வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அல்முபீன் பிறை ஓர் ஆய்வு,அந்நஜாத்தின் அலசல்-2

  • ஹதீஸில் மோசடி

அவர்கள் தங்களது அரபி புலமையைக் காட்ட எடுத்தெழுதியுள்ள ஹதீஸைப் பாருங்கள். “மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக்கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது , நபி(ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : அபூஉமைர்(ரழி)

நூல்கள் : அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீயின் அல்குப்ரா, பைஹகீ, தாரகுத்னி, அல்முன்கதா, இப்னுஹிப்பான், நஸயீ, முஸ்னத், அல்ஜஃத்

16-ம் பக்கத்தில் ஹதீஸ்களை எடுத்து எழுதியவர்கள் அவற்றின் அரபி மூலத்தையும் அவற்றிற்குப் பக்கத்திலேயே எடுத்து எழுதியிருந்தால், ஒத்துப்பார்ப்பவர்களுக்கு அது எளிதாக இருக்கும். ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புகளை மட்டும் எடுத்தெழுதி விட்டு அரபி மூலத்தை இறுதியில் தனியாகப் போட்டிருக்கிறார்கள். அதிலும் அரபு மூலங்களை மொழிபெயர்ப்பு வரிசைப்படி எடுத்துப் போடவில்லை. தமிழ் மொழி பெயர்ப்புகளுக்கு எண்ணிக்கையிட்டவர்கள், அரபி மூலத்திற்கு எண்ணிக்கை இடவில்லை. அதுமட்டுமல்ல; அரபி மூலத்தில் உள்ளபடி மொழி பெயர்க்கவும் இல்லை. உதாரணமாக, குறிப்பிட்ட ஹதீஸையே எடுத்துப் பார்ப்போம். 116-ம் பக்கம் 2-வது ஹதீஸாக குறிப்பிட்ட ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆனால், பல கிதாபுகளில் இருப்பதாக குறிப்பிடடுள்ளவர்கள் இப்னுமாஜாவில் உள்ளதை மட்டும் எடுத்தெழுதி இருக்கிறார்கள்.

அதிலும் மொழி பெயர்த்துள்ளதைப் பாருங்கள். மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக்கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். இவர்கள் மொழிபெயர்த்துள்ளபடி வாகனக்கூட்டத்தினர் காலைப் பொழுதில் வந்தனர் என்றெ பொருள்படுகிறது. ஆனால், 37-ம் பக்கம் வெளியூரிலிருந்து வந்த தகவல் என்ற தலைப்பில் இந்த ஹதீஸ் பற்றி விவரிக்கும் போது, அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும். இரவில் ஓய்வு, எடுத்துக்கொண்டால் கூட அதிகாலையில் புறப்பட்டு முற்பகலில் வந்திருக்கலாம். ஆனால், இக்கூட்டத்தினர் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அஸரிலிருந்து மஃஹரிபுக்குள் உள்ள நேரம் தான் பகலின் கடைசிப் பகுதியாகும் என்று எழுதுகிறார்கள்.

அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ள ஹதீஸில் பகலின் கடைசி நேரத்தில் வந்ததாக பொருள் கொள்ள முடிகிறதா? “எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். அப்பொழுது ஒரு வாகனக் கூட்டத்தினர் காலைப் பொழுதில் வந்ததாகத்தான் அரபி தெரியாதவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். அரபி தெரிந்தவர்கள் மட்டுமே மூலத்தைப் பார்த்து அதில் பகலின் கடைசியில் வந்ததாக இருப்பதை அறியமுடியும். அது மட்டுமல்ல, அவர்கள் எடுத்தெழுதியுள்ள அரபி மூலப்படி அவர்களது நோன்பை விட்டு விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் என்ற “அவர்களது” சொல் மூன்று இடங்களில் இல்லை.

“ஃபஅம்ருஹும்” என்று ஒர் இடத்தில் உள்ள அரபி மூலத்தை வைத்துக்கொண்டே இப்படி எழுதியிருக்கிறார்கள். “அவர்களுக்கு என்பதை அழுத்தம் கொடுத்து எழுதியிருக்கிறார்கள்” இதையாவது ஓரளவாவது ஜுரணித்துக் கொள்ளலாம். ஆனால் “ஃபஷஹிது” என்ற பதம் அரபி மூலத்தில் இருந்தும் தமிழ் மொழி பெயர்ப்பில் அதை இடம் பெறச்செய்யாமல் விட்டிருக்கிறார்கள். ஓரிடத்தில் மட்டுமல்ல அந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ள 20,37,38,39 பின் அட்டை ஆக ஆறு இடங்களிலும் “நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்” என்று எழுதியிருக்கிறார்களேயல்லாமல், “சாட்சி” கூறினார்கள் என்று எழுதவில்லை. ஏன் இதை மறைக்கவேண்டும்? ஆம் இதை மூலத்தில் உள்ளபடி எழுதியிருந்தால் அவர்களது குட்டு அம்பலாகிவிடும். அவர்கள் வேண்டுமென்ற மறைத்து இருக்கிறார்கள் என்பதை, அடுத்து அவர்கள் எழுதியுள்ள ஹதீஸ் உறதிப்படுத்துகிறது. 20-வது ஹதீஸாக எழுதப்பட்டுள்ள “மக்களுக்கு” என்று அவர்களும் ஒப்புக்கொண்டு எழுதியுள்ள ஹதீஸிலும் அதே அரபி பதம் “ஃபஷஹிது” இடம் பெற்றிருக்கிறது. அங்கு மட்டும் சரியாக மொழி பெயர்த்துள்ளார்கள். எனவே, தவறுதலாக வாகனக்காரக் கூட்டத்தினர் பற்றிய ஹதீஸில் “சாட்சி” என்ற பதம் விடுபட்டதாக எண்ணவே முடியாது. திட்டமிட்டு வேண்டுமென்ற மறைத்துள்ளார்கள் என்றே கருத முடியும். இது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸில் மோசடி இல்லையா? அவர்களே பதில் கூறட்டும்.

“அமரஹும்” , அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதைப் புதிதாகக் கண்டுபிடித்து(?) தங்களது முன்னாள் கருத்தை மாற்றிக் கொண்டவர்கள், “ஷஹிது – சாட்சி கூறினார்களா” என்ற வாசகத்தை எப்படி ஆய்வில் விட்டுவிட்டார்கள்? இப்போது சாட்சி கூறினார்கள் என்று சேர்த்து அந்த ஹதீஸை ஆய்வு செய்து பாருங்கள். அந்த ஹதீஸ் பற்றிய அவர்களது ஹிமாலய ஆய்வுகள் அனைத்துமே தரைமட்டமாகி விடும். பிறை தெரியாமல் நோன்பு நோற்றிருந்த மதீனா வாசிகள் நோன்பை விடுவதற்காகவே அவர்கள் சாட்சி கூறியுள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகவே விளங்கிவிடும். வாகனக்காரர்கள் பிறைப் பார்த்துப்பிடித்த நோன்பை அடுத்த பிறைப் பார்த்தும் விடாமல் பிடித்துக் கொண்டு, நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்க வந்திருந்தால் பிறை பார்ப்பதற்கு சாட்சி கூறியதாக ஒரு போதும் வரமுடியாது. மார்க்கத்தெளிவு பெற வந்த எந்தக்கூட்டத்தினரும் “ஷஹிது” என்று அதாவது “சாட்சி” கூறினார்கள் என்று வரும் ஒரேயொரு ஹதீஸையாவது காட்டுவார்களா?

இன்னும் இவர்களது 120-பக்க ஆய்வை அலச, அலச பல முரண்பாடுகளே வெளி வருகின்றன. வாகனக் கூட்டத்தினர் ஓர் இரவு பகல் பிரயாணம் செய்து நீண்ட தூரம் கடந்து பிறை பார்த்த மறுநாள் மாலை மதீனாவை அடைந்துள்ளனர். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டு இருந்தால், அவர்கள் மறுநாளும் பெருநாள் தொழுகை தொழ முடியாது; பிரயாணத்தில் இருப்பார்கள். அன்று மாலையே சொந்த ஊரை அடைந்து நான்காவது நாள் காலையில்தான் பெருநாள் தொழுகை தொழ பெருநாள் திடல் செல்ல முடியும். இப்படி ஒரு அறிவீனமான கட்டளையை நபி(ஸல்) அவர்கள் பிறப்பித்திருக்க முடியுமா? மேலும் ஹதீஸில் வாகனக்கூட்டத்தினர் என்றுள்ளதேயல்லாமல், வெளியூர் வாசிகள் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. உள்ளூர்க்காரர்கள் வெளியூருக்கு வியாபார நோக்கோடு வாகனத்தில் பிரயாணம் செய்து அங்கிருக்கும் போது பிறையைப் பார்த்துவிட்டு அந்த செய்தியைச் சொல்ல அவசர அவசரமாக புறப்பட்டு மறுநாள் மாலை மதீனாவை அடைந்து சாட்சி கூறியிருக்கவும் வாய்ப்புள்ளது. அன்று அரபுகளுடைய வழக்கத்தில் அடிக்கடி வெளியூருக்கு வியாபாரத்திற்காக சென்று வருபவர்களையும், “வாகன கூட்டத்தினர்” என்று கூறுவதும் உண்டு. அதாவது, மதீனாவிலிருந்து சிரியாவிற்கு குரைப் அவர்கள் சென்றிருந்த சமயம் அங்கே பிறை பார்த்ததை மாதக்கடைசியில் மதீனா வந்து சொல்வதைப்போல் , இந்த ஹதீஸில் சாசட்சி சொன்னதாக இல்லை என்பதையும் கவனிக்கவும். சாதாரணமாக விஷயத்தைச் சொல்வதற்கும் சாட்சி சொல்வதற்கும் உள்ள பாராதூரமான வித்தியாசத்தை விளங்க முடியாத பாமரனும் இருக்க முடியாது. எனவே “அமரஹும்” என்று அந்த ஹதீஸில் வந்திருந்த போதிலும் பொதுவாக மக்களுக்குக் கட்டளையிட்டதாக விளங்கும் போது, இந்த முடிச்சுகள் அனைத்தும் அவிழ்ந்து விழுகின்றன. தவ்ஹீது மவ்லவிகள் பொருள் கொண்டிருப்பதைப்போல் அந்த வாகனக்கூட்டத்தினருக்கு ஒரு நாளாகவும், மதீனா வாசிகளுக்கு வேறோரு நாளாகவும் உண்மையிலேயே இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக தெளிவாகவே குறிப்பிட்டுக் கூறியிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் எதையுமே மிகத்தெளிவாக விளங்கும் முறையிலேயே சொல்லும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ஜனங்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு விசயத்தை இருமுறை, மும்முறை கூட திரும்பத் திரும்பச் சொல்லும் பழக்க வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் மறுக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த தவிஹீத் மவ்லவிகளின் ஹிமாலய ஆய்வுக்குப்பின் கண்டு பிடித்துச் சொல்லும் நிலையில் இந்த ஹதீஸ் இல்லை. இது பொதுவாக மக்களுக்கு இட்ட கட்டளையே அல்லாமல் குறிப்பாக வாகனக்காரர்களுக்கு இட்ட கட்டளை இல்லை என்பதே சரியாகும்.

இதற்கு முன்னரும், பல விஷயங்களில் தங்களின் அரபி புலமையைக் காட்டி விதண்டாவாதங்கள் செய்ததை முன்பு குறிப்பிட்டுள்ளோம். ஆனால், தம்பிமார்களை ஏமாற்ற ஒன்றை கன கச்சிதமாக அறிந்து வைத்துள்ளார்கள். இவ்வளவு நாளும் தவறாக விளங்கியிருந்தோம்; நாங்களும் மனிதர்கள் தாம், இப்போதுதான் சரியான பொருள் புரிகிறது என்று எழுதி விடுகிறார்கள். உடனே தம்பிமார்கள் அவர்கள்தான் தங்கள் தவறை உணர்ந்து விட்டார்களே என்று தப்புத்தனம் போடுகிறார்கள். தவறுவது மனித இயல்பு. ஆனால் தவறுவதே மனித இயல்பு என்று ஆக்கி விடாதீர்கள். தேவையற்ற மன்னிப்புகளுக்கு தேவை இராது. அரபி மொழியில் உள்ளதை அரபியைக் கரைத்துக் குடித்த பண்டிதர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் இவர்கள் முன்பு எப்படித் தவறாக விளங்கினார்கள்? என்பதை தம்பிமார்கள் சிந்திக்க வேண்டும். அரபி மொழியில் நாங்கள் அரைகுறை; அதனால் முதலில் தவறாக விளங்கியிருந்தோம். இப்போது சரியாக விளங்கி விட்டோம் என்று சொல்லட்டும். அப்போதாவது அவர்கள் கூற்றை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளலாம். அரபி மொழியில் அரைகுறையாக இருப்பவர்கள் கூட அரபி அகராதியைப் புரட்டி சரியான பொருளை முயற்சித்தால் விளங்க முடியும். எனவே அவர்களிடம் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்கள் மேக மூட்டத்தால் பிறை தெரியாமல் நோன்பு நோற்றுக் கொண்டு காலைப் பொழுதைச் சந்தித்த நபி தோழர்களுக்கு நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்களா? அல்லது ஷவ்வால் பிறையைப் பார்த்த பின்னரும், ரமழான் பிறை பார்த்தவுடன் நோன்பு நோற்க வேண்டும் என்று தெரிந்த நோன்பு நோற்றவர்கள், ஷவ்வால் பிறையைப் பார்த்த பின்னர் நோன்பை விட வேண்டும்; நோன்பு பிடிப்பது ஹராம் -கூடாது என்ற விவரங்களை, அதுவும் நோன்பு கடமையானவுடன் அறிவிக்கப்பட்ட ஆரம்ப ஹதீஸ் “பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்” என்று இரண்டையும் சேர்த்து போதிக்கப்பட்ட நிலையில், பாதியைத் தெரிந்து மற்றப் பாதியை தெரியாமல், நோன்பு நோற்றவர்களாக வந்த வானகக் கூட்டத்தாரை நோன்பை விடும்படி சொன்னார்களா? என்பதை விவாதித்து ஒத்தக் கருத்துக்கு வருவது சந்தேகமே. 19-வது ஹதீஸாக எடுத்தெழுதியுள்ள ஹதீஸின் நிலை இதுதான். 20-வது ஹதீஸாக பக்கம் 20-ல் எடுத்தெழுதியுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

ரமழான் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழும் திடலுக்கு செல்லுமாறும் கட்டளையிட்டனர். அறிவிப்பவர் : ரிப்யீ பின் கிராஷ் நூல் : அபூதாவூத்

நாம் அந் நஜாத் 1996 பிப்ரவரி இதழ் பக்கம் 7-ல் இந்த ஹதீஸை வைத்துத்தான் பிறையைக் கண்ணால் கண்டுதான் செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; பிறைத் தகவலை ஏற்றும் செயல்படலாம் என்பதை விளக்கியிருந்தோம், அவர்கள் சர்ச்சைக் குள்ளாகியிருக்கும் ஹதீஸை அப்போது ஆதாரமாகத் தரவும் இல்லை. ஆய்வுக்கு எடுக்கவும் இல்லை. இப்போது இந்த 20 வது ஹதீஸில் அவர்கள் கிளப்பியிருக்கும் சந்தேகங்களில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்போம். அந்த ஹதீஸில் நோன்பை விடுமாறும் தொழும் திடலுக்கு செல்லுமாறும் நபி(ஸல்) அவர்கள் “மக்களுக்கு” கட்டளையிட்டார்கள் என்பதில் அவர்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை; ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தூரத்திலிருந்து வரவில்லை, நகரத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் யூகம். இது அவர்களின் யூகமே அல்லாமல் ஹதீஸ் ஆதாரம் இல்லை. உண்மையில் அவர்கள் கற்பனை செய்துள்ளதைப் போல் மூன்று மைல் தொலைவில் உள்ளவர்களாக இருந்தால் பிறை பார்த்த இந்த முக்கிய செய்தியைப் பிறை பார்த்த ஒரு மணி நேரத்தில் வந்து சொல்லிவிட முடியும். இதை “அருகில் உள்ள ஊரிலிருந்து வந்திருந்தால் பிறை பார்த்தவுடன் அன்றிரவே வந்திருக்க முடியும்” என்று அவர்களும் ஒப்புக்கொண்டு பக்கம் 37-ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அன்றைய அரபிகள் நடப்பதிலும், இரவில் பிரயாணிப்பதிலும் சளைத்தவர்கள் அல்லர். ஆனால் மஃரிபில் பிறை பார்த்தவர்கள் நகரத்து வாசிகள் 30-வது நோன்பை ஆரம்பித்து விடிந்த பின்னரே வந்துள்ளனர். அவர்கள் எழுதியிருப்பதைப் போல் பிறைச் செய்தியைச் சொல்லும் ஆர்வமுடன் வேகமாகத்தான் நடந்து வந்திருக்க வேண்டும். சாதாரணமாக இரவு முழுவதும் நடந்திருந்தால் எவ்வளவு தூரத்திலிருந்து நடந்து வந்திருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அவர்கள் கற்பனை செய்துள்ளதைப் போல் மாற்றுக் கருத்துடையவர்களுக்கும் கற்பனை செய்யும் உரிமை உண்டு என்பதை அவர்களும் மறுக்க மாட்டார்கள். மஃரிபில் பிறை பார்த்து இரவு முழுவதும் நடந்து விடிந்து வந்தவர்கள் 3 மைல் தூரத்தில் இருந்து வந்தவர்கள் என்பது அவர்களது கற்பனை. இல்லை ஓரிரவு முழுவதும் நடந்து இருக்கிறார்கள். கணிசமான தூரம் இருக்கும் என்பது எங்களின் கற்பனை. இரண்டிற்குமே ஹதீஸ் ஆதாரம் இல்லை. எதை ஏற்பது? எது அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்களது சொல் மிகத்தெளிவாக இருக்கும். அதில் யூகம் செய்ய வேண்டியதன் அவசியமே இருக்காது. இந்த தவ்ஹீது மவ்லவிகள் கூறுவதைப் போல் பிறைத்தகவலை ஏற்பதற்கு தூரம் ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தால், நிச்சயமாக நபி ஸல் அவர்கள் வந்தவர்களிடம் அதைக் கேட்டு அறிந்த பின்னரே நோன்பை விடுமாறு கட்டளயிட்டு இருப்பார்கள். நமக்கும் தூரம் நிபந்தனையாகும், கவனிக்கப்பட வேண்டும், என்பது , தெளிவாகியிருக்கும். வெளியூரிலிருந்து வந்த கிராமவாசிகளிடம் தூரத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கேட்காததே பிறைத் தகவலுக்கு தூரம் கவனிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையில்லை என்றே நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு விளங்கும். மேலும், 19-வது ஹதீஸுக்கும் 20-வது ஹதீஸுக்கும் முரண்பாடும் இல்லை. முன்னையது அதிக தூரம் பின்னையது குறைந்த தூரம் என்பதெல்லாம் இவர்களின் சொந்த யூகமேயல்லாமல் இரண்டு ஹதீஸ்களிலும் தூரத்தைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. எனவே தூரம் நிபந்தனையாக முடியாது என்பதும் புரியும்.

19-வது ஹதீஸில் “மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்” என்ற ஆரம்பமே செய்தி அவர்களைப் பற்றியது தான், மற்றபடி வாகனக் கூட்டத்தினர் பற்றியது அல்ல என்பதை மறுத்து நோன்பை விடும்படி வாகனக் கூட்டத்தினருக்குத் தான் சொல்லப்பட்டது என்று அவர்கள் வாதிப்பதும் நடுநிலையோடு சிந்திப்பவர்கள் ஏற்க முடியாத வரட்டு வாதமாகும்.

இவர்கள் ஹதீஸின் அர்த்தத்தை தப்பர்த்தம் செய்து கொண்டு கிராமம், நகரம், பிறைச் செய்தியை ஏற்க இத்தனை கி.மீ. தூரம் என்றெல்லாம் கற்பனை செய்திருப்பதும், இரண்டு கிராம வாசிகள் வந்து பிறை கண்ட செய்தியைச் சொன்னதும் நபி(ஸல்) அவர்களும், தோழர்களும் நோன்பை முறித்த ஹதீஸ் வானகக் கூட்டத்தாரின் ஹதீஸுக்கு முரண்பட்டதல்ல என்று இவர்கள் விளக்கம் கொடுத்திருப்பதும் இவர்களின் சொந்தக் கற்பனையே அல்லாமல் மற்றபடி இந்த அவர்களின் கற்பனைக்கு எந்த வித ஹதீஸ் ஆதாரத்தையும் தரவில்லை என்பதை வாசகர்கள் அறிந்து கொள்வார்களாக.

குரைப் அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் சிரியாவில் பிறை கண்ட செய்தி அந்த மாதத்தின் இறுதியில் கிடைத்த காலம் கடந்த செய்தியே அல்லாமல் உரிய காலத்தில் சுடச்சுட கிடைத்த செய்தி அல்ல. எனவே அந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து உடனடியாகச் சுடச்சுட கிடைக்கும் செய்தியையும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவதும் ஏற்புடையதல்ல.

அவர்களின் அல்மூபீன் இதழின் 51-ம் பக்கத்தில் “தனித்தனி நபர்கள் பார்க்க வேண்டியதில்லை என்றால் உலகத்துக்கே ஒருவர் பார்த்து அறிவிப்பது போதுமா? ஊருக்கு ஊர் யாராவது பார்த்தால் போதுமா? எவ்வாறு பொருள் கொள்வது? இவ்வாறு இரண்டு கருத்துக்கள் கொள்ளவும் இந்த வாசக அமைப்பு இடம் தருகிறது. ஆனாலும் முதலாவது கருத்தை கொள்வதற்கு நமக்குத் தடை உள்ளது. உலகில் யாராவது பார்த்தால் போதும் என்றால் உலமெங்கும் ஒரே நாள் என்ற தத்துவம் நிலை பெறும். அதனால் மாதம் 28 நோன்பு வரக்கூடும். மேலும் நாம் இதுவரை எடுத்துக் காட்டிய சான்றுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் நிலை ஏற்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்நஜாத்: இந்த அவர்களின் கூற்றுகள் அனைத்தும் அவர்களின் ஆயிவின் கோளாறே என்பதை தெளிவாக முன்னரே விளக்கியிருக்கிறோம். உலகமெங்கும் ஒரே நாள் என்ற தத்துவம் நிலைபெறுவதால், மாதததின் பிறைக் கணக்கில் 28 நோன்பு வரக் கூடும் என்ற அவர்களின் கண்டுபிடிப்பு தவறு என்பதை நிரூபித்து உள்ளோம். அப்படி ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஷஃபானின் கடைசிப்பகுதியில் இருக்கும் மக்களை ரமழானின் முதல் பகலில் இருப்பதாக தப்புக் கணக்குப் போட்டதின் விளைவே இத்தவறான கூற்று என்பதை அறிந்துக் கொள்வார்களாக. முஸ்லிம்களின் பிறைக் கணக்கு இரவில் ஆரம்பித்து பகலில் முடிவடைகிறது. இதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் ஆய்வு செய்ததின் விளைவே இந்த தவறான முடிவு. எனவே அவர்களின் கூற்றுப்படியே உலகத்தின் ஒரு பகுதியின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பே முழு உலகுக்கும் போதுமானதாகும். பிறை கண்ட தகவல் கிடைக்கும் போது இரவில் இருப்பவர்கள் விடிந்ததிலிருந்து நோன்பை ஆரம்பிப்பார்கள். பகலில் இருப்பவர்கள் ஷஃபானின் கடைசிப் பகலில் இருப்பதால் அவர்கள் ரமழானின் இரவை அடைந்து பின்னர் விடியும் போது நோன்பை நோற்பார்கள். இந்த நிலையில் லண்டனில் இருப்பவர்கள் மாலை 4மணிக்கு நோன்பு ஆரம்பிப்பார்களா? பகலில் சஹர் செய்யும் அதிசயம் இந்த தவ்ஹீத் மவ்லவிகளிடமிருந்தே கேள்விப் படுகிறோம்.எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு நோற்கும் வாய்ப்பு ஏற்பட்டு முஸ்லிம்கள் ஒன்று படுவார்கள். தலைபிறையின் காலம் ஒரு இரவு+பகல் ஆக ஒரு நாள் மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்வார்களாக. மார்க்கத்தில் பிறை பிறந்தததை அறிந்து நோன்பை ஆரம்பிக்க இரண்டு வழி முறைகள் ஷரீஅத்தில் உண்டு என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒன்று பிறையை கண்களால் நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்வது; இன்னொன்று பிறை கண்ட தகவல் ஆதாரப்பூர்வமாக கிடைப்பதை ஏற்றுக் கொள்வது. இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டு புதுப்புது மஸ்அலாக்கள் உருவாக்க முற்படுவது ஹிமாலய தவறு என்பதை இந்த மவ்லவிகள் அறிந்து கொள்வார்களாக.

மாதத்தின் 29-வது நாள் முடிவடைந்தவுடன் பிறையைப் பார்க்க முற்படுவது, தென்படாவிட்டாலோ, மேகமூட்டமாக இருந்தாலே 30 ஆக நிறைவு செய்வது; அந்த சமயத்தில் இரண்டாம் பிறை, 3-ம் பிறை என்று வீணாக சண்டைச்சச்சரவில் ஈடுபடுவது கூடாது, பிறையைப் பார்க்கும் வரை மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியது இவை அனைத்தும் தகவல் தொடர்புகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் மக்களிடையே வீண் சச்சரவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு விளவு ஏற்படுவதை தவிர்ப்பதற்காகத்தான். விஞ்ஞான வளர்ச்சியும், தகவல் தொடர்புகளும் மிகமிக அதிகமாக அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில், உலகின் எந்த மூலையில் பிறை தென்பட்டாலும் அந்த தகவல் உலகின் எந்த மூலையில் பிறை தென்பட்டாலும் அந்த தகவல் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் அடுத்த சில வினாடிகளிலேயே கிடைத்து விடும் சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் தலைப்பிறையை மறுத்து இன்று விவாதம் செய்வதே மக்களிடையே வீண் சச்சரவுகளையும், சண்டைகளையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தி பிளவுகளையும் தோற்றுவிக்கும் என்பதை இந்த மவ்லவிகள் உணர வேண்டும்.

உதாரணமாக 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி டவுனில் ஒரு நாளும், முசிறியில் பிரிதொரு நாளும், லால்குடியில் வேறு ஒரு நாளும் பிறைப் பார்த்து நோன்பு வைத்திருப்பார்கள்; பெருநாள் கொண்டாடியிருப்பார்கள். ஆயினும் மற்ற ஊர்களில் பிறை பார்த்த தகவல் தெரியாததால் உள்ளூரில் எந்தவித கருத்து மோதலும் ஏற்பட வழியே இல்லை. அதற்கு மாறாக அந்த ஊரிலேயே, இது முதல் நாள் பிறை, 2-ம் நாள் பிறை, 3-ம் நாள் பிறை என்ற சர்ச்சையே கருத்து மோதலை ஏற்படுத்த முடியும். எனவே அவற்றிற்கு தடை விதித்து நபி(ஸல்) கட்டளையிட்டார்கள்.

ஆனால் இன்று நிலை அதற்கு நேர் மாறாக இருக்கிறது. திருச்சி மாவட்டம் அல்ல உலகின் எந்த மூலையில் பிறை தென்பட்டாலும் அந்த தகவல் உலகின் மற்ற பகுதிகள் அனைத்துக்கும் சில வினாடிகளிலேயே கிடைத்துவிடும். எனவே இன்று, “அந்த ஊரில் பிறைப் பார்த்து விட்டார்கள். அவர்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள். இங்கு நாம் பிறைப் பார்க்கவில்லை. எனவே நாம் பெருநாள் கொண்டாடக் கூடாது என்று தடை விதிப்பதாலேயே வீண் சண்டை சச்சரவுகளும், கருத்து மோதல்களும், பிளவுகளும் ஏற்பட வழி வகுக்கும். எனவே எந்தவித செய்தி தொடர்பும் இல்லாத அக்கால சூழ்நிலையை, செய்தித் தொடர்புகள் மிக மிக மலிந்துள்ள இக் காலக்கட்டத்தில் நிலை நிறுத்த முற்படுவது, முகல்லிது மவ்லவிகள் தமிழ் பேசும் மக்களிடையே அரபியில் (குத்பா) பிரசங்கம் செய்யும் நிலையையும், அப்போது தடியையோ, வாளையோ வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையையும் ஒத்திருக்கிறது என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் உணர்வார்களாக. தங்களின் நிலையை மாற்றிக் கொள்வார்களாக.

கிரகணத் தொழுகை

அடுத்து கிரகணத் தொழுகையை தலைப் பிறையோடு சம்பந்தப்படுத்தி மூன்று பக்கங்களை நிரப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிரகணங்களைப் பற்றிய தெளிவான ஞானம் இல்லாததால் இவ்வாறு எழுதியுள்ளார்களோ என்று எண்ணவும் முடியவில்லை. காரணம் அவர்களது ஆய்வில் வானியல அறிஞர்களும் (?) இடம் பெற்றதாக அறிவித்துள்ளார்கள். கிரகணங்கள் சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுவதாகும். சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ அதிகபட்சம் சில மணித்துளிகளே நீடித்து இருக்கும். அமாவாசையை கிரகணங்களுடன் ஒப்பிட்டு இருந்தாலும் சிறிதாவது பொருத்தமாக இருக்கும். பிறை அப்படியல்ல. தலைப் பிறை வெளியானதிலிருந்து 29 நாட்களுக்குப் பின்னரே பிறை மறைந்து மீண்டும் அமாவாசை ஏற்படும். எனவே ஒரு சில மணித் துளிகள் இடம் பெறும் கிரகணத்தோடு ஒரு மாதத்திற்கு நிலைத்து நிற்கும் சந்திரனை எந்த எண்ணத்தோடும் ஒப்பீடு செய்தார்களோ தெரியவில்லை. ஒரு சில மணித்துளிகளே இடம் பெறும் கிரகணம் எந்த நாட்டில் காணப்படுகிறதோ அங்கு மட்டுமே கிரகணத் தொழுகை தொழ வேண்டும். மற்ற பகுதிகளில் கிரகணம் தெரியவும் செய்யாது. அப்பகுதிளில் தொழ வேண்டியதுமில்லை. ஆனால் தலைப் பிறைக்கும் கிரகணத் தொழுகை சட்டத்தைச் சொன்னது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்று சொல்வார்களே, அது போன்றதாகும். தலைப்பிறையை கிரகணத்தோடு ஒப்பிட்டு இவர்களோடு இருக்கும் வானியல் அறிஞர்கள்(?) தவிர வேறு வானியல் அறிஞர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். உதாரணமாக சவூதியில் 6.30 மணிக்கு பிறைப் பார்த்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியாவில் இரவு 9 மணி சவூதிக்காரர்கள் 6.30 மணிக்கு பிறைப் பார்த்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியாவில் இரவு 9 மணி. சவூதிக்காரர்கள் 6.30 மணிக்கே பிறையைக் கண்ட ரமழான் மாதத்தை அடைந்துள்ளதை அறிகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள நாம் மாலை 6.30 மணிக்கு இரவில் நுழைந்தாலும் பிறை தெரியாததால் ரமழான் மாதத்தை அடைந்து விட்டோம் என்பதை அறியாமலேயே அந்த ரமழான் இரவில் நுழைகிறோம். இரவு 9 மணிக்கு சவூதியில் பிறை கண்ட தகவல் கிடைத்தவுடன், நாமும் அந்த ரமழான் மாதத்தின் முதல் இரவில் இருப்பதை உணர முடியும். காரணம் அமாவாசையாக இருந்து 2.30 மணி நேரத்தில் திடீரென்று பிறை பிறந்து விடவில்லை. பிறை பிறந்து கண்ணுக்கு தெரியாமலிருந்து பின்னரே கண்ணுக்கு தெரிய வருகிறது.

எனவே இந்தியாவில் 6.30 மணிக்கு பிறை பிறந்துள்ளதை பார்க்க முடியாமல் அந்த இரவில் நுழைந்து விட்டோமே அல்லாமல், பிறை பிறக்காத நிலையில் நுழையவில்லை. அந்த இரவின் சுபுஹு சாதிக் கரை சஞ்சரித்துக் கொண்டிருக்கும் எல்லா நாடுகளும், அவர்கள் பிறையை பார்க்காவிட்டாலும் ரமழானின் முதல் இரவில் இருப்பதை சவூதியிலிருந்து பிறை தகவல் கிடைத்தவுடன் அறிந்து கொள்கிறார்கள். இப்போது இந்த மாலை 6.30 மணிக்கும் சுபுஹு சாதிக் நேரத்திற்கும் இடைப்பட்ட நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் ரமழானின் முதல் இரவில் இருந்தாலும் அவர்கள் சஹர் செய்து நோன்பு ஆரம்பிக்கும் நேரம் மாறுபடவே செய்யும். சுபுஹு சாதிக் நேரத்திற்கு மிகச் சமீபமாக இருப்பவர்கள் உடனடியாக சஹர் செய்வார்கள். அதிலிருந்து தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சஹர் செய்யும் நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். அவர்கள் சஹர் செய்யும் போது இந்தியருக்கு இரவு 9 மணி . சவூதிகாராகளுக்கு மாலை 6.30 மணி. அதை அடுத்து அடுத்து சமீபமாக இருப்பவர்கள் சஹர் செய்வார்கள். இந்த வரிசைப்படி இந்தியர்கள் 71\2 மணிநேரத்திற்குப் பின் சஹர் செய்வார்கள். சவூதிக் காரர்கள் சஹர் செய்வது 10 மணி நேரத்திற்கு பிறகு இடம் பெறும். இதே வரிசையில் ஷஃபானின் கடைசிப் பகுதியில் இருந்தவர்கள் ரமழான் முதல் இரவில் நுழைந்து சஞ்சரித்து சஹர் நேரத்தை அடையும்போது அவர்கள் சஹர் செய்வார்கள். ஆக ரமழான் பிறை தெரிந்ததிலிருந்து சஹர் செய்வது 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும் . முதலில் சஹர் செய்தவர்கள் +131\4 மணி நேரம் கழித்து நோன்பு திறப்பார்கள். அதிலிருந்து நோன்பு திறப்பதும் ஒரு மாதத்திற்கு தொடர் நிகழ்ச்சியாக இருக்கும். ஆக ரமழான் முழுவதும் இந்த தொடர் ஓட்டம் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த நிலையில் முதல் பிறையை கிரகணங்களோடு போய் ஒப்பிடடு தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பியிருக்கிறார்களே இது இறையச்சம் உடைய செயல்தானா?

இஸ்லாமிய மாதக் கணக்குப்படி மாதத்தின் முதல் நாளின் ஆரம்பம் இரவாகவும், நாளின் பிற்பகுதியே பகலாகவும் இருக்கும், என்ற சாராதண அறிவு கூட இந்த தவ்ஹீத் மவ்லவிகளுக்கு இல்லையே. அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் இரவை முற்படுத்தியும் பகலை பிற்படுத்தியும் (லைலிவன்னஹார்) குறிப்பிடுவதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் அறியாதவர்களா? (பார்க்க : 2:164,274, 3:27,190, 6:13, 7:54, 10:6,67, 13:3,10, 14:33, 16:12, 17:12, 20:130, 21:20,33,42, 22:61, 23:80, 24:44, 25:62, 30:23) அந்தோ கைசேதம்! ரமழான் பிறை கண்ட செய்தி கிடைத்தவுடன் ஷஃபான் இறுதிப் பகலில் இருக்கும் லண்டனிலும், அங்காரா (அமெரிக்கா)விலும் நோன்பு நோற்க ஆரம்பிக்க வேண்டும் என்று கற்பனை செய்துள்ளார்களே? ரமழான் தலைப் பிறை பிறந்தவுடனேயே ரமழானின் பகல் எப்படி ஏற்படமுடியும் என்ற சாதாரண பாமர அறிவு கூட இல்லாமலா இவ்வளவு பெரிய ஹிமாலய ஆய்வை மேற்கொண்டார்கள்? இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒரே நாளில்பிறை என்றால் சிலருக்கு 28 நாட்களே நோன்பு கிடைக்கும் என்று வேறு அதிகப் பிரசங்கிததனமாக மக்களை குழப்பி இருக்கிறார்கள். உண்மையை உணர்ந்து அவர்கள் வாக்களித்தது போல் சத்தியத்தை ஏற்பார்கள் என்றே எதிர் பார்க்கின்றோம்.

அந்நஜாத்: ஜனவரி, 2000 – ரமழான், 1420

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக