அபூ அப்தில்லாஹ், அந்நஜாத், ஆசிரியர்.
உலகெங்கும் ஒரே நாளில் பெருநாளா? என்ற தலைப்பிட்டு பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா பேரவை ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளது. சென்ற வருடமும் இதே போன்று ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருந்தது. இரண்டு பிரசுரங்களிலும் மனாருல் ஹுதா பிப்ரவரி 2005 -ல் வெளியான கருத்துக்களே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் ஊருக்கு ஊர் தனித்தனி தலைப்பிறை என்ற, இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லாத அபத்தக் கருத்தினால் ஏற்படும் ஐயங்கள் குறித்து அந்நஜாத் ஏப்ரல் 2005 இதழில் கேள்விகள் பல எழுப்பி இருந்தோம். எமது கேள்விகளுக்கு TNTJ தவ்ஹீது மவ்லவிகளோ, மனாருல் ஹுதா இதழோ, ஸுன்னத் பல் ஜமாஅத் மவ்லவிகளோ இன்றுவரை பதில் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அந்நஜாத் இதழிலும் (அக்டோபர் 2007) அதே கேள்விகளை மீண்டும் தொடுத்துள்ளோம். அவர்கள் தங்கள் கருத்தில் உண்மையாளர்கள் என்றால் அந்த கேள்விகளுக்கு முறையான பதிலை தரட்டும்.
அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாதவர்கள், கீரல் விழுந்த இசைத் தட்டுப் போல், அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது அவர்களின் கையாலாகாத, வக்கற்ற நிலையையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அவர்களது பிரசுரங்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் இன்றைய கணினி கணக்கீட்டின் மூலம் சந்திரனின் ஓட்டத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டு மாதத்தின் துவக்கத்தையும், சூரிய , சந்திர கிரஹணங்கள் நிகழும் நாட்களையும் முன்கூட்டியே மிகச் சரியாக சொல்லிவிட முடியும் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்கின்றன. 1428 ஆண்டுகளுக்கு முன்னர் அறிய முடியாதிருந்த சந்திரன் கிடக்கில் உதிக்கும் நேரத்தையும், மேற்கில் மறையும் நேரத்தையும் மிகத் துல்லியமாக அறிய முடியும் என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே சூரியன் மறைவதற்கு முன்னால், அல்லது மறைந்து 10,15,20,30 நிமிடங்களுக்குப் பின்னர் சந்திரன் மறைகிறது. அதனால் கண்ணுக்குத் தெரியவதில்லை. சூரியன் மறைந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பின் சந்திரன் மறைந்தால் தான் கண்ணுக்குத் தெரியும். அந்த கண்ணுக்குத் தெரியும் பிறையையே தலைப்பிறையாகக் கொள்ள வேண்டும் என்பதே இந்த தவ்ஹீத், முகல்லிது மவ்லவிகளின் வாதம். அதுவும் வெற்றுக் கண்ணுக்குத் தெரிந்தாக வேண்டும். தூரதரிசினி (Telescope) மூலம் பாாத்தும் முடிவு செய்யக் கூடாது என்று அடம் பிடிக்கின்றனர்.
அல்லாஹ் அல்குர்ஆனில் 2:185 ல் “எவர் ரமழான் மாதத்தின் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்றும், நபி(ஸல்) அவர்கள் “அதை(பிறையை) புறக்கண்ணால் கண்டு நோன்பு நோற்கட்டும்; அதைக் கண்டு நோன்பை துறக்கட்டும்” என்று சொல்லியிருப்பது போல் கற்பனை செய்து கொண்டு வீண் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
ஆனால் அப்படி சொல்லப்படவில்லை. “எவர் ரமழான் மாதத்தை அடைகிறாரோ” என்று அல்குர்ஆன் 2:185லும் “அதை (கண்ணால், ஆய்வால், தகவலால், கணிப்பால், கணக்கீட்டால் எது சாத்தியமோ அதன் மூலம்) பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள்; அதைப் பார்த்து நோன்பை துறங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பதையே காண முடிகிறது. ருஃயத், அரா, தரா, போன்ற அரபி பதங்கள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள, அத்தனைப் பொருட்களையும் உள்ள்டக்கிய சொற்கள் என்பதற்கு அல்குர்ஆனிலேயே ஆதாரங்கள் பல இருக்கின்றன. (பார்க்க 105:1, 37:102, 2:243,246,258,260, 3:13,23, 4:44,49,51,60,77, 14:19,24,28, 19:83, 22:18,63,65, 24:41,43, 25:45, 26:225….)
இவ்வளவு தெளிவான ஆதாரங்களுக்குப் பிறகும் நபி(ஸல்) அன்று பிறையை கண்ணால் பார்த்தே முடிவு செய்தார்கள். அதே போல் இன்றும் நாம் கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர். அன்று பிறையை மட்டுமா கண்ணால் பாாத்து முடிவு செய்தார்கள்? சூரியனையும் கண்ணால் பார்த்தே தொழுகை நேரங்களை முடிவு செய்தார்கள். இறப்புச் செய்தியை ஆட்கள் நேரில் வந்து சொன்ன பிறகே காலம் தாழ்ந்து மனைவி “இத்தா” இருக்கும் நிலை இருந்தது. உடன் தகவல் கிடைக்க அன்று வசதி இல்லை. நபி(ஸல்) அவர்கள் அன்று அல்லாஹ் 22:27-ல் கூறி இருப்பது போல் ஒட்டகத்தில் தான் ஹஜ்ஜுக்குப் போனார்கள். அதுபோல் இன்று நீங்கள் தொழுகை விஷயத்தில், இத்தா விஷயத்தில், ஹஜ்ஜுக்குப் போகும் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியது போல் எவ்வித மாற்றமும் இல்லாமல் செய்கிறீர்களா? என்று கேட்டால் அதற்கு முறையான பதில் இல்லை. இவற்றில் எல்லாம் அவர்களின் கருத்துப்படி நபி வழியைப் புறக்கணித்துவிட்டு இன்றைய நவீன கண்டு பிடிப்புகளான கடிகாரம், தகவல் தொடர்பு, நவீன வாகனங்கள் இவற்றை ஏற்று நடைமுறைப் படுத்துகிறவர்கள். பிறை விஷயத்தில் மட்டும் நவீன கணினி கணக்கீட்டை ஏற்க மறுக்கும் காரணம் என்ன? கழுதை உழவுக்கு வந்தாலும் மவ்லவிகள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்கள் உண்மைப் படுத்துகிறார்களா?
முதன்முதலாக கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டு, சூரியனைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுவதற்குப் பதிலாக, கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழ ஆரம்பிக்கும் போதும் இந்த மவ்லவிகள் இப்படித்தான் விதண்டாவாதம் செய்தனர். அவர்கள் திருந்தவில்லை. காலம் தான் அவர்களைத் திருத்தியது. இப்போது ஒவ்வொரு பள்ளிகளிலும் தொழுகை நேர அட்டவணை தொங்குவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதே போல் இன்னும் சில ஆண்டுகளில் ஹிஜ்ரி ஆண்டு கணக்கும் ரமழான், ஷவ்வால், ஹஜ் முதல் அனைத்து மாதங்களும் ஆரம்பிக்கும் சரியான அட்டவணை பள்ளிகளில் தொங்குவதைப் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ் அப்போது, இப்போது நேரம் அறிய சூரியனைப் பார்ப்பதை மறந்துவிட்டது போல், மாதத்தை அறிய பிறையைப் பார்ப்பதையும் மறந்து விடுவார்கள்.
பிறை கிழக்கில் தெரிந்துவிட்டால் மேற்கில் ஏற்றுக் கொள்ளலாம் என்று அக்காலத்திலேயே பிக்ஃஹு நூற்களில் எழுதப்பட்டிருப்பது மிகச் சரியானதே! விஞ்ஞானமும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறது என்று கூறுகிறவர்கள், அதாவது பிறை வானில் இருப்பது உறுதி என அதை தங்கள் கண்களால் பார்க்காமல் ஏற்பவர்கள், அதே போல் கணினி கணக்கீட்டின் மூலம் பிறை வானில் இருப்பது அதைவிட உறுதியானது என்ற நிலையில் அதைத் தங்கள் கண்ணால் பார்க்காமல் ஏற்பதில் என்ன தவறு? அவர்களுக்கு அவர்களே முரணா?
பிறையை கண்ணால் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்றுஅடம் பிடிக்கிறவர்கள், அப்படி கண்ணால் பார்ப்பதை நேரடியாகக் குறிப்பிடும் “ஐன்”(பார்க்க 3:13) என்ற அரபி பதம் இடம் பேற்ற ஒரேயோரு ஆதாரபூர்வமான ஹதீஸ் அல்ல, பலகீனமான ஹதீஸை கூட இந்த தவ்ஹீத், தக்லீத் மவ்லவிகளால் காட்ட முடியாது. மெலிந்த ஒட்டகம் என்று நேரடியாகக் குறிப்பிட்டுள்ள 22:27 அல்குர்ஆன் ஆயத்தைப் புறக்கணித்துவிட்டு, விமானங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லும் இந்த மவ்லவிகள், கண்ணால் பார்ப்பதை நேரடியாகக் குறிப்பிடாத – பொதுவாக “பார்த்து” – “கண்டு” என்று வரும் ஹதீஸ்களைக் காட்டி கண்ணால் பார்ப்பது மட்டுமே என்று விதண்டாவாதம் செய்கிறவர்கள் எந்த அளவு அறியாமையிலும் மடமையிலும் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
உடனே, அன்று நபி(ஸல்) அவர்கள் கண்ணால் பார்ப்பதை ஏற்றுத் தானே முடிவு செய்தார்கள் என்று அசடு வழிவார்கள்.
அன்று, இன்றைய கணினி கணக்கீடுகளை எல்லாம் தெரிந்து கொண்டா? எப்போது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர் கோட்டுக்கு வருகிறது? சந்திரன் காலை இத்தனை மணிக்கு உதித்து மாலை இத்தனை கணிக்கு மறைகிறது? சூரியன் மறைவதற்கு முன் சந்திரன் மறைகிறது; சூரியன் மறைந்து 48 நிமிடங்களுக்குப் பின் சந்திரன் மறைகிறது; அதனால் கண்ணுக்குத் தெரியும் என்பது போன்ற இந்த விபரங்கள் எல்லாம் அறிந்த நிலையிலா நபி(ஸல்) அவர்கள் பிறையை கண்ணால் பாாக்கச் சொன்னார்கள்! இல்லையே? “லா நக்புது” – இந்த கணக்கீடுகள் எல்லாம் நமக்குத் தெரியாது; அதனால் கண்ணால் பார்த்து, கைகளால் கண்ணி முடிவு செய்கிறோம் என்றல்லவா கூறி இருக்கிறார்கள். இதிலிருந்தே கணக்கீடுகள் துல்லியமாகத் தெரிந்தால் அதன்படி நடக்கலாம் என்று நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதே! அதை ஏற்க மறுப்பது நபி(ஸல்) அவர்களை மறுப்பதாக இல்லையா?
கண்ணால் பார்ப்பதை நிலைநாட்ட மேகமூட்டமாக இருந்தால் 30 ஆகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற ஹதீஸின் பகுதியையும், பிறையைப் பார்த்தால் இந்த துஆவை ஓதுங்கள் என்ற ஹதீஸையும் ஆதாரமாகத் தருகிறார்கள்! கண்ணாடியைப் பார்க்கும்போது துஆ ஓத கற்றுத் தந்துள்ளார்கள், சேவல் கூவுவதைக் கேட்டால் துஆ ஓதக் கற்றுத் தந்துள்ளார்கள் நபி(ஸல்) அவர்கள். அதனால் கண்ணாடியைப் பார்த்தே ஆக வேண்டும். சேவல் கூவுவதை கேட்டே ஆக வேண்டும் என்று இந்த மவ்லவிகள் விதண்டாவாதம் ெசய்கிறார்களா? இல்லையா!
இந்த பிறை விஷயத்தில் மட்டும் ஏன் இந்த பிடிவாதம்? பிறையைப் பார்ப்பது ஃபர்ழா? வாஜிபா? சுன்னத்தா? எதுவும் இல்லையே. மாதம் பிறப்பதை அறிந்து கொள்ள அன்றிருந்த ஒரே வழி மட்டும்தானே? நபி(ஸல்) பிறையை பார்க்க முயற்சித்ததுமில்லை; தம் மனைவிகளையோ, நபி தோழர்களையோ பார்க்கத் தூண்டியதுமில்லையே! அன்று கூட தகவலை ஏற்று முடிவு செய்ததாகத்தானே ஹதீஸ்களில் காணப்படுகிறது.
அன்று மாதம் பிறந்ததை அறிந்து கொள்ள மட்டுமே பிறை பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள் என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதே!
இந்த நிலையில் ரமழான் ஆரம்பித்துவிட்டது என்பதை கணினி கணக்கீட்டின் மூலம் துல்லியமாக அறிந்த பின்னர் 2:185-ன் படி கடமையான ஒரு நோன்பை விட்டு பின்னர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் புறக்கணிப்பவர்கள் யாராக இருக்க முடியும்? ஷவ்வால் பிறை பிறந்துவிட்டது என்பதைத் துல்லியமாக அறிந்த பின்னரும், பிறையை கண்ணால் பாாக்க வேண்டும் என்று அடம் பிடித்து ஷவ்வால் 1-ல் நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட நாளில் நோன்பு நோற்பவர்கள் யாராக இருக்க முடியும்? இன்றைய கணினி கணக்கீட்டின் மூலம் மிகத் துல்லியமாக மாதம் பிறந்து விட்டதை அறிந்து கொள்ளும் நிலையில், இந்த வசதி இல்லாத அந்தக் காலத்தில் பிறையை கண்ணால் பாாத்து மடீவு செய்ததைக் காட்டி, கடமையே இல்லாத பிறையை கண்ணால் பார்ப்பதை ஃபர்ழைப் போல் கடமையாக்கி, ரமழான் ஆரம்பத்தில் கடமையான நோன்பை விடச் செய்பவர்களும், ஷவ்வால் முதல் நாளில் ஹராமான முறையில் நோன்பை நோற்கச் செய்பவர்களும் ஷைத்தானின் தோழர்களா? இல்லையா? நேர்வழியை கோணல் வழி ஆக்குகிறவர்களா? இல்லையா?
அன்று கணினி கணக்கீட்டு முறையோ, தகவல் தொடர்போ இல்லாத காலத்தில், மக்காவில் சனிக்கிழமை பெருநாள் கொண்டாடியதையும், மதீனாவில் ஞாயிறு பெருநாள் கொண்டாடியதையும் எழுதி நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த பின்னர் அவர்களை ஆட்சேபிக்கவில்லை என்பதை பெரிய ஆதாரமாகக் காட்டி, வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடுவதற்கு இன்றும் அனுமதி இருக்கிறது என்று எழுதியுள்ளனர். இவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது? விவரம் கெட்டவர்கள் என்பதா? விவரத்தோடு மக்களை வழிகெடுக்கிறார்கள் என்பதா? இன்று மக்காவிலும் மதீனாவிலும் அவரவர்கள் பிறை பார்த்து வெவ்வேறு நாட்களிலா பெருநாள் கொண்டாடுகிறார்கள்? நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முரணாக இன்று அரபு நாடுகள் அனைத்தும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுகிறார்கள் என்பது இவர்கள் அறியாததா? அல்லது அன்று நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து கொண்டு இன்றிருப்பது போல் அங்கு பிறை பார்த்ததை தந்தி மூலம் அல்லது தொலைபேசி மூலம் அறிவித்து அதை மதீனாவாசிகள் ஏற்று நடக்கவில்லையா? அல்லது மக்காவில் பெருநாள் தொழுகை நடப்பதை இன்றுபோல் அன்று தொலைக்காட்சியில் பாாத்தும் அதைப் புறக்கணித்துவிட்டு ஞாயிறன்று பெருநாள் கொண்டாடினார்களா? அன்று நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிப்பதற்கு என்ன முகாந்திரம் இருந்தது? இந்த சாதாரண அற்ப அறிவும் இந்த மவ்லவிகளுக்கு இல்லை என்றால் இவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? மக்களே முடிவு செய்யுங்கள்.
ஒரே நாளில் 24 மணி நேரத்திற்குள் இடம்பெறும் ஐங்கால தொழுகைகளையும், சூரிய, சந்திர கிரஹண தொழுகைகளையும், நோன்பு நோற்பதையும், துறப்பதையும் ஒரு மாதம் 24 30=720 மணி நேரத்திலுள்ள பிறை ஒருமாத காலத்தை ஒப்பிட்டு, இங்கு பஜ்ர் தொழுதால் அங்கு பஜ்ர் தொழுவார்களா? இங்கு நோன்பு நோற்க ஆரம்பித்தால் அங்கும் நோன்பு நோற்க ஆரம்பிப்பார்களா? இங்கு கிரஹண தொழுகை தொழுதால் அங்கும் தொழுவார்களா? என்று கேட்டு மக்களை குழப்பும் TNTJ தவ்ஹீத் மவ்லவியை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? உலகைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத அறிவிலி என்ற முடிவுக்கே ஐந்தாம் வகுப்பு மாணவனும் வருவான். பாவம்! இந்த மவ்லவிகளைக் குற்றம் சொல்லி பயனில்லை. இவர்களுக்கு மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படும் “தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற நூலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மூடக் கருத்தான பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றே இன்றும் போதிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிகெட்டு நூலைப் படித்து எழுதி பட்டம் வாங்கி வரும் இந்த மவ்லவிகளுக்கு கோளங்களின் சரியான அறிவு எங்கே இருக்கப் போகிறது? பாவம் அவர்கள்.
ஆனால் அந்த வழிகேட்டுப் போதனைகளை மக்களிடம் திணிக்க முங்படுவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அறிந்து கொள்ளட்டும். ஒரு நாளின் 24 மணி நேரமும், எல்லா இடங்களிலும் தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. முறையான ஒரு கருவி மூலம் பாங்கு சொல்லப்படுவதை கேட்டால், உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயம் ஐந்து நேர தொழுகைகளின் பாங்கை கேட்க முடியும். பாங்கும், தொழுகைகளும் இல்லாத நேரமே இருக்காது.
உலகின் கீழ்க்கோடியில் தேதிக் கோட்டுக்கு சமீபமாக இருக்கும் ஒரு நாட்டில் வெள்ளி ஜும்ஆ நடக்கும் அதே நேரத்தில் மேல்க் கோடியில் ேததிக் கோட்டுக்கு சமீபமாக இருக்கும் ஒரு நாட்டில் வியாழன் ழுஹர் நடக்கும். இந்த மேல்க்கோடியில் இருப்பவர்கள் அடுத்த 24 மணி அவசாகத்தில் ஒரு டிகிரிக்கு 4 நிமிடங்கள் என்ற கணக்கில் உலகின் அனைத்து நாடுகளும் முறையாக வெள்ளி ஜும்ஆவை அடைந்து தொழுது முடித்து விடுவார்கள். மற்றபடி ஜும்ஆ வியாழன், வெள்ளி, சனி என்றோ ஒருபோதும் வராது. ஒரு நாள், ஒரு பிறை, ஒரு கிழமை 24 மணி அவகாசத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்டு முடிந்துவிடும் என்ற சாதாரண அறிவு கூட இந்த மவ்லவிகளுக்கு இல்லை என்பது தான் வேதனையிலும், வேதனையாகும். அதனால் தான் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் (தவ்ஹீது மவ்லவி அறியாமல் சொல்வது போல் ஒரே நேரத்தில் அல்ல) ஜும்ஆ தொழுகையை தொழுது முடித்து விடுவார்கள் என்பதை விளங்கும் மவ்லவிகளும், பெருநாள் தொழுகை, நோன்பு ஆரம்பம், முடிவு இவையும் ஒரு நாள் 24 மணி நேரத்திற்குள் வந்துவிட வேண்டும் என்பதை அறியாமல் தடுமாறுகிறார்கள். நாளை குறிப்பிடும் பிறையானது, தேதி, கிழமை போல் ஒரு நாளுக்குள் கட்டுப்பட்டதே, இரண்டு நாள், மூன்று நாள் ஒரு போதும் வரமுடியாது என்ற சாதாரண அறிவும் இல்லாமல் தடுமாறுகிறார்கள்.
இந்த விளக்கம் இல்லாததால், வான் கணித ஆய்வாளர் என்று பீற்றிக் கொள்ளும் ஒருவர் மேற்படி பிரசுரத்தில் கிறி}துமஸ் ஒரே நாளில் வர முடியாது என பிதற்றி இருக்கிறார்.
இன்னொரு பெருந்தவறையும் இந்த தவ்ஹீத், தக்லீத் மவ்லவிகள் செய்து வருகிறார்கள். நீண்ட காலமாக பிற சமுதாய மக்களிடமும், சில முஸ்லிம்களிடமும் காணப்படும் நுஜும் கணக்கு என்று முஸ்லிம்களிடமும் ஒன்றாக நினைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள். அந்த அடிப்படையில்தான் இந்த பிரசுரத்திலும் “எனவே தலைப்பிறையை வான்கணிதத்தை மட்டும் வைத்து கணக்கிடுவது கூடாது; ஏனெனில், கணிதத்தின் பொது விதிகள் சரியாக இருந்த போதிலும் அது பொருந்துகின்ற முறையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனனவே தான் வான் கணிதத்தை மட்டும் ஆதாரமாக கொண்டு தலைப்பிறையை நிர்ணயிக்கக் கூடாது என்று” “பிக்ஹு” நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (பிரசுரம் பக்கம் 7) என்று எழுதி இருக்கிறார்கள்.
இவர்களது முன்னோர்கள் பிக்ஹ் சட்டங்களை வகுத்து எழுதும்போது கணினி கணக்கீட்டு முறையே கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை. அப்படியானால் அவர்கள் அதைப் பற்றி எப்படி எழுதி இருக்க முடியும்? இந்த சாதாரண அறிவும் இந்த மவ்லவிகளுக்கு இல்லை. முன்னரே இருந்து வரும் நுஜும் கணக்கு, பஞ்சாங்கம் போன்ற கணிப்பீடு முறை வேறு; தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள கணினி கணக்கீடு வேறு என்பதை இந்த மவ்லவிகள் அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒர மாமரத்தில் மாம்பழங்கள் மரத்தில் இருக்கும் நிலையில் தோராயமாக கணக்கிட்டுச் சொல்வது போன்றதுதான் நுஜும், பஞ்சாங்க கணக்கீட்டு முறையாகும். அதனால் தான் பல ஆண்டுகள் கழித்து இடம் பெறும் சூரிய, சந்திர கிரஹணங்களை இன்றே கச்சிதமாக கணக்கிட்டு அறிவிப்பது ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் கணக்கிட்டபடி இடம் பெறுகின்றது. இதுவே கணினி கணிப்பீட்டின் துல்லிய கணக்கீட்டை அறிந்து கொள்ள போதிய ஆதாரமாகும். எனவே இந்த மவ்லவிகள் பிக்ஹு நூல்களில் காணப்படும் நுஜும், மற்றும் பஞ்சாங்க கணிப்புகளை இந்த கணினி கணக்கீட்டோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். சந்திரன் தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் அது புறப்பட்ட அந்த நேர்கோட்டுக்கு வர 29.53059 நாட்கள் பிடிக்கின்றன என்ற கணக்கீட்டின்படியே இந்த கணினி கணக்கீடுகள் இடம் பெறுகின்றன என்பதை அறியவும்.
தலைப்பிறையை புறக்கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும் என்று கண்ணைக் குறிக்கும் “ஐன்” என்ற பதம் இடம் பெறும் ஒரேயொரு ஹதீஸும் இல்லாத நிலையில், பிறையை கண்ணால் பார்ப்பது அதாவது கணினி கணக்கீடு போன்ற விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் மாதம் பிறந்ததை அறிய இருந்த ஒரே வழியான பிறையை கண்ணால் பார்ப்பதைத் தவிர அது ஃபர்ழோ, வாஜிபோ, சுன்னத்தோ அல்லாத ஒரு செயலை ஃபர்ழைவிட முக்கியமான ஒரு செயலாகக் கருதி, ஃபர்ழான ஆரம்ப நோன்புகளை பிடிக்காமல் கோட்டை விட்டு சமுதாயத்தை குற்றவாளிகள் ஆக்குவதையும், ஷவ்வால் தலைப்பிறையன்று நோன்பு நோற்பது ஹராம் என்ற நிலையில் அன்று சமுதாயத்தை நோன்பு நோற்க வைத்து அவர்களை குற்றவாளிகள் ஆக்குவதையும் இந்த தவ்ஹீது, தக்லீது மவ்லவிகள் கைவிடுவார்களாக.
இல்லை என்றால் இந்த தவ்ஹீது, தக்லீது மவ்லவிகள் மார்க்கத்தை மதமாக்கி, தொண்டை தொழிலாக்கி, கேவலம் அற்ப இவ்வுலக வாழ்க்கைக்காக நேர்வழியை கோணல் வழிகளாக்கி மக்களை வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறார்கள் என்ற எமது குற்றச்சாட்டு மேலும் வலுவாகின்றது என்பதை அவர்களும் மறுக்க முடியாது. அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்ட – சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் விளங்கி சத்தியத்தை ஏற்றும், அசத்தியத்தைப் புறக்கணித்தும் நடக்க அருள்புரிவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக