வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பிறை பார்த்தல்

மூலம்: செய்யத் உஸ்மான் ஷேர்

தமிழில்: H. அப்துஸ் ஸமது – இன்ஜினியர்.

இதை எழுதியவரைப் பற்றிய குறிப்பு:

பீஹார் மாநிலத்தில் பீஹாரில் பிறந்தார். 1955ஆம் ஆண்டு பல்கலைப் கழகத்தில் M.A., (Econ) பட்டம் பெற்றார். 1956 ல் பாகிஸ்தான் அரசு வேலையில் சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டு கனடாவிற்குக் குடிபெயர்ந்தார், பாகிஸ்தான் Planning Commission, தலைமை அதிகாரியாக இருந்தார். CENTO, தலைமைச் செயலராகப் பணியாற்றினார்; கென்யாவில் ஐநா சபையின் ஆலோசகராக இருந்தார்; SAARC திட்டக்குழுவின் வல்லுநராக மாலதீவில் பணி புரிந்தார்.

ரமழான் மாதம் (பகல்) முழுவதும் நோன்பு நோற்கும்படி முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 2:185). ஆனால் ஒவ்வோர் ஆண்டும் ரமழான் மற்றும் ஷவ்வல் மாதங்களின் தொடக்கம் பிறை பார்ப்பதைப்பற்றி சர்ச்சைகள் எழுந்த பின்பே நிர்ணயிக்கப்படுகின்றன. இது முஸ்லிம் உலகம் முழுவதும் எழக்கூடிய சர்ச்சையாகிவிட்டது. இந்தக் குழப்பத்தின் காரணமாக கடமையாக்கப்பட்ட ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதும் முடிவதும் எல்லோரும் ஏகோபித்து ஏற்ற நாட்களில் அன்று. சிலருக்கு முன் கூட்டியே நிகழ்வதும் வேறு சிலருக்கு ஓரிரு நாட்கள் பிந்தி நிகழ்வதும் சாதாரணமாகிவிட்டது. ரமழான் மாதம் முடிந்து கொண்டாடப்படும் ஈத் பெருநாளும் இவ்விதமே வெவ்வேறு நாட்களில் அனுசரிக்கப்படுகிறது. எனவே அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதிலும் கூட முஸ்லிம்கள் சிந்திப்பதிலும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் ஒன்றிணைந்து ஒழுங்கும் முறையும் பேணி ஓர் “உம்மத்”தினராக செயல்படத் தவறி விடுகின்றனர். இந்த நிலைமை தவிர்க்கப்பட முடியாததா என்பது தான் கேள்வி.

குர்ஆனும் நபிமொழிகளும் இன்றைய நவீன அறிவியல் பாணியில் கூறப்பட்டவை அன்று. இன்று போல் தொழில் நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் அன்று காணப்படவில்லை. எனவே அன்றைய மக்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப இறைக் கட்டளைகள் நல்கப்பட்டன. ஆனால் அறிவைத் தேடும்படியும் வளர்த்துக் கொள்ளும்படியும் மக்கள் வலியுறுத்தப்பட்டனர். எனவே நபி(ஸல்) அவர்கள், வெகு தொலைவில் இருந்த சீனா சென்றேனும் அறிவைத் தேடிக் கொள்ளும்படி முஸ்லிம்களை அறிவுறுத்தினார்கள். எவ்வகையான அறிவைத் தேட வேண்டும்? சீனாவிற்குச் சென்று அரபி மொழியையும் இலக்கியத்தையும் கற்க முடியாது. அரபியர்கள் தேர்ச்சி பெறாத அறிவியல், கலை மற்றும் கைவினைத் தொழில்களையே அங்கே கற்க முடியும்.

மார்க்கக் கடமைகளை மேற்கொள்ள முஸ்லிம்கள் சந்திர நாள் காட்டியைப்(Luner Calender) பின்பற்றுகின்றனர். அன்று சந்திரக் கணக்குப்படி மாதங்கள், பிறையை மாலையில் கண்டது முதல் தொடங்கப்பட்டது. இன்று தலைப் பிறையைக் காண என்ன வழிமுறைகளைக் கையாளுகின்றோம்? மறையும் சூரியனின் வெளிச்சத்தால், அடிவானத்தில் தோன்றும் சந்திரன் கண்ணுக்குத் தெரியாத நிலையிலும் அதை ஏற்றுக் கொள்வதா? அல்லது கண்ணுக்குத் தெரியக்கூடிய அளவிற்கு உயர்ந்த பின் ஏற்றுக் கொள்வதா?

கீழ்வரும் நபிமொழியை பலவிதமாக மொழிபெயர்ப்பதன் காரணமாக சர்ச்சைகள் கிளம்புகின்றன.

இதனைச் சிலர் கீழ்வருமாறு மொழி பெயர்க்கின்றார்கள்: (ரமழான் மாத) நோன்பை பிறையைப் பார்த்து ஆரம்பிக்கவும்; பிறையைக் கண்ணால் பார்த்து நோன்பு நோற்பதை முடிக்கவும். பிறை பார்ப்பதை மேக மூட்டம் மறைத்து விட்டால் முப்பது நாட்கள் பூர்த்தி செய்யவும் அல்லது கணக்கிடவும். (Begin and end your fast (month of Ramadan) upon sighting the moon, If clouds prevents this, complete thirty days or make an estimate.) அஹ்மதும் நஸாயியும் பதிவு செய்துள்ள வேறொரு நபிமொழியில் இதே வார்த்தைளே காணப்பெற்றாலும் கீழ்வரும் வார்த்தைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன: இறையுணர்வுடன் அதை (தலைப் பிறையை)ப் பாருங்கள். ஸஹீஹ் புகாரி (3:133)யில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள்; பிறையைப் பார்க்காமல் நோன்பை முடித்து விடாதீர்கள்.”

வெளிப்டையாகச் சொற்கள் தரும் பொருளையே முக்கியமாகக் கொண்டு கண்ணால் பார்த்த பிறகே நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் கண்டிப்புடன் ஏவியிருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட (3:130) நபிமொழிப்படி தலைப்பிறையை கண்ணால் பார்க்க முடியவில்லை என்றால் சில இயற்கையானத் தடைகளால் பிறையைக் கண்ணால் பார்ப்பது சாத்தியமில்லைதான். மக்கள் கணக்கிட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். நடைமுறையில் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது இதுதான். இஃதல்லாமல் இந்த நபிமொழி கீழ்வருமாறும் விளக்கம் அளிக்கப்படலாம். நோன்பு சந்திரக்கணக்குப்படி ரமழான் மாதம் முதல் நாளன்று தொடங்கப்பட்டு அம்மாதம், அந்தக் கணக்குப் படி இறுதி நாளோடு முடிவடைய வேண்டும். பாமர மக்கள் எப்பொழுது நோன்பு தொடங்கப்படவேண்டும் என்றும் முடிவடையும் என்றும் அறிந்து கொள்வதற்காகச் சொல்லப்பட்டதே இது. எனவே சந்திரக் கணக்குப்படி மாதத்தின் முதன் நாளையும் இறுதி நாளையும் தீர்மானிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் மக்களைத் தலைப்பிறையை இறையுணர்வோடு பார்க்கும்படி ஏவினார்கள். இன்று சாத்தியமாவது போல் அன்று பிறையின் தோற்றத்தை நிர்ணயிக்க வேறுவழிவகை ஏதும் இருந்ததில்லை. தலைப்பிறையைக் கண்ணால் காண முஸ்லிம்கள் இன்று செயற்கையான ஆதாரங்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை. விமானத்தில் ஆகாயத்தில் உயரப்பறந்து பிறையைக் காண, பூமியின் எல்லையைக் கடந்து செல்லவும் துணிகின்றனர். வானிலை ஆய்வுக் கூடத்திற்குச்சென்று தொலை நோக்காடி மூலம் வெறுங்கண்ணிற்குத் தெரியாதத் தலைப்பிறையைக் காண முயல்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் சரியானவையாகக் கருதப்படுகின்றன; ஆனால் சந்திரனின் நிலையைக் கணக்கிட அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதை ஏற்றக் கொள்வதில்லை.

இந்தப் பிரச்சினை சம்பந்தமாக இன்னும் ஓர் அம்சத்தை அலசுவோம். எல்லாம் வல்ல இறைவனின் மிகத் தெளிவான ஆணைகளை நிறைவேற்றுவதில் இவர்கள் இவ்விதமே நடந்து கொள்கிறார்களா என்பதைக் காண்போம். குர்ஆன் 2:187 வது வசனத்தில் இவ்வாறு கூறுகிறது. அதிகாலையில் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து பிரித்தறிந்து கொள்ளக்கூடிய வரை உண்ணுங்கள் பருகுங்கள்; பின்னர் இரவு தொடங்கும் வரை நோன்பு மேற்கொள்ளவும்.

அல்லாஹ்வின் இந்த ஆணையை நிறைவேற்ற யாரும் அக்கறை கொள்வதில்லை; ஒவ்வொரு இரவிலும் வெளியில் சென்று மெய் வெள்ளை வெளிச்சம் உள்ளதா என்று பார்ப்பதில்லை, உண்பதையும் பருகுவதையும் நிறுத்திவிட்டு நோன்பைத் தொடங்க, சூரியன் மறையும் வேளையில் வெளியில் சென்று இரவு தொடங்கி விட்டதா என்று பார்ப்பதில்லை. ஞானத்தைப் பயன்படுத்தி நோன்பு நோற்கும் மற்றும் முறிக்கும் நேரங்களை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் ரமழான் மாத இறுதியில் அறிவியல் அறிவை அல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தலைப் பிறையைக் கண்ணால் பார்க்க வெளியில் வருகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அறிவியல் கணக்கீட்டை நம்புகின்ற இந்த மக்கள், நபி(ஸல்) அவர்களுடைய அறிவுரையைப் பின்பற்றவும் அதேபோல் அறிவியல் கணக்கீட்டைப் பின்பற்றி ஒருவரோடு ஒருவர் சர்ச்சையிடுவதையும் முரண்படுவதையும் ஏன் தவிர்க்கக் கூடாது?

வானியல் அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. சந்திரன் தன் வான்வெளிக்கோளாப்பாதையில் சஞ்சரிப்பதை மிகத் துல்லியமாக இன்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதன் விளைவாகத்தான் 1967 ஆம் ஆண்டு சந்திரனின் மனிதன் கால் ஊன்ற முடிந்தது. மனிதன் சந்திரனில் கால் ஊன்றியது மட்டுமல்ல ஆச்சரியத்திற்குரியது. சந்திரனின் எந்தப்பக்கம், வரி மண்டலம் சார்ந்த பாதுகாப்பின்றி சூரிய ஒளியால் கருகிப் போகாமலிருக்க உதவும் என்று ஆய்ந்தறிந்து அந்தப்பக்கம் சென்றடைந்தது இன்னும் பெரிய ஆச்சரியம். திட்டமிட்டபடி சந்திரனிலிருந்து மனிதன் பூமிக்குத் திரும்பியும் விட்டான். இந்த அறிவின் அடிப்படையில் சந்திரன் எப்பொழுது அடிவானத்திற்கு மேலெழும் என்பதைத் துல்லியமாக மனிதனால் கணக்கிட இயலும். இந்தக் காட்சி, மறையும் சூரிய வெளிச்சத்தால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் என்ற வாதம் எழலாம். ஆனால், பிறை கண்ணுக்குத் தெரிவதற்கு முன் எத்தனை விநாடிகள் அடிவானத்தில் தங்கி இருக்கிறது என்பதும் அறிவியல் ரீதியாக நிர்ணயிக்கப்படக் கூடியதே. ஒரு நாளில் இந்தக் கால இடைவெளியில் பிறை தெரியாவிட்டால் மறுநாள் அது அடிவானத்திற்கு மேல் எழும்போது நிச்சயமாகத் தெரியும். இந்த இரு நிலைகளில் ஒன்றை பிறை கண்ணுக்குத் தெரியும். இந்த இருநிலைகளில் ஒன்றை முன் திட்டவட்டமாகக் கணக்கிட முடியும். அறிவியல் வழியில் கணக்கிடப்படும் இந்த இருநிலைகளில் ஒன்றை விதிமுறையாக ஏற்று உலகமெங்கும் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் நோன்பு நோற்பதற்கும் ஈத் பெருநாளாகக் கொண்டாடுவதற்கும் உரிய நாட்களை முன் கூட்டியே தீர்மானித்து விடலாம். உலகமெங்கும் சந்திரன் ஒரே நேரத்தில் தென்படுவதில்லை. உலகில் சந்திரனுக்கு பல்வேறு மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் பிறையை ஒரே நேரத்தில் காணவியலாது.

இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து உருவாகாமல் வெவ்வேறு நாட்களில் நோன்பை ஆரம்பிப்பதும் வெவ்வேறு நாட்களில் நோன்பை முடிப்பதுமாக இருந்தால், இந்த இரு பிரிவாருமே நேரான வழியில் இருப்பதாகக் கூற முடியாது. ஒரு சாராருடைய செயல் சரியாக இருந்தால் மற்றவருடைய செயல் சரியாக இருக்க முடியாது. பிறை விஷயத்தில் தன்னுடைய உம்மத்தினர் ஒன்றிணைந்து தீர்மானித்தால் அதன்படி நடக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் அனுமதித்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது. நல்ல நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல் தீமையானதாக முடிந்தாலும் அது மன்னிக்கப்படக் கூடியதே. எடுத்துக்காட்டாக நோன்பு நோற்றிருக்கும் போது ஒருவர் மறதியாக உணவருந்தி விட்டாலோ நீர் பருகிவிட்டாலோ நோன்பு முறியாது. எண்ணம் (நிய்யத்) செயலை விட முக்கியமானது. “அல்அஃமால் பின் நிய்யத்” என்பது நபிமொழி. செயல்கள் யாவும் எண்ணும் எனும் உரை கல்லில் உரசப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தமிழாக்கியோனின் பின்குறிப்பு:

1. “சீனா சென்றேனும் அறிவைத் தேடு” என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை என்றும் அது பண்டைய அரபு நாட்டில் பரவலாக அறியப்பட்டிருந்த ஒரு முதுமொழி என்றும் கூறப்படுகிறது.

2. புகாரி (3:130) யில் பதிவு செய்யப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட நபிமொழி முஸ்லிம், நஸயி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தாரமி, மற்றும் ஸஹீஹ் இப்னு குஜைய்மா ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலே தரப்பட்ட அரபி மூலத்திற்கு கீழ் வருமாறு ஆங்கிலத்தில் பொருள் தரப்படுகிறது.

Do not start fasting unless you sight the new moon and do not cease fasting unless you sight the new moon. And if anything overcasts then use discretion and reasoning.”

The most significant phrase here is “use discretion or reasoning, if there is anything overcasts”.

The word uqduru is derived qadar and which means 1) to estimate; (2) a thing similar to another (3) to bestow power or authority (4) to contemplate about the correctnes or validity of something; (5) to arrive at the conclusion through signs and indications (6) destiny and fate assigned by God. ( Lisanul Arab V.5.pp 74-75)

(from Moon sighting & astronomical Calculations by Mohammed Shihabuddin Nadir; Furqan Academy Trust, Bangalore)

தமிழாக்கம் :

“பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்; பிறையைப் பார்க்காமல் நோன்பை முடித்துவிட வேண்டாம். ஏதாவது தடையாயிருந்தால் உங்கள் அறிவையும் விவேகத்தையும் பிரயோகிக்கவும்.”

இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, “ஏதாவது தடையாக இருந்தால் உங்கள்ள அறிவையும் விவேகத்தையும் பிரயோகிக்கவும்” என்பதுதான்.

“அக்தரு” எனும் “கத்ர்” மற்றும் “தக்தீர்” சொற்களிலிருந்து பிறந்ததாகும். அதன் பொருள் 1) கணக்கிடு (மதிப்பிடு); (2) வேறொன்றோடு ஒத்திருக்கும் ஒரு பொருள் (3) அதிகாரமோ ஆதிக்கமோ வழங்குதல் (4) ஏதேனும் ஒன்றின் நேர்மை அல்லது செல்லக்கூடிய தன்மை பற்றிச் சிந்தித்தல் (5) குறிப்புகள் மற்றும் அடையாளங்கள் மூலம் முடிவு காணல் (6) அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட விதி அல்லது முடிவு.

“ஏக உம்மத்” என்றும் “நடுநிலை உம்மத்” என்றும் வர்ணிக்கப்படும் முஸ்லிம்கள் பல்வேறு அம்சங்களில் பல்வேறு காரணங்களுக்காகப் பிரிவுபட்டு, தமக்குள் சண்டைச் சச்சரவுகளில் ஈடுபட்டு முஸ்லிம் சமுதாயத்தையே இழிவுக்கும் அவப்பெயருக்கும் ஆளாக்கி வருகின்றனர். பதவி, அதிகாரம், பெயரும் புகழும் என பல ஆசாபாசங்களுக்கு ஆளாகி இந்தப் பிரிவினையை தாங்கள் அறிந்தோ அறியாமலோ ஊக்குவித்து வருகிறார்கள். ஆனால் இந்தப் பிறை விவகாரம் பதவியையும் அதிகாரத்தையும் தேடித்தரவல்லதல்ல. அல்லாஹ் எந்த நோக்கத்திற்காக சூரியனையும் சந்திரனையும் படைத்து அவற்றை வரையறைக்குள் நகர்ந்து செல்ல விதித்தானோ அந்த நோக்கத்திற்காக அவற்றின் சஞ்சாரத்தைக் கணக்கிட்டு அவற்றையே நமக்கு நாளையும், கிழமையும், மாதத்தையும், ஆண்டையும் அறிய மேற்கொள்ளும் முயற்சிதான் இது. இதிலேனும் ஒன்றுபட்டு ஒரே நாளில் நோன்பு நோற்பதைத் தொடங்கி ஒரே நாளில் முடித்து, ஈத் பெருநாளையும் முஸ்லிம்கள் ஒரே நாளில் கொண்டாட முயல்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக