வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அல்முபீன் பிறை ஓர் ஆய்வு – அந்நஜாத்தின் அலசல்-1

அல்முபீன் நவம்பர், டிசம்பர் இரட்டை இதழை பிறை ஒர் ஆய்வு என்ற தலைப்பில் 120 பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

அல்முபீன்: “மாற்றுக் கருத்துடையோர் தங்கள் கருத்தே சரியானது என்று கருதுவார்களானால் அதை எங்கள் முன்னே நிரூபித்து, எங்களையும் அந்த உண்மையின் பால் திருப்பும் கடமை அவர்களுக்கு உண்டு. அவர்கள் கூறுவது தவறாக இருந்தால் தங்களைத் தாங்களே அவர்கள் திருத்திக் கொள்ளும் கடமையும் அவர்களுக்கு உள்ளது. அழகான முறையில் விவாதித்து நல்ல கருத்தை அடைய முன்வருமாறு மாற்றுக் கருத்துடையோரை அழைக்கிறோம்” பக்கம் -110.

அந்நஜாத்: அல்முபீன் இதழில் இவ்வாறு அழைப்பு விட்டிருக்கின்றனர். எனவே பிறை பற்றிய அவர்களின் ஆய்வை அலசும் கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அல்முபீன்: “முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளைத் தீர்மானிப்பதில் பிறை முக்கியமான பங்கு வகிக்கின்றது. இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் சதுதாயத்திற்கு உள்ளது” பக்கம் -5.

அந்நஜாத்: இவ்வாறு அவர்கள் தங்கள் ஆய்வை ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் இரண்டாவது கருத்து முஸ்லிம்களில் யாருக்குமே இருக்க முடியாது. இந்த மணியான வாசகத்தை அடிப்படையாக வைத்தே அலசலை ஆரம்பிக்கிறோம்.

அல்முபீன்: “உண்மை எதுவோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அது இதுவரை நாம் கடைபிடித்து வந்த முடிவுகளுக்கு மாற்றமாக இருந்தாலும் கவலையில்லை என்பதை ஒவ்வொரு நேரத்திலும் கவனத்தில் கொண்டோம்” பக்கம் -6.

அந்நஜாத்: இந்த அவர்களின் உறுதிமொழி எங்களின் அலசலை அவர்கள் ஆய்வு செய்வதற்கும் பொருந்தும் என்று நம்பிக்கை வைக்கிறோம்.

அவர்களின் ஆய்வின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருப்பவை தக்லீதின் மயக்கத்தை உண்டாக்குகின்றன என்று நினைக்கிறோம். 1986 -ல் முகல்லிது மவ்லவிகளுடன் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள கோட்டாற்றில் நடத்திய முனாழராவில் முகல்லிது மவ்லவிகள் லாரி லாரியாக கிதாபுகளைக் கொண்டு வந்து அடுக்கி இருந்தார்கள். மவ்லவிகள் மட்டுமே விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள்.அவர்களின் இந்த நடவடிக்கைகளை அன்று கிண்டல் செய்த இந்த தவ்ஹீத் மவ்லவிகள், இன்று மவ்லவிகளின் பட்டியலையும், 141 அரபு நூல்கள் மற்றும் 11 ஆங்கில நூல்களின் பட்டியலையும் வெளியிட்டிருப்பது எதை நோக்கமாகக் கொண்டது என்பது அவர்களுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.

உண்மையாக கருத்தைக் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அவர்கள் மாதா மாதம் சரியாக 15-ம்தேதி வெளிவரும் அல்முபீனை நவம்பர் 15-லேயே உரிய காலத்தில் வெளியிட்டிருந்தால், நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்னரே மாற்றுக் கருத்துடையோரின் இது பற்றிய கருத்துக்களையும் மக்கள் பார்த்து சரியான கருத்தை எடுத்து சரியான தினத்தில் நோன்பை ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். நாலம் தாழ்த்தி- நோன்பு ஆரம்பிக்கும் சமயத்தில் வெளியிடுவதின் மூலம் மாற்றுக் கருத்துடையவர்களின் மறுப்பை மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமலேயே நோன்பை ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்ல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று தெளிவடைந்த மக்களிடையே இவர்கள் முன்னின்று கட்டிய ஜாக் பள்ளிகளிலேயே சண்டை சச்சரவுகளும், கடும் வாக்குவாதங்களும் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டன. இதன் உண்மைக் காரணத்தையும் அவர்களே நன்கு அறிவார்கள். இப்படிப்பட்ட பல நெருடல்கள் இருந்தாலும் சத்தியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும். 51:55-ல் எல்லாம் வல்ல அல்லாஹ் உறுதிபடுத்துயிருப்பது போல் முஃமின்கள் இந்த அவர்களின் ஆய்வையும், அது பற்றிய எங்களின் அலசலையும் கோபதாபமோ, விருப்பு வெறுப்போ இன்றி நடுநிலையோடு பரிசீலித்து சத்தியம் எதுவோ இதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இந்த இதழை வெளியிடுகிறொம்.

தவ்ஹீத் மவ்லவிகள் ஆய்வின் ஆரம்பமாக அல்குர்ஆனின் 12 இறைவாக்குகளையும், 30 ஹதீஸ்களையும் எடுத்து எழுதி இருக்கிறார்கள். அவற்றில் 2:185 வது இறைவாக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக “எவர் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்”. என்ற பகுதியை மட்டும் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

அல்முபீன்: தேவையில்லாமல் ஒரு எழுத்துக் கூட அதில் இடம் பெறாது என்பதிலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு”

எனவே அவர்கள் குறிப்பிட்டிருப்பது உண்மையான கூற்றே ஆகும். அதிலும் “உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ” என்ற வாசகத்தை தெளிவுபடுத்த பல பக்கங்களில் பல ஆயத்துகளை எடுத்து எழுதி அவற்றின் சொற்றொடர்களை அலசி நோன்பை அடைவதிலும் இரண்டு சாரார் இருக்க முடியும் என் று நிலை நாட்டி இருக்கிறார்கள். அவர்கள் என்ன கூறு முயற்சித்துள்ளார்கள் என்றால் ஒரு சாரார் முதல் நாள் நோன்பை ஆரம்பித்தால், இரண்டாவது சாரார் அடுத்த நாள் நோன்பை ஆரம்பிப்பதையே இந்த வசனம் கூறுகிறது என்பதை நிலைநாட்டவே இவ்வளவு பெரிய ஹிமாலய முயற்சி. பெரும் ஹிமாலய முயற்சி செய்து சரியான முடிவுக்கு வந்திருந்தால் பாராட்டலாம். ஆனால் அதற்குப் பதிலாக தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய ஆய்வில் ஈடுபட்டவர்கள் – வார்த்தை வார்த்தையாக ஆய்வு செய்தவர்கள் “உங்களில் யார் அம்மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்கிறாரோ” என்றில்லாமல் “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ” என்றிருக்கிறதே என்று ஆராயத் தவறிவிட்டார்கள். அப்படி ஆராய்ந்திருந்தால் ஒரு வேளை அவர்களே சத்தியத்தை கண்டறிந்திருக்க முடியும். அப்படி முறையாக ஆய்வு செய்திருந்தால் பகலில் பிறைச் செய்தியை அறிந்தவர்கள் நோன்பு நோற்க வேண்டுமே? லண்டனில் 4 மணிக்குப் பிறைத்தகவல் கிடைத்து அவர்கள் 1\4 நோன்பு நோற்க வேண்டுமே? இல்லை என்றால் அவர்களுக்கு 28 நோன்புகளுகடன் மாதம் முடிவடைந்து விடுமே? போன்ற அபத்தமான ஐயங்களைக் கிளப்பி அவர்களும் குழம்பி மக்களையும் குழப்பி இருக்க மாட்டார்கள்.

பூமி தன்னைத்தானும், சூரியனையும் படுவேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு செகண்ட் நேரத்தில் தானிருந்த நிலையிலிருந்து பிரிதொரு இடத்திற்கு பல கி.மீ. சென்றுவிடுகிறது என்பதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொண்டே இந்த ஆய்வை செய்திருக்க வேண்டும். ஒரு நாளின் 24 மணி நேரங்களிலும் ஆகாய வெளியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட நேரத் தொழுகையின் பாங்கும், அதே போல் ஐந்து குறிப்பிட்ட பகுதியில் ஐந்து நேரத் தொழுகையின் பாங்கும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“உதாரணமாக சிறு குழந்தைகளுக்காக வட்டமாகச் சுழலும் ராட்டினங்கள் இருக்கும். அந்த ராட்டினத்தில் குழந்தைகள் அமர இடைவிடாது சுற்றிலும் ஆசனங்கள் அமைத்திருப்பார்கள். இப்போது அந்த ராட்டினத்தின் வட்ட சுற்றுப் பாதைக்குப் பக்கத்தில் குழந்தைகள் ஒரு சிறுதடியை அந்த கம்பங்களில் பட்டு ஒலி எழுப்பி நழுவும் வகையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொது அந்த ஐந்து கம்பங்களிலும் தொடர்ந்து ஒலி எழும்பிக் கொண்டே இருக்கும். இது போன்று தான் ஆகாய வெளியில் தொழுகையின் பாங்கு ஒலி தொடர்ந்து 24 மணிநேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது ஆகாய வெளியில் தொழுகையின் பாங்கு ஒலி தொடர்ந்து 24 மணி நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது நோன்பு விஷயத்திற்கு வருவோம். அதே ராட்டினத்தில் மஃரிபு நேரத்தைக் குறிப்பிடும் கம்பத்தையும், பஜ்ருடைய நேரத்தைக் குறிப்பிடும் கம்பத்தையும் மட்டும் வைத்துக் கொண்டு , மற்ற மூன்று கம்பங்களையும் அகற்றி விடுவோம். இப்போதும் அந்த இரண்டு கம்பங்களில் மட்டிலுமே 24 மணிநேரமும் இடைவிடாது ஒலி வந்து கொண்டே இருக்கும். பூமி சுழலும் முறையும் இப்படியே இருப்பதால் ராட்டினத்தலுள்ள ஒரு சாரார் பஜ்ருக்கும், மஃரிபுக்கும் இடைப்பட்ட பகுதியான பகலிலும், மறுசாரார் இரவிலும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த நிலை நீடிக்கவும் செய்யாது. முதல் ஆசனத்தில் இருப்பவர் இதைக் கடந்ததும் இரண்டவாது ஆசனத்தில் இருப்பவர் அந்த இடத்திற்கு வந்து விடுவார். அதே போல் 3,4,5,6 என்று மாறிக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் பஜ்ர் கம்பத்தைத் தாண்டி பகலில் பிரவேசித்தவர் + 131|4 மணி நேரத்திற்குப் பிறகு மஃரிபுடைய கம்பத்தைத் தொடுவார். மஃரிபு கம்பத்தைத்தாண்டி இரவில் பிரவேசித்தவர் +-103\4 மணிநேரத்திற்குப் பிறகு பஜ்ருடைய கம்பத்தைத் தொடுவார். இது மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ஆக ஒரு நாளிலேயே ஒரு சாரார் நோன்பை ஆரம்பிப்பர்; பிரிதொரு சாரார் நோன்பு துறப்பர். பால்வெளி மண்டலத்தில்(MILCKY WAY) இரண்டு சம்பவங்களும் ஒரே நேரத்தில் இடம் பெற்றாலும் பூமியிலிருப்பவர்களின் பூமிப் பகுதி இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு இரவாகவோ பகலாகவோ இருக்கும். அதாவது சூரியனை நோக்கி இருந்தால் அது பகலாகவும், அதற்கு எதிர் திசையில் இருந்தால் அது இரவாகவும் இருக்கும்.

இந்த அடிப்படையில் ஒரு நாட்டில் மஃரிபுடைய நேரத்தில் ரமழான் பிறை காணப்பட்டால், அந்த சமயம் மஃரிபிலிருந்து பஜ்ர் வரை இருக்கும் நாடுகளின் மக்கள் அனைவரும் ரமழான் இரவில் இருக்கிறார்கள். அவர்கள் அம்மாதத்தை அடைந்துவிட்டார்கள். அவர்கள்மீது நோன்பு கடமையாகும். பிறைச் செய்தி கிடைக்கும்போது யாரெல்லாம் பகலில் இருக்கிறார்களோ அவர்கள் அந்த மாதத்திற்கு முந்திய மாதத்தின் (ஷஃபான்) இறுதிப் பகலில் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் ரமழான் மாதத்தை அடையவில்லை. அவர்கள் ஷஃபான் பகலிலிருந்து இரவுக்குள் நுழைந்து விட்டால் அப்போதுதான் ரமழான் மாதத்தை அடைகிறார்கள். அதை அடுத்து வரும் பகலில் நோன்பு நோற்பது அவர்கள் மீது கடமையாகிறது. ஆக முதல் பிறை வெளிப்படும்போது இரவிலிருப்பவர்கள அம்மாதத்தை அடைந்து கொண்ட ஒரு சாராராகவும், பகலில் இருப்பவர்களை அம்மாதத்தை இனி அடையவிருக்கும் மறு சாராராகவும் அல்லாஹ் குறிப்பிகிறான் என்பதே உண்மையாகும். அவர்கள் மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தது போல் பெரும் ஆய்வுக்குப் பிறகு கண்டுபிடித்த “உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ” என்பதன் கருத்து இதுதான்.

அல்முபீன்: “அதாவது ரமழான் மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்”

ஒருவர் ரமழானை அடைந்தபின் இன்னொருவர் ரமழானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமழானை அடைகிறாரோ என்று கூற முடியும்” பக்கம் – 28.

அந்நஜாத்: இவ்வாறு அவர்களது கண்டுபிடிப்பு எவ்வளவு அழகாகக் கச்சிதமாக இங்கு பொருந்திப் போகிறது பார்த்தீர்களா? பிறை நாள் காட்டியா? என்று முன்னொரு ஏடு நையாண்டி செய்திருந்தது. ஆனால் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் அல்முபின்: இதழின் 5-ம் பக்கத்தில் “ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறை” என்று குறிப்பிட்டு முஸ்லிம்களின் முதல் தேதி என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். முதல் தேதி-முதல் நாள், ஒரு இரவு+ஓர் பகல் நேரத்திற்குட்பட்டுத்தான் இருக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விட்டார்கள். மேலும் ரமழான் மாதத்தை அடைய ஷஃபான் மாதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள். இதை மறந்து விட்ட காரணத்தினால் தான் பிறைச் செய்தி கிடைக்கும் போது லண்டனில் மாலை 4மணியிருப்பவர்களும் நோன்பு நோற்க ஆரம்பிக்க வேண்டும் என்ற விபரீத விளக்கத்தை அவர்கள் தந்து அவர்களும் குழம்பி மக்களையும் குழப்பி இருக்கிறார்கள். பிந்தையதின் தொடக்கம் முந்தையதின் முடிவின் பின்னரே ஆரம்பமாகும் என்ற அடிப்படை விதியையே மறந்து சிந்தித்ததின் விபரீத முடிவே இதுவாகும். வியாழக்கிழமையிலிருப்பவர் வியாழனை முடித்துக் கொண்டே வெள்ளியில் நுழைய முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த மட்டிலும் மஃரிபுடைய நேரமே அவர்களின் துவக்க தேதியும், துவக்க கிழமையுமாகும். இரவு 12 மணி அல்ல. ஆங்கிலேயர்களே நள்ளிரவு 12 மணியை தேதியின், கிழமையின் துவக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நோன்பு விஷயத்தில் இந்தக் கணக்கு உதவாது. இந்தக் கணக்கின்படி பார்த்ததால் தான் இவர்கள் பல பக்கங்களை வீணடித்திருக்கிறார்கள்.

எனவே ரமழான் முதல் பிறையின் இரவில் இருப்பவர்கள் அனைவரும் நோன்பு நோற்க ஆரம்பிக்க வேண்டும் என்ற உண்மையை மறுக்க ஷஃபானின் இறுதிப்பகுதியில் இருப்பவர்களும் பகலின் இடையிலேயே நோன்பை ஆரம்பிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு 28 நோன்புகள் மட்டுமே கிடைக்கும், இது சாத்தியமே இல்லை என்று அவர்கள் ஆய்வு செய்திருப்பது மிகவும் தவறான அபத்தமான ஆய்வாகும். அவர்களும் குழம்பி மக்களையும் குழப்பும் ஆய்வாகும். அடுத்து அரேபியாவில் மாலை 6.30 மணிக்கு பிறை பார்க்கும்போது இரவு 9 மணியில் இருக்கும் இந்திய முஸ்லிம்கள் பிறை பார்க்கவே முடியாது. அவர்கள் அந்த ரமழான் இரவு முழுவதையும் கடந்து விடிந்து ரமழானின் முதல் பகலையும் கடந்து ரமழானின் இரண்டாவது இரவின் ஆரம்பத்தை சந்திக்கும் (மஃரிபு) போதுதான் அவர்கள் பிறையைப் பார்க்கிறார்கள். அவர்கள் பிறை பார்த்த பின்னரே அவர்களின் முதல் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவர்கள் வெளியிட்டுள்ள அல்முபீன் இதழின் 120 பக்கங்களின் மையக் கருத்தாக இருக்கிறது. இது எந்த அளவு அறிவுக்கும், பூமியின் சுழற்சிக்கும் ஒத்து வருகிறது என்று பார்ப்பொம்.

அவர்கள் பெரும் முயற்சி எடுத்து விவரித்துள்ள “உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்று இருக்கிறதே அல்லாமல் “உங்களில் யார் அம்மாதத்தின் முதல்பிறையைப் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்று இல்லை. இல்லவே இல்லை. அடைவதற்கும் பார்ப்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது.

உதாரணமாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் பிரயாணம் செய்யும் ஒருவரை நீங்கள் ரயில் திருச்சியை அடைந்ததும் இறங்கிவிடுங்கள் என்று கூறி அனுப்பப்படுகிறது என்று கற்பனை செய்து கொள்வோம். அவர் புத்திசாலியாக இருந்தால் கவனமாக இருந்து ரயில் நிற்கும் ஊர்களைப் படித்துப் பார்த்தோ பிறரிடம் விசாரித்து தகவல் தெரிந்து கொண்டோ, திருச்சி வந்தவுடன் இறங்கி விட வேண்டும். அவர் திருச்சி வந்ததை பார்க்கவுமில்லை, கேட்டு அறியவுமில்லை; தூங்கி விட்டார். ரயிலும் திருச்சியை கடந்து மதுரையை அடைந்து விட்டது. மதுரைக்கு ரயில் வந்ததை அறிந்த பின்னர், ரயில் திருச்சி வந்ததை நான் பார்க்கவில்லை; எனவே மீண்டும் திருச்சி வந்தால்தான் இறங்குவேன் என்று அடம்பிடித்தால் அவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? “ஐயருக்காக அமாவாசை காத்திருக்குமா?” என்று ஹிந்து சகோதரர்களிடம் ஒரு பழமொழி உண்டு. இப்போது இந்த மவ்லவிகளுக்காக ரமழான் தலைப்பிறை காத்திருக்குமா? என்று நாம் புதுமொழி உண்டாக்கும் அளவுக்கு அவர்களது ஹிமாலய ஆய்வு இருக்கிறது.

அல்முபீன்: “உலகின் ஏதோ ஒரு பகுதியல் பிறை இன்று தோன்றும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு கணிக்கப்பட்டால் அது அப்பகுதியல் மட்டுமின்றி அகில உலகுக்கும் தலைப் பிறையாகும் என்ற வாதத்தை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கின்றது” பக்கம் -30.

இந்த அவர்களின் ஆய்வின் முடிவு பெருந்தவறாகும். எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைகிறார்கள் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை. அகில உலக மக்களும் ஓர் இரவு + ஒரு பகலுக்குள் மாதத்தை அடைகிறார்கள். அதாவது தலைப்பிறையை அடைகிறார்கள். இரண்டு நாட்களுக்கு தலைப்பிறை இருக்க முடியாது என்றே கூறுகிறொம். இப்படி நாம் எழுதியவுடன் நபி(ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத்தான் நோன்பை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிறையைப் பார்த்துத்தான் நோன்பை விடச் சொல்லி இருக்கிறார்கள். மேக மூட்டமாக இருந்தால் முப்பதாக முழுமைப்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறி பல ஹதீஸ்களை எடுத்து வைப்பார்கள். இந்த ஹதீஸ்களை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். அவை நபி(ஸல்) அவர்கள் கூறியவைதான். ஆனால் இந்த ஹதீஸ்களின் வார்த்தைகளுக்கு நேரடிப் பொருள் கொடுத்து அதன்படியே தான் செயல்பட வேண்டும் என்று வாதிட்டால், அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் அதாவது ஆண்கள், பெண்கள், சிரார்கள் அனவைரும் வெளியெ வந்து தங்களளள் கண்களால் பிறையைப் பார்த்து. அதன் பின்னரே நோன்பு நோற்றிருக்க வேண்டும். இப்படித்தான் நடந்தது என்று அவர்களால் கூற முடியுமா? மாறாக பிறையைப் பார்த்த நம்பகமான ஒருவர் கூறிய தகவலை அறிந்தும் அவர்கள் பிறையைப் பார்க்காத நிலையிலும் நோன்பு நோற்றுள்ளதற்குப் பல ஆதாரங்களைப் பார்க்கிறோம். இதற்கு அங்குள்ளவர்களே பார்த்து அங்குள்ளவர்களுக்குச் சொன்னது; வெளியிலிருந்து வந்த தகவல்கள் அல்ல என்று இந்த மவ்லவிகள் வாதம் செய்யலாம். வெளியிலிருந்து தகவல் கிடைக்கும் அளவுக்கு இன்றிருப்பது போல் ஃபோன், ஃபேக்ஸ், ரேடியோ போன்ற செய்தித் தொடர்புகள் அன்று இருந்து, நபி(ஸல்) அவர்கள் அவற்றை நிராகரித்து விட்டு உள்ளூரில் பார்த்தவர் நேரடியாக வந்து சொன்னதை மட்டுமே ஏற்று செயல்படுத்தி இருந்தால் மட்டுமே இந்த அவர்களின் வாதம் ஏற்புடையது. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அன்றிருந்ததை விட இன்று செய்தி அறியும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது. அவற்றை நிராகரிக்க இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? குர்ஆன், ஹதீஸிலிருந்து தடையை இவர்களால் காட்ட முடியுமா? ஒரு போதும் காட்ட முடியாது.

நவீன கணடுபிடிப்புகள் அனுமதிக்கபட்டதே என்பதற்கு அல்குர்ஆனிலிருந்தே ஆதாரம் கிடைக்கின்றது.

“ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27)

ஹஜ்ஜுக்கு நடந்தும், மெலிந்த ஒட்டகங்களிலும் வருவதையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அன்று ஆகாய விமானங்களில், கப்பல்களில் மற்றும் பலவித வாகனங்களில் வருவதை அல்லாஹ் குறிப்பிடவில்லை. எனவே இன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் நடந்தும், மெலிந்த ஒட்டகங்களிலும் மட்டுமே செல்ல வேண்டும். அல்லாஹ் குறிப்பிடாத வாகனங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லக்கூடாது; அல்லாஹ் குறிப்பிடாத வாகனங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லக்கூடாது; அந்த ஹஜ் நிறைவேறாது என்று இந்த மவ்லவிகளில் யாரும் சொல்வார்களா? தூரப்பகுதியிலிருந்து ஆதார பூர்வமான தகவல் கிடைக்கும்போது அதை ஏற்றே ஆக வேண்டும். தற்காலத்தில் நிராகரிப்பது குற்றம் என்பதற்கு இன்னொரு ஆதாரத்தையும் அவர்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்த செய்தி தொடர்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் ஹஜ் செய்திருக்கிறார்கள்ள. அவர்களில் பலர் அங்கு போன இடத்தில் இறந்தும் இருக்கிறார்கள். அந்த நிலையில் இங்கிருந்த அவர்களின் மனைவிமார்கள் உடனடியாக “இத்தா” இருந்திருக்க முடியுமா? நிச்சயமான சாத்தியப்பட்டிருக்காது. அவர்களோடு ஹஜ் செய்தவர்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு பல மாதங்களோ அல்லது வருடமோ கடந்து திரும்பி வந்து தாயகம் சேர்ந்த பின்னரே, தங்களின் கணவன்மார்கள் அங்கு இறந்து போன செய்தி அறிந்து, அதன் பின்னரே “இத்தா” கடைப்பிடித்திருப்பார்கள். அந்நிலையில் வேறு வழி இல்லாத காரணத்தால் அல்லாஹ்வும் அவர்களது “இத்தா” வை ஏற்றுத்தான் இருப்பான். நிராகரித்திருக்க மாட்டான்.

இதை முன்னுதாரணமாகக் காட்டி இன்று ஹஜ்ஜுக்குச் சென்ற ஒருவர் அங்கு இறந்தவுடன் அங்கிருந்து ஃபோன் செய்தி கிடைத்ததும் அதை ஏற்காத அவரது மனைவியோ “முன்காலத்தில் ஹஜ்ஜுக்குப் போனவர்கள் திரும்பி வந்து செய்தியை நேரடியாகச் சொன்ன பின்னரே “இத்தா” கடைப்பிடித்துள்ளார்கள். அதே போல் எனது கணவருடன் சென்றவர்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மீண்டும் தாயகம் வந்து, எனது கணவர் இறந்த போன செய்தியை நேரடியாகச் சொன்ன பின்னரே ஏற்றுக் கொள்வேன். இத்தா இருப்பேன். இப்போது இந்த ஃபோன் செய்தியை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் , அந்த பெண்ணின் கூற்றை அல்லாஹ் அங்கீகரிப்பானா? இந்த மவ்லவிகள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களே சொல்லட்டும். கிடைத்த ஃபோன் செய்தி உண்மையா? என்று தீர விசாரித்து சம்பவம் உண்மையானால் “இத்தா” இருந்தே ஆகவேண்டும் என்றே “ஃபத்வா” கொடுப்பார்கள். அப்படியானால் பிறைச் செய்தி விஷயத்தில் மட்டும் இந்த தடுமாற்றம் ஏன்?

அன்றுள்ள நிலையில் பிறைச் செய்தி உடனடியாக மற்ற பகுதிகளுக்கு கிடைக்கும் செய்தி சாதனங்கள் இருக்கவில்லை. கிடைத்த செய்தி சாதனங்கள் அனைத்தும் காலம் கடந்து கிடைத்த செய்திகள். அப்படிப்பட்ட செய்திகள் நிராகரிக்கபட்டதைக் காட்டி உடனுக்குடன் கிடைக்கும் செய்தியை நிராகரிக்க வேண்டும் என்று கூறுவது எப்படி பொருந்தும்?

இவ்வளவு தெளிவுக்குப் பிறகும் பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் செயல்பட வேண்டும் என்று பிடிவாதமாக அவர்கள் கூறுவார்களேயானால், முகல்லிது மவ்லவிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் என்றே எண்ண வேண்டி வரும். முகல்லிது மவ்லவிகள் அல்குர்ஆனின், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் கட்டளைகளுக்கு முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், தர்கா சடங்குகளையும் சரிகண்டு நடத்தி வரும் வேளையில், “ஜும்ஆவுடைய (குத்பா) பிரசங்கத்தை மட்டும் நபி(ஸல்) அவர்கள் அரபியில் தான் செய்தார்கள். எனவே எங்களது(குத்பா) பிரசங்கம் எங்கள் முன்னால் அமர்ந்து இருக்கும் மக்களுக்கு விளங்காவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் அரபியில்தான் பிரசங்கம் செய்வொம்; பிரசங்கத்தின் போது அன்றைய கால நிலவரப்படி ஒரு தடியையோ அல்லது ஒரு வாளையோ கையில் பிடித்திருந்ததுபோல் நாங்களும் பிடித்துக் கொண்டே அரபியில் பிரசங்கம் செய்வொம்; அதுதான் அசலான சுன்னத்து என்று உடும்புபிடியாக செயல்பட்டு வருவதைப் போல், ரமழான் மாதத்தின் பிறையை கண்ணால் கண்ட பிறகே நோன்பு நோற்போம்; அதுவே அசல் சுன்னத்து என்று, எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரண்பட்டு செயல்படும். இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் வீண்பிடிவாதம் பிடிப்பதற்காகவே எண்ண வேண்டி வரும். எங்கே பிறை தென்பட்டாலும் செய்தி கிடைக்கும் நேரத்தில் இரவில் இருப்பவர்கள் நோன்பு நிய்யத்துடன் அடுத்துவரும் பகலில் நோன்பு நோற்க வேண்டும். பிறை செய்தி கிடைக்கும்போது பகலில் இருப்பவர்கள் ஷஃபானின் கடைசிப்பகலில் இருக்கிறார்கள். அன்று மஃரிபை அடையும் போதுதான் அவர்கள் ரமழானை அடைகிறார்கள். எனவே அந்த இரவு நிய்யத்துடன் விடியும் பகலில் நோன்பு நோற்க வேண்டும். இப்படிச் செயல்படுகிறவர்கள் 2:185 இறை வாக்கிற்கோ, மாதம் 29 அல்லது 30 என்ற நபி(ஸல்) அவர்களின் போதனைக்கோ, ரமழான் நோன்பு நோற்பதாக சுப்ஹுக்கு முன் நிய்யத் செய்யாதவருக்கு நோன்பு இல்லை என்ற நபிமொழிகளுக்கோ முரணாகச் செயல்படவில்லை என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் அறிந்து கொள்வார்களாக.

அல்முபீன்: (இந்தக் கருத்துடையோர் எவ்வளவு அபத்தமான கருத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும், இவர்களது வாதங்கள் அர்த்தமற்றவையாக இருப்பதையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டுவோம். பக்கம்-30)

அந் நஜாத் : இவர்கள் எங்கெங்கே உலகம் முழுவதும் ஒரே நாள் தலைப்பிறை -முதல் தேதி என்ற உண்மையை அபத்தமான கருத்து என்றும், வாதங்கள் அர்த்தமற்றவை என்றும் எழுதியிருக்கிறார்களோ அங்கெல்லாம் நாமும் அவர்களே அபத்தமான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்களது வாதங்களே அர்த்தமற்றவை என்பதையும் உரிய ஆதாரங்களுடன் அடையாளம் காட்டுவோம்.

வெளியூரிலிருந்து வந்த தகவல்:

வெளியூரிலிருந்து வந்த வாகனக் கூட்டத்தினர் பிறை பார்த்ததாக அறிவித்த செய்தியை நபி(ஸல்) அவர்கள் ஏற்று நோன்பை விடுமாறும் மறுநாள் பெருநாள் திடலுக்கு வருமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டதை, இதுகாறும் தவ்ஹீத் மவ்லவிகள் உட்பட அனைவரும் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக புதிய கண்டு பிடிப்பைக் கண்டு பிடித்து அறிவித்திருக்கிறார்கள். அது சரியாக இருந்தால் நிச்சயமாக நாமும் ஏற்றே இருப்போம். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களுக்குக் குறிப்பாக அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட எளிய மார்க்கத்தில் இவர்கள் இப்போது புதிய விளக்கம் தந்து வழி தவறிச் செல்கிறார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது. இப்படி ஆணவத்தால் கூறுகிறார்களா? இதுபோல் எண்ணற்ற விஷயங்களில் இவர்கள் வழி தவறிச் சென்றிருக்கிறார்கள். அவற்றை வரிசைப்படுத்தி தருகிறோம்.

1. தெளிவான நேரடியான வசனமான வேதக்காரப் பெண்களை முஸ்லிம் ஆண்கள் மணமுடிப்பதை அல்லாஹ் அனுமதித்துள்ளதற்கு மாற்றமாக வாதிட்டார்கள்.

2. (ஜுனுபாளி) தீட்டுக்காரர் குளிக்கும்போது அரவது உடம்பில் சில பகுதிகள் நீரால் நனையாமல் விடுபட்டாலும் (முழுக்கு) தீட்டு நீங்கவிடும் என்று வாதிட்டார்கள்.

3. “கஃலீபா” இறந்தவர்களுக்கு பின் தோன்றலாகத்தான் வர முடியும். அல்லாஹ்வுக்கு யாரும் பின் தோன்றலாக வர முடியாது. காரணம் அவன் இறப்பதில்லை என்று வாதிட்டதோடு, ஜான்்டரஸ்ட் குர்ஆன் தர்ஜுமாவில் “கஃலீபா” என்று வரும் இடங்களில் எல்லாம் சகட்டுமேனிக்கு பின்தோன்றல் என்று மொழிபெயர்ந்து அச்சிட வைத்தார்கள்.

4. தொழுகையில் சப்தமிட்டு பிஸ்மி ஓதுவது கூடும் என்று தங்கள் வாதத்திறமையால் வாதிட்டார்கள்.

5. தனித்தனி பிரிவுகள், அமைப்புகள் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இருக்க அவை கூடும் என்று தங்களின் அரபி புலமையைக் காட்டி வாதிட்டனர். முஸ்லிம் சமுதாயத்தை பல பிரிவினர்களாக ஆக்கினார்கள்.

6. தர்கா சடங்குகள், மெளலூது சடங்குகள் செய்யும் பள்ளி இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்பதற்கு நேரடியான குர்ஆன் ஆயத்தோ, ஹதீஸோ இல்லாமல், வாதத்திறமையால் கூடாது என்று வாதிட்டார்கள்.

7. அல்குர்ஆனிலுள்ள (முத்தஷாபிஹாத்) பல பொருளுள்ள வசனங்களுக்கு முடிவான பொருளைத் தந்து அவற்றை ஒரே பொருளுள்ள (முஹக்கமாத்) வசனங்களாக்கும் தகுதி அறிஞர்களுக்கும் உண்டு என்று கூறி அறிஞர்களையும் அல்லாஹ்வாக்கி தங்களின் அரபி புலமையைக் கொண்டு வாதிட்டார்கள்.

8. “காட்டுக்குச் சென்று மரவேர்களைச் சாப்பிட்டு மரணிக்க நேரிட்டாலும் எந்தப் பிரிவிலும் இருக்கக் கூடாது. சமுதாயத்தைப் பிளவு படுத்தக் கூடாது. முஸ்லிம் என்ற நிலையில் ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்ற நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளைக்கே தங்களின் அரபி புலமையைக் கொண்டு சொந்த விளக்கம் கொடுத்து முஸ்லிம்கள் பல பிரிவுகளாகக் சிதறுண்டு கிடப்பதை நியாயப்படுத்தி வாதிட்டனர்.

9. அல்லாஹ் அல்குர்ஆனில் “லஹ்முல்கின்ஸீர்” என்றே குறிப்பிட்டிருக்கின்றான். எனவே பன்றிக்கறி மட்டுமே ஹராம் -கூடாது. கறி அல்லாத இதர பாகங்களை சாப்பிடுவதில் தவறில்லை என்று தங்கள் அரபி புலமை கொண்டு வாதிட்டு முஸ்லிம்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

10. ஆட்சி அதிகாரம் உள்ள அமீருக்கே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் . ஆட்சியில் இல்லாதவர்கள் அமீருமல்ல. அவர்களுக்குக் கட்டுப்படும் அவசியமும் இல்லை என்று வாதிட்டு சமூக ஒற்றுமையைக் குலைத்தார்கள்.

இன்னும் இவை போன்ற பல விஷயங்களில் தங்களின் அரபி புலமை கொண்டு கர்வம் கொண்டு தட்டுக் கெட்டுச் சென்றார்கள். அவற்றில் சிலவற்றில் தங்கள் கூற்று தவறு என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பலவற்றை இன்னும் அப்படியே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே வரிசையில்தான் இப்போது இந்த ஹதீஸின் பொருளை தலை கீழாக ஆக்கி இருக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் ஆரம்பமே “மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்” என்றே ஆரம்பிக்கிறது. பிறை பார்த்ததும் நோன்பை விட வேண்டும் என்ற சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த வாகனக் கூட்டத்தினருக்கு (இது அவர்களுடைய வாதமாகும்) மார்க்கம் சொல்லிக் கொடுக்கும் ஹதீஸில், இவர்கள் பிறை தெரியாமல் நோன்பு நோற்றிருந்த சம்பவம் ஏன் இடம் பெற வேண்டும்? காரணம் இல்லாமலா “எனவே உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ” என்ற வாசகம் 2:185 இறைவாக்கில் இடம் பெற்றிருக்கிறது என்று பக்கம் பக்கமாக ஆராய்ந்தவர்களுக்கு, வாகனத்தில் வந்தவர்களுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுக்கும் ஹதீஸில் “மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பை நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம்” என்ற சொற்றொடர் ஏன் இடம் பெற வேண்டும்? என்று ஆய்வு செய்ய முடியாமல் போனதா? அல்லது அது தங்களின் கண்டு பிடிப்பிற்கு பாதகமாகிவிடும் என்ற அச்சமா? ஹதீஸின் ஆரம்பமே இந்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்களோடு இருந்தவர்கள் பிறை தென்படாததால் நோன்பு நோற்று, பிறை தகவல் தெரிந்தவுடன் முறிக்கச் சொன்னது பற்றியது என்பதை குன்றிலிட்ட தீபம் போல் சுட்டிக் காட்டுகிறதே! புரியவில்லையா? அவர்களது ஆய்வில் இந்த உண்மை மறைக்கப்பட்டுவிட்டதா? இன்னும் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் “அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என்று பொருள் கொண்டுள்ளதிலுள்ள அபத்தங்களைப் பாருங்கள்.

வாகனப் கூட்டத்தினர் ரமழான் பிறை பார்த்தவுடன் நோன்பு நோற்கத் தெரிந்து கொண்டவர்கள் ஷவ்வால் பிறை பார்த்தவுடன் நோன்பை விட வேண்டும் என்ற சாதாரண அடிப்படை விஷயங்கூட தெரியாதிருந்தார்களா? அல்லது ரமழான் ஆரம்பித்தவுடன் நோன்பு நோற்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள், ஷவ்வால் பிறை தெரிந்தவுடன் நோன்பை விட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்காமல் ஹதீஸின் பாதியை மறைத்து விட்டார்களா? நோன்பு நோற்பதை மட்டும்கூறி நோன்பை விடுவது பற்றிய விளக்கம் இல்லாத ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லையே! அப்படி ஒரேயொரு ஹதீஸ் இருந்தாலும் அதை எடுத்து இவர்கள் தங்களுக்குரிய ஆதாரமாகத் தந்திருப்பார்களே! இவர்கள் இந்த அதழில் எடுத்து எழுதியுள்ள ஒரு ஹதீஸில் கூட அப்படி இல்லையே. பிறை கண்டு வையுங்கள், பிறை கண்டு விடுங்கள், என்று தானே அனைத்து ஹதீஸ்களும் கூறுகின்றன. அந்த வாகனக் கூட்டத்தினர் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மிகமிகக் குறைவானவர்கள். அதனால் அவர்கள் முன்பு ஒரு முறை வந்து நபி(ஸல்) அவர்களைச் சந்தித்த போது “நீங்கள் ரமழான் பிறையைப் பார்த்தால் நோன்பை ஆரம்பித்து விடுங்கள், அடுத்து ஷவ்வால் பிறை பார்த்தவுடன் என்னிடம் மீண்டும் வந்து விடுவது பற்றிய மார்க்க விளக்கம் கேட்டு அதன்படி செயல்படுங்கள்” என்று கூறியிருப்பார்கள் என்று சரடு விடப்போகிறார்களா? என்னே இந்த மவ்லவிகளின் ஆய்வுத்திறன்?

பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்தவர்கள் அடுத்த பிறை பார்த்து நோன்பை விட வேண்டும் என்பது சாதாரண அடிப்படை விஷயம். ஓரே நேரத்தில் இரண்டையும் தெரிந்து கொள்ளும் முறையில்தான் கற்பிக்கப்பட்டிருக்கும். இந்த விஷயம் தெரியாமல், நபி(ஸல்) அவர்களிடம் நோன்பு பிடிக்க ஹராமான நாளில் பிறையை அவர்களே பார்த்த நிலையில் நோன்பு நோற்றுக் கொண்டு விளக்கம் கேட்க வந்தார்கள் என்று கற்பனை செய்துள்ளனரே? இவர்களின் கற்பனையின் அபத்தம் புரியவில்லையா? உண்மையில் அவர்கள் ஷவ்வால் தலைப்பிறையில் நோன்பு நோற்றவர்களாக வந்திருந்தால், நபி(ஸல்) அவர்களின் போதனை எப்படி அமைந்திருக்கும்? முதலில் நோன்பு பிடிக்க ஹராமான ஷவ்வவால் முதல் பிறையில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்துள்ளதை கண்டித்திருக்க மாட்டார்களா? குறைந்த பட்சம் இங்கிதமாக ஷவ்வால் பிறை பார்த்த பின்னர் நோன்பு நோற்கக் கூடாது; தவறாக நோன்பு நோற்றிருக்கிறீர்கள் என்று உபதேசித்திருக்க மாட்டார்களா? அதை விட்டு வெறுமனே அவர்களை நோன்பை விடச் சொல்லி, விடிந்ததும் பெருநாள் திடலுக்கு செல்லுமாறு கட்டளையிட்டிருப்பார்களா? என்னே மதியீனம்?

இவர்கள் நபி(ஸல்) அவர்களை அவமரியாதை செய்வதோடு, அந்த நபிதோழர்களான வாகனக் கூட்டத்தாரையும் அவமரியாதை செய்வதையும் இவர்களால் உணர முடியவில்லையா? ஹதீஸில் ஆதாரப்பூர்வமானதை எடுக்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள் இஜ்மா, கியாஸுக்குள் நுழைந்தது எப்போது? ஏன்? நபி(ஸல்) அவர்கள் அன்றே தங்களின் உம்மத்தில் பிரிவினைக்ககு வித்திட்டு விட்டதாக நபி(ஸல்) அவர்கள் அன்றே தங்களின் உம்மத்தில் பிரிவினைக்கு வித்திட்டு விட்டதாக நபி(ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறுகிறார்களா? இந்த அபத்தமான கருத்தை முறையாகச் சிந்திக்க தெரியாதவர்களின் மூளையில் ஏற்ற இந்த அளவு தரம் தாழ்ந்து செல்ல வேண்டுமா? இதற்காக எண்ணற்ற பக்கங்கள் வீணாக்கி இருக்கிறார்களே? மேக மூட்டத்தின் காரணமாக பிறை தெரியாமல் நோன்பு நோற்றிருக்க மக்களையே பிறை தென்பட்ட விஷயத்தை பிறை பார்த்து நோன்பை விட்ட அந்த வாகனக் கூட்டத்தினர் வந்து சாட்சி சொன்னவுடன், அதை ஏற்று நோன்பை விடச் சொல்லி கட்டளையிட்டதையே இந்த ஹதீஸ் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகிறது. இதை அறிந்து கொள்ள இந்த மவ்லவிகளின் ஹிமாலய ஆய்வு நமக்கு அவசியமே இல்லை. இவ்வாறெல்லாம் இவர்கள் ஹதீஸ்களின் கருத்துக்களை தப்பர்த்தம் செய்வதின் காரணமாகத்தான் “ஹதீஸ்கள் தேவையில்லை; குர்ஆன் மட்டும் போதும்” என்று கூறும் கூட்டத்தினர் வளர்ந்து வருகின்றனர் என்பதையும் இந்த மவ்லவிகள் தங்களின் கவனத்தில் கொள்வார்களாக. நிச்சயமாக இதற்கு இவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும். தப்ப முடியாது. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வார்களா!

அந்நஜாத்: ஜனவரி, 2000 – ரமழான், 1420

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக