந்து ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து ஸஹர் செய்வதும் நோன்பு திறப்பதும் இடைவிடாமல் 24 மணி நேரமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இதை முன்னரே நாம் ராட்டினம் உதாரணம் மூலம் விளக்கியுள்ளோம். ரமழான் ஒரு தொடர் ஓட்டத்தைப் போன்றதாகும். இடையில் விடுபட முடியாது.

“தலைப்பிறை 2 நாள் வர முடியும். சவூதியில் மாலை _+6 மணிக்க பார்த்த செய்தி கிடைத்தாலும் அதற்குக் கிழக்கிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் நோன்பு நோற்கக் கூடாது. காரணம் அவர்கள் பிறை பார்க்கும் வாய்ப்பு இல்லை. விடிந்து பகலாகி மாலை நேரத்தை அடைந்த பின்னரே அவர்கள் பிறை பார்க்க முடியும். அதுவே அவர்களுக்கு தலைப்பிறை என்று வாதிடுகிறவர்களின் வாதப்படி ரமழானின் தலைப்பிறை தோன்றி ரமழான் முதல் இரவு சம்பவித்தும் _+6 மணிக்கு பிறை பார்த்த சவூதிக்காரர்கள் சஹர் நேரத்தை அடையும் வரை சுமார் 10.45 மணி நேரம் சஹர் செய்யும் அமல் ஆரம்பமாகமாலேயே இருக்கிறது. அதன் பின்னரே ஆரம்பிக்கிறது. அதே சமயம் தலைப்பிறை முதல் இரவ பாக்கிஸ்தான் இந்தியா, பங்களாதேஷ் மக்களுக்கு சஹர் செய்யாமலேயே முடிவடைந்து விடுகிறது. அவர்கள் விடிந்த பகலாகி மீண்டும் ரமழானுடைய இரண்டாவது இரவாகி அதையும் கடந்து சஹர் நேரத்தை அடையும் போதே இரண்டாவது நோன்பிற்குப் பதிலாக முதல் நோன்பை ஆரம்பிக்கிறார்கள்.

தகவல் தொடர்புகள் இல்லாத காலக் கட்டத்தில் ஹஜ்ஜில் இறந்தவரின் மனைவியின் காலம் கடந்த இத்தாவை அல்லாஹ் எற்றது போல் நோன்பையும் ஏற்று இருப்பான். ஆனால் தகவல் தொடர்பு மலிந்துள்ள இந்தக் காலத்தில் தலைப்பிறை பிறந்த செய்தி அறிந்த பின்னரும் இப்படி வீம்பாக நடப்பவர்களின் நோன்பை அல்லாஹ் ஏற்பானா? அதனால் என்ன ஏற்படுகிறது? முறைப்படி தலைப்பிறை தகவல் கிடைத்தவுடன் அன்று இரவில் இருந்தவர்கள் நோன்பை முறைப்படி ஆரம்பித்து விட்டால் அவர்கள் சரியாக முறையாக பிந்திய பத்தின் ஒற்றைப்படை இரவகளில் “லைலத்துல் கத்ர்” இரவை தேடி அடைந்து கொள்வார்கள். அதற்கு மாறாக முதல் இரவில் நோன்பு பிடிப்பதை தவறவிட்டு இரண்டாவது இரவில் நோன்பை ஆரம்பிப்பவர்கள், இரட்டைப்படை இரவுகளை ஒற்றைப்படை இரவுகளாக இவர்களாக கணித்துக் கொண்டு, ஒற்றைப்படை இரவுகளில் தேடி அடைய வேண்டிய “லைலத்துல் கத்ர்” இரவை இரட்டைப் படை இரவுகளில் தேடி கிடைக்காமல் நஷ்டமடைவார்கள். என்னே கைசேதம்?

இப்போது அவர்கள் மக்களைக் குழப்புவதற்காக இன்னொரு ஐயத்தைக் கிளப்பலாம். ரமழான் பிறை கண்ட மாத்திரத்தில் ஸஹர் செய்து நோன்பு மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பவர்கள் அது போல் பிறை கண்ட மாத்திரத்திலேயே நோன்பு திறப்பதையும் ஆரம்பிக்க வேண்டுமே? என்று மக்களை சுற்றலில் விடுவார்கள். மாலை 4 மணிக்கு லண்டனில் உள்ளவர்கள் நோன்பை ஆரம்பிக் வேண்டும் என்று சொன்னவர்கள் ஆயிற்றே? இதுவும் தவறான வாதமே. தலைப்பிறை பிறந்தவுடன் ஸஹர் செய்து நோன்பை ஆரம்பிக்க முடியுமே அல்லாமல் நோன்பை எப்படி துறக்க முடியும்? நோன்பை ஆரம்பித்தவர்கள் பகல் _+13.15 மணி நேரம் கடந்த பின்னரல்லவா நோன்பு துறக்க முடியும்? தலைப்பிறை பிறந்து அது பகலைக் கடந்த பின்னர்தானே நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆரம்பித்து, அதன்பின்னரே அது தொடர் ஓட்டமாக ஒரு மாதம் நடக்க முடியும். இங்கும் அவர்களின் இரண்டாம் நாளும் தலைப்பிறை இருக்க முடியும் என்ற தவறான தத்துவமே உரிய காலத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாவதைத் தடுக்கிறது என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வார்களாக.

நோன்பு முதல் பிறைத் தகவல் கிடைக்கும் போது ஸஹர் நேரத்திலிருந்தவர்கள் நோன்பு பிடிக்க ஆரம்பித்தால் அதிலிருந்து _+13.15 மணி நேரத்திற்குப் பிறகு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விடும். ஆனால் இவர்களின் தவறான தத்துவத்தின்படி மாலை _+6 மணிக்கு பிறை பார்த்தவர்கள் 10.45 மணி நேரத்தைக் கடந்து லுஹரை அடைந்து ஸஹர் செய்தவர்களாக அடுத்து 13.15 மணி நேரம் கடந்து மஃரிபை அடையும் போதுதான் அந்த மாதத்தின் நோன்பு திறக்கும் தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகும். அதாவது பிறை பிறந்த 24 மணி நேரம் -1 நாள் கழித்தே நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இதிலும் அவர்களின் இரண்டு நாள் பிறை தத்துவம் தவறு என்பதை விளங்கிக் கொள்வார்களாக.

அல்முபீன்: நோன்பை உரிய காலத்தில் நோற்பதற்காக ரமழான் மாத இறுதியில் கண் விழித்து தலைப்பிறைத் தகவலை எதிர்பார்த்திருக்க வேண்டும். இது கஷ்டமில்லையா? தகவல் கிடைத்து தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் குற்றவாளிகளா? என்று கேட்டு ஒரு மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பக். 97.

அந் நஜாத்: ரமழான் நோன்பை நோற்கும் அக்கறையுடையவர்கள்- நோற்பவர்கள் அந்த ஒரு மாதம் சஹருக்கு விழிக்கத்தானே வேண்டும். “லைலத்துல் கத்ர்” இரவை அடைந்து கொள்ள பிந்தியப் பத்தில் ஒற்றைப் படை இரவுகளில் கண் விழித்து அமல் செய்ய வேண்டியவர்களாகத்தானே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஸஃபான் இறுதியில் கண்விழித்து சரியான தகவலை அறிந்து உரிய காலத்தில் நோன்பு நோற்று, பிந்திய பத்தின் ஒற்றைப்படை இரவுகளை சரியாக அடைந்து அமல்கள் செய்து அல்லாஹ்வின் மன்னிப்பையும் உயர் பதவிகளையும் அடைவதற்கு அரிய வாய்ப்பாக இருக்கும் ஷஃபான் 29-ல் கண்விழித்து ஆவலுடன் பிறைத் தகவலை எதிர்பார்த்திருப்பது கஷ்டமான -சிரமமான செயலாக உண்மை முஸ்லிம்களுக்கு இருக்க முடியுமா? “இது எளிமையான மார்க்கத்தை கேளிக்கூத்தாக ஆக்கியதாக கூறுபவர்களே கேளிக்கூத்தாக ஆக்கி கொண்டிருக்கிறார்கள்” என்பதை உணர வேண்டும். சோம்போறிகள் பிறைத் தகவல் கிடைத்த பின்னரும் கூட நோன்பு நோற்காமல் இருக்கவும் செய்யலாம். அதற்காக எதார்த்த நிலையை – தலைப்பிறை ஒரு நாள்தான் என்ற உண்மைக்கு மாற்றமாக தலைப்பிறை இரண்டு நாட்கள் இருக்கும் என்ற முட்டாள்தனமான சட்டத்தை விஞ்ஞான அறிவும், தகவல் தொடர்பு வசதிகளும் நிறைந்துள்ள இக்காலத்தில் நடைமுறைப்படுத்த முற்படுவதா? சிந்திப்பார்களாக.

அல்லாஹ் தனது திட்டப்படி உலகை அழிக்க மாட்டானாம். 1884-ல் மனிதர்கள் கற்பனையாக உருவாக்கியுள்ள சர்வதேச தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடி உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகை அழிப்பானாம். ஆதம்(அலை) பிறந்த தினத்தையும் இந்த 1884-ல் மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட இந்த சர்வதேச தேதிக் கோட்டை வைத்தே முடிவு செய்ய வேண்டுமாம். ஆக அல்லாஹ்வும் இந்த கற்பனை சர்வதேசக் கோட்டுக்குக் கட்டுப்பட்டவன் என்று கூறாமல் கூறுகிறார்களா? “அல்லாஹ்வுக்கும் இந்த சர்வதேசத் தேதிக் கோடு தேவை” எனக்கூறி “அவன் தேவையற்றவன்” (அல்லஹுஸ்ஸமத்) என்ற குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்களே? நபி(ஸல்) கட்டளைப்படி பிறையைக் கண்ணால் பார்த்தே செயல்பட வேண்டும் என்று உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த கற்பனை சர்வதேச தேதிக் கோட்டையும் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கும் மர்மமென்ன? இங்கு அவர்களுக்கே அவர்கள் முரண்படுவதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாதது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

அந்நஜாத்: ஜனவரி, 2000 – ரமழான், 1420

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக